திருச்சி ஐயப்பன் கோவில்

திருச்சியில் வித்தியாசமான ஐயப்பன் கோவில்

திருச்சிராப்பள்ளி என்றதுமே நம் நினைவிற்கு வருவது உச்சிப்பிள்ளையார் கோயில்தான்!

புகழ் வாய்ந்த தேவாலயங்கள், தர்காகள், சரித்திரப் பிரசித்தி பெற்ற கோயில்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட நகரம் திருச்சி.

பொதுவாக ‘கோயில் என்றாலே அது தூய்மையின் இருப்பிடம்’ என்பது அனைவருக்குமே தெரியும்.

அதை மெய்ப்பிக்கும் வகையில், வேறு எந்த கோயிலுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன், திருச்சி கண்டோன்ட்மெண்ட் பகுதியில் லாசன்ஸ் சாலையில் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படுவதுதான் ஸ்ரீஐயப்பன் கோயில்.

‘திருச்சிராப்பள்ளி ஸ்ரீஐயப்ப சங்கம்’ என்னும் தனியார் அமைப்பினரால் அதிசயிக்கத்தக்க வகையில் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது!

கோயிலின் உள்ளே நுழையுமுன், முகப்பு வாயில் காணப்படுகிற ஓர் வாசகம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

‘எந்த நாட்டினரும், எந்த மதத்தினரும், எந்த ஜாதியினரும், எந்த இனத்தினரும் வந்து தரிசிக்கலாம்!’

கோயில் வளாகத்திற்குள் நுழையுமுன், மதில் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் மேலும் சில வாசகங்கள் நேருக்குநேராய் நம்மைப் பார்த்து அழைத்துக் கூறுவது போல் நம் கண்களில் படுகின்றன!

‘புகைப் பிடிக்க வேண்டாமே இங்கு! முடிந்தால் எங்குமே!

‘வாகனங்களை நிறுத்திவதிலும் ஓர் ஒழுங்கை கடைப்பிடிக்கலாமே!’

கோயில் வளாகத்தினுள் காலடி எடுத்து வைத்தால் இடதுபுறம்

‘உங்கள் காலனிகளை இங்கு இலவசமாக விட்டுச் செல்லலாமே!’ என்றும்

வலதுபுறம்

‘கை, கால்களை குழாயடியில் சுத்தம் செய்துவிட்டு கோயிலுக்குள் நுழையலாமே!’

என்பன போன்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

கோயிலுக்குத்தான் வந்திருக்கிறோமா… இல்லை ஏதாவது பூங்காவில் நின்று கொண்டிருக்கிறோமா என எண்ணும் அளவுக்கு மனங்கவரும் வகையில் பூத்துக் குலுங்கும் பூச்செடிகள்! பட்டு மெத்தையென நம் கால்களுக்கு சுகம் தரும் புல் தரைகள்!!

‘பூக்களை அப்படியே விட்டு விடுங்கள். சிரிக்கட்டும் அவைகள் செடியிலேயே!’

‘அருகம்புல்லைக்கூட அனுமதியுடன் பறிக்கலாமே!’

என்பன போன்ற நளிமான, நயமான, நாசூக்கான வேண்டுகோள்கள் ஆங்காங்கே!

கோயில் வளாகத்தினுள் தட்டெழுத்துப் பயிற்சி நிலையம் ஒன்றும், கணிப்பொறி பயிற்சி நிலையம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றன.

வசதியற்ற ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக தட்டெழுத்துப் பயிற்சி அளிக்கிறது நிர்வாகம்.

வேலையில்லாத இளைஞர்கள், பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் கணிப்பொறி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீஐயப்பனுக்கு உகந்த அனைத்துப் பூஜைப் பொருட்களும் வளாகத்தினுள்ளேயே கிடைக்கின்றன.

வளாகத்தின் நடுவே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஸ்ரீஐயப்ப சுவாமி கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

சுற்றிலும் விநாயகர், நாகராஜர், ஸ்ரீபகவதி அம்மன், நவக்கிரகங்கள் என சந்நிதிகள்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதமுறைகளை விலாவாரியாக எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பூஜைப்பொருட்களும் கோயிலிலேயே கிடைக்கின்றன.

கொடிமரம் தாண்டி ஸ்ரீஐயப்பன் சந்தியாகவும் உள்ளே சென்றால், ஆண்களும் பெண்களும் நின்று தரிசிக்க கிரீல் கம்பிகளால் முறைப்படுத்தப்பட்ட தனித்தனி இடங்கள்.

அங்கே ‘இங்கே அர்ச்சகர்கள் எவ்வித அன்பளிப்பையும் வாங்குவதில்லை. எனவே, தீபாராதனை தட்டில் நாணயங்கள், காசுகள் போட வேண்டாமே!’ என்றொரு ஆச்சரியமான அறிவிப்பும் காணப்படுகிறது!

அபிஷேக விபூதி, சந்தனம் வழங்குவதெற்கென தனித்தனி இடங்கள் வரிசையாகச் சென்று வாங்கிக் கொள்கிறவாறு மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கோயிலின் அலுவலகத்திற்கு எதிரே இரண்டு, மூன்று சந்தன கற்கள். சிலர் அவற்றில் சந்தனம் அரைத்துக் கொண்டிருந்தார்கள்.

அருகில் சென்று பார்த்தால்,

‘பக்தர்கள் ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு சார்த்த சந்தனம் அரைத்துக் கொடுக்கலாமே! தயவுசெய்து இந்த சந்தனத்தை திலகத்திற்கு உபயோகிக்க வேண்டாமே!!’

என்ற வாசகங்கள் சந்தனம் அரைக்க நம்மை வரவேற்கின்றன.

இந்தியாவின் முக்கிய புண்ணிய நதிக்கரைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களைக் காட்சிப் பொருட்களாக வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் ‘உத்திரம்’ நட்சத்திரத்தில் ஐயாயிரம் பேருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

மேலும் இக்கோயிலில் ரத்ததானம், கண்தானம் ஆகியவைகளுக்காக வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன.

18 வயதிலிருந்து 55 வயதுவரை எந்த ஆரோக்கியமான நபரும் ரத்ததானம் செய்ய வங்கியில் உறுப்பினராகச் சேரலாம்.

‘இவ்வுலகைவிட்டுச் செல்லும்போது எதையுமே எடுத்துச் செல்லாத நாம், நம் கண்களை இங்கு தானமாக விட்டுச் செல்லலாமே!’

என்னும் வேண்டுகோளை கண்தான வங்கி விடுக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 ஆகிய நாட்களில் இக்கோயில் உறுப்பினர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.

‘கல்வி தான் மையம்’ என்றதோர் அமைப்பும் இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. பக்தகோடிகள் வழங்கும் நன்கொடையை நிரத்தர வைப்புநிதியாக வங்கியில் போட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வசயில்லாத ஏழை-எளிய மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள், உடைகள் வாங்க வழங்குகின்றனர்.

குறைந்தபட்ச நன்கொடை ரூபாய் ஆயிரம் என நிர்ணயித்து இருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் இந்த அமைப்பு மூலம் சுமார் ஒரு இலட்சத்து முப்பத்து ஒன்பதாயிரம் ரூபாய் நிரத்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருக்கிறதாம்.

கோடைகாலத்தில் பக்கதர்களின் நலன் கருதி கோயில் வளாகத்தில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் பல மண்பானைகளில் மோர், துளசி, அருகம்புல் என நிரப்பி வைத்திருக்கிறார்கள்.

கூடவே அன்பு வேண்டுகோள் ஒன்றும் காணப்படுகிறது.

‘உங்கள் குழந்தைகள், குவளைகளை எச்சில்படுத்தி அருந்தும்பட்சத்தில் அவைகள் முறையாக சுத்தப்படுத்தி வைக்கலாமே!’

இப்படி எதிலும், எங்கும் ஒருவித ஒழுங்குமுறை, அமைதி, தூய்மை ஆகியவைகளுக்கு மத்தியில்,

‘உங்கள் இல்லத்தை தூய்மையாக வைத்திருங்கள்!
ஆண்டவன் உள்ளே நுழையக் காத்திருக்கிறான்!!’

என உள்ளத் தூய்மையையும் புறத்தூய்மையையும் தாரக மந்திரகளாகக் கொண்டும், அவைகளை வற்புறுத்தியும், பிற கோயில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, காலத்திற்கேற்ற வித்தியாசமான சிறப்பம்சங்களுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது இந்த ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில்!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.