கணேஷும் அவரது மனைவி கமலாவும் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள்.
ஆண்களுக்கு முன்பான பெண்கள் இருக்கையில் கமலாவும், மூன்று வரிசை பின்னால் இருந்த இருக்கையில் கணேஷும் அமர்ந்தார்கள்.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், கமலாவுக்கு பின் சீட்டில் இருந்தவன், அவளை பின்னாலிருந்து தொந்தரவு செய்தான்.
இதை கண்ட கமலா நெளிந்து முன்னால் நகர்த்து அமர்ந்தாள். இருந்தாலும் தொந்தரவு தொடர்ந்தது.
பொறுமை இழந்த கமலா ஆவேசமாக இருக்கையை விட்டு எழுந்து திரும்பி நின்றாள்.
“என்னங்க... கொஞ்சம் முன்னாடி வர்றீங்களா?” அவள் தனது கணவனை அழைக்க கணேஷ் முன்னால் வந்தான்.
“தம்பி,.. என் வீட்டுக்காரர் இங்க உக்காரட்டும். நீ பின்னால அவரோட சீட்ல உட்கார்றியா?” கேட்டாள் கமலா.
இளைஞன் மறு பேச்சின்றி பின் இருக்கைக்கு நடந்தான்.
பஸ் சென்னை வந்து சேர்ந்தது. இருவரும் இறங்கிக் கொண்டார்கள்.
“என்னங்க, நான் ஏன் உங்கள என் பின்னாடி இருந்த சீட்டுல உட்கார சொன்னேன் தெரியுமா? என் பின்னாடி இருந்தவன் சரியில்ல. என்ன தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தான். அதான் உங்கள கூப்பிட்டு அவன் சீட்ல உட்கார வச்சேன்”
“என்னடி இத இப்ப சொல்ற? அப்பவே சொல்லி இருந்தா, அவனை ரெண்டு அப்பு அப்பி இருப்பனே” சீறினான் கணேஷ்.
“நீங்க அப்படி செஞ்சிருந்தா, பஸ்ல இருக்குற எல்லாரும் அவன அடிச்சி இருப்பாங்க. நான் எழும்பி திரும்பி நின்னு உங்கள கூப்பிட்டதும், அவன் முகத்தில் ஒரு பதட்டம் தெரிஞ்சது. அப்பவே அவன் திருந்திட்டாங்க.”
கமலா கூறியதைக் கேட்ட கணேசுக்கு அவளைப் பார்க்க பெருமையாக இருந்தது.
எம்.மனோஜ் குமார்