திருநகரங்கண்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் மூன்றாவது படலமாகும்.
இப்படலம் மதுரை நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்த விதத்தையும், பாண்டியர்களின் தலைநகர் மாற்றம் பற்றியும் குறிப்பிடுகிறது.
இப்படலத்தின் மூலம் இறைவனின் திருவிளையாடலால் கடம்பவனத்திற்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டதை நாம் அறிந்து கொள்ளலாம்.
கோவில் மாநகரமாக மதுரை புகழ்பெறக் காரணமான நிகழ்வுகள் இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன. இனி திருநகரங்கண்ட படலம் பற்றிப் பார்ப்போம்.
குலசேகரப் பாண்டியன் என்னும் பாண்டிய அரசன்
கருணையின் வடிவான சொக்கநாதர் வீற்றிருந்த கடம்ப வனத்திற்கு கிழக்கே மணவூர் என்ற நகர் ஒன்று இருந்தது. அந்நகரினை தலைநகராகக் கொண்டு குலசேகரன் என்ற பாண்டிய அரசன் ஆட்சி செய்து வந்தான்.
மணவூரில் சிவபெருமானிடம் பக்தி கொண்ட தனஞ்செயன் என்ற வணிகன் ஒருவன் வசித்து வந்தான்.
தனஞ்செயன் கண்ட அதிசயம்
ஒரு சமயம் தனஞ்செயன் வணிகத்திற்காக மணவூருக்கு மேற்கே உள்ள ஊர்களுக்கு சென்றான். அவ்வாறு அவன் வணிக வேலைகளை முடித்துவிட்டு மணவூருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் இருந்த கடம்ப வனத்தில் புகுந்தான்.
அப்போது சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியது. தனஞ்செயனும் ‘ஆளரவமற்ற காட்டில் தனியாக மாட்டிக் கொண்டோமே, கருணையின் வடிவான இறைவனே நீயே எனக்கு துணை’ என்று எண்ணியவாறே நடக்க தொடங்கினான்.
அவன் வந்த வழியில் எட்டு யானைகளால் தாங்கப்பட்ட விமானத்தின் கீழ் அருள் வடிவில் வீற்றிருந்த சொக்கநாதரைக் கண்டான்.
சிவபிரானை கண்ட தனஞ்செயன் மிக்க மகிழ்ச்சியுடன் அவரை வணங்கி அன்றைய இரவுப்பொழுதை கழிக்க எண்ணி அங்கேயே தங்கினான்.
தனஞ்செயன் தங்கிய இரவு சோமாவாரம் (திங்கள் கிழமை). அதனால் தேவர்கள் இரவில் அவ்விடத்திற்கு வந்து சொக்கநாதரை அபிசேகித்து மலர்கள் சூடி வழிபாடு நடத்தினர்.
சோமசுந்தரரின் அருளால் தனஞ்செயன் தேவர்களின் வரவையும், வழிபாட்டினையும் கண்டு அவர்களுடன் இணைந்து சிவவழிபாட்டினை மேற்கொண்டான்.
பொழுது விடிந்ததும் தனஞ்செயன் சுயநினைவுக்கு வந்தான். சொக்கநாதரை மீண்டும் வழிபட்டு தன்னிடம் நோக்கி புறப்பட்டான்.
சொக்கநாதரைப் பற்றி பாண்டியனுக்கு அறிவித்தல்
மணவூரை அடைந்த தனஞ்செயன் நேராக அரண்மனைக்கு சென்று குலசேகரப் பாண்டியனிடம் முதல் நாள் இரவில் நடவற்றை விரிவாக எடுத்து உரைத்தான்.
பாண்டியனும் சொக்கநாதரின் நினைவில் இரவில் உறங்கினான். பாண்டியனின் கனவில் சோமசுந்தரர் ஒரு சித்தராகத் தோன்றி கடம்பவனத்தை அழித்து அழகிய நகரத்தினை உருவாக்குமாறு ஆணையிட்டார். சித்தரைக் கனவில் கண்ட பாண்டியன் திடுக்கிட்டு விழித்து விடியும்வரை காத்திருந்தான்.
சோமசுந்தரரை பாண்டியன் வழிபடுதல்
தனஞ்செயன் கூறியவற்றையும், தான் கனவில் கண்டவற்றையும் அமைச்சர் பெருமக்களோடும், பெரியவர்கனோடும் பாண்டியன் கலந்து ஆலோசித்து சொக்கநாதரைத் தேடி புறப்பட்டான்.
கடம்பவனத்தில் பொற்றாமரைக் குளத்தில் நீராடினான். பின் இந்திரவிமானத்தின் கீழ் வீற்றிருந்த சொக்கநாதரை கண்டு மனம் உருக வழிபட்டான். பின் தன்னுடைய ஆட்களைக் கொண்டு காடுகளை வெட்டி திருந்தஞ் செய்தான்.
நகரினை உருவாக்க சித்தராக சொக்கநாதர் பாண்டியனுக்கு வழிகாட்டல்
நகரினை எப்படி உருவாக்குவது என்று பாண்டியன் யோசித்து கொண்டிருந்த வேளையில் இரவில் பாண்டியன் கனவில் தோன்றிய சித்தர் அவன் முன் தோன்றினார்.
பாண்டியனிடம் “சிவாகமத்தின் வழியே தோன்றிய முதல்நூல், வழிநூல், சார்பு நூல் ஆகியவற்றின்படி ஆலயமும், மண்டபமும், கோபுரமும், நகரமும் உண்டாக்குக” என்று கூறி மறைந்தார்.
மதுரை நகர் மற்றும் மீனாட்சி சொக்கநாதர் கோவில் தோன்றல்
பாண்டியனும் சித்தரின் வழிகாட்டுதலின்படி மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலையும், திருநகரத்தினையும் உருவாக்கினான். தான் உருவாக்கிய நகருக்கு சாந்தி செய்ய பாண்டியன் எண்ணினான்.
இதனை அறிந்த சொக்கநாதர் தனது திருமுடியில் இருந்து பிறைநிலவிலிருந்து அமுதத்தை நகரின் மீது தெளித்தார்.
சிவபிரானின் திருமுடியிலிருந்து சிந்திய அமுதமானது அந்நகரினை தூய்மை செய்து இனிமையாக்கியது. இவ்வாறு இறைவனின் கருணையால் அமுதம் சிந்தி மதுரமாகிய (இனிமை) தன்மையைப்; பெற்றதால் குலசேகரப்பாண்டியன் உருவாக்கிய திருநகரம் மதுரை என அழைக்கப்படலாயிற்று.
பின்னர் பாண்டியன் மதுரை நகரின் கிழக்கு திசையில் ஐயனாரையம், தென்திசையில் சப்த கன்னியர்களையும், மேற்கில் திருமாலையும், வடக்கில் பத்ரகாளியையும் காவலாக நிறுவினான். பின் நன்னெறிப்படி நாட்டினை ஆண்டான்.
குலசேகரப் பாண்டியனுக்கு இறைவனின் திருவருளால் மலயத்துவசன் என்னும் மகன் பிறந்தான். மலயத்துவசன் வளர்ந்து பெரியவனானதும் அவனிடம் ஆட்சியை ஒப்படைத்து சிவவழிபாட்டில் நாட்டம் செலுத்தி இறுதியில் இறைவனின் திருவடியை அடைந்தான்.
திருநகரங்கண்ட படலம் மூலமாக பாண்டியர்களின் தலைநகரான மதுரை எவ்வாறு உருவானது என்பது பற்றி அறியலாம்.
முந்தைய படலம் வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்
அடுத்த படலம் தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்
Comments
“திருநகரங்கண்ட படலம்” அதற்கு 2 மறுமொழிகள்