திருநாளைப் போவார் நாயனார்

திருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்

திருநாளைப் போவார் நாயனார் இறையருளால் நந்தி விலக இறை தரிசனம் பெற்றவர். உண்மையான பக்தியினால் தீயில் குளித்து புனிதரானவர்.

திருநாளைப் போவார் நாயனாரின் இயற்பெயர் நந்தனார் என்பதாகும். இவர் சோழநாட்டின் ஒரு பிரிவாக விளங்கிய மேற்கா நாட்டில் உள்ள ஆதனூர் என்னும் ஊரில் பிறந்தார்.

ஆதனூர் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது.

ஆதனூர் அக்காலத்திலேயே நீர்வளமும், நிலவளமும் மிக்கதாய் விளங்கியது. வயல்கள் நிறைந்த அவ்வூரில் குடிசைகள் நிறைந்த புலைபாடி இருந்தது. அக்குடிசைகளில் புலையர்கள் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் உழவுத்தொழில் செய்து மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்களில் நந்தனார் என்பவரும் ஒருவர். அவர் சிவபெருமானின் மீது மாறாத அன்பு கொண்டிருந்தார். அக்காலத்தில் திருக்குலத்தைச் சார்ந்தவர்கள் எவரும் கோவிலுக்கு செல்ல இயலாது.

இறைத் தொண்டு

திருக்குலத்தைச் சார்ந்த நாயனாரும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டிருந்த நந்தனாரால் கோவிலுக்கு நேரே சென்று சிவபெருமானை தரிசிக்க இயலவில்லை.

ஆனால் அவர் தம் இயற்தொழிலை செய்ததோடு சிவபெருமானுக்கு தொண்டுகள் பலவும் செய்து வந்தார்.

அவர் இனத்தை சார்ந்த மற்றவர்கள் தங்களின் இயற்தொழில் மூலம் கிடைக்கும் தோல், நரம்பு முதலியவைகளை ஏனைய மனிதர்களுக்கு விற்று வருவாய் ஈட்டினர்.

ஆனாலும் நந்தனார் தம் குலத்தொழில் மூலம் கிடைக்கின்ற தோலை சிவபெருமானின் கோவில்களில் உள்ள பேரிகை, முரசு உள்ளிட்ட தோல் இசைக்கருவிகளுக்கு இலவசமாகக் கொடுப்பார்.

கோவில்களில் இசைத்தொண்டு புரிபவர்களுடைய யாழ், வீணை போன்ற இசைக்கருவிகளுக்கு வேண்டிய நரம்பினை வழங்குவார்.

கோவில்களில் ஆராதனைக்கு தேவையான கோரோசனையைக் கொடுப்பார்.

இவ்வாறு நந்தனார் இறைவனின் கோவில்களுக்கு நேரடியாகச் சென்று சிவதொண்டு புரிய முடியாவிட்டாலும் தம்முடைய இயற்தொழிலொடு இணைந்த சிவதொண்டினை செய்து வந்தார்.

சிவாலயங்களில் ஒலிக்கப்படும் பேரிகை, முரசு ஆகியவற்றின் இசையையும், யாழ், வீணை போன்ற இசைக்கருவிகளின் நாதங்களையும் கேட்டதும், நந்தனார் மகிழ்ந்து இன்புறுவார்; குதிப்பார்; பாடுவார்; கூத்தாடுவார்; கொண்டாடுவார்.

சிவலாயங்களின் கோபுரத்தையும், கோவிலையும் தரிசிக்கும் இன்பத்தைத் தன் இயற்தொழிலோடு பிணைத்துக் கொண்டு வாழ்ந்தார் நந்தனார்.

நந்தி விலகி தரிசனம்

ஒருசமயம் நந்தனார் மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரை தரிசிக்க எண்ணி திருப்புன்கூரை அடைந்தார். அக்கோவிலின் உள்ளே செல்ல அக்கால கட்டுப்பாடுகள் தடுத்ததால் வெளியே நின்று கொண்டு சிவலோகநாதரை தரிசிக்க முயன்றார்.

சிவலோகநாதரின் முன்னால் இருந்த நந்தி நந்தனாருக்கு இறை தரிசனத்தை மறைத்தார். இதனால் மனம் நொந்த நந்தனார் இறை தரிசனம் கிடைக்க அருள்புரியுமாறு இறைவனை மனம் உருகி வேண்டினார்.

இறைவனார் தம் பக்தனின் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்தியெம் பெருமானுக்கு ஆணையிட்டார். இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகியதும் நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது.

அதனைக் கண்டதும் நந்தனார் இறைவனைப் போற்றிப் பாடி, ஆடி, குதித்து மகிழ்ந்தார். திருக்கோவிலை வலம் வந்தார். பின்னர் அவ்வூரைச் சுற்றி வருகையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார்.

இவ்விடத்தில் குளத்தை வெட்டினால் திருக்கோவிலுக்கு வரும் அன்பர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணி தம்முடைய உடல் வலிமையால் அவ்விடத்தில் குளத்தை வெட்டினார்.

பல சிவாலயங்களுக்குச் சென்று குளம் வெட்டியும், சுவர் வைத்தும், தோல், வார், நரம்பு ஆகியவற்றை அளித்தும் சிவனாருக்கும் அவர்தம் அடியவருக்கும் இயற்தொழிலோடு இணைந்த சிவதொண்டினை நந்தனார் செய்து வந்தார்.

அவர் ஒவ்வொரு நாளும் சிவனாரின் நினைவாகவே இருந்தார்.

பலர் வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தால் மட்டுமே இறைவனுக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்ய முடியும் என்று எண்ணுகின்றனர். ஆனால் திருநாளைப் போவார் நாயனார் இயற்தொழிலோடு செய்த சிவதொண்டு அவர்களின் எண்ணத்திற்கு நேர் எதிரானது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு உதாரணமானது.

திருநாளைப் போவார்

பல சிவதலங்களுக்கும் சென்று தொண்டுகள் பல செய்த நந்தனாருக்கு ஓர் ஆசை எழுந்தது. கோவில் என்று சைவர்கள் போற்றும் தில்லையை தரிசனம் செய்வதே அது. ஒவ்வொரு நாளும் தில்லைத் தரிசன ஆசை நந்தனாருக்கு பெருகிக் கொண்டே வந்தது.

ஒருநாள் இரவு தில்லை தரிசனத்தை நினைத்துக் கொண்டிருந்த நந்தனாருக்கு, தன்னால் கோவிலின் உள்ளே சென்று ஆடலரசனை வழிபட இயலாத சூழ்நிலை நினைவுக்கு வர அவருக்கு சோர்வு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் மீண்டும் தில்லை தரிசன ஆசை நந்தனாருக்கு உண்டானது. ‘நாளைப் போவேன்’ என்று எண்ணிக் கொண்டார்.

மறுநாளும் நந்தனாருக்கு தில்லை தரிசன ஆசையும், தில்லைக்குள் செல்லாத தன்னுடைய சூழ்நிலை சோர்வும் ஆட்கொண்டன. மீண்டும் நாளைப் போவேன் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.

இவ்வாறு நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒவ்வொரு நாளாகக் கழிந்து கொண்டிருந்தது.

நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் நந்தனாரிடம் ‘சிதம்பரம் செல்ல போகிறீர்களா?’ என்று கேட்டால் நாளைப் போவேன் என்று நந்தனார் கூறுவார். இதனால் எல்லோரும் திருநாளைப் போவார் என்று அழைத்தனர்.

நெருப்பில் குளித்து தரிசனம்

தில்லை செல்லாவிட்டால் வாழ்நாள் வீண் என்ற எண்ணம் நந்தனாருக்கு ஏற்பட, ஒருநாள் துணிந்து தில்லை புறப்பட்டுச் சென்றார். தில்லையை அடைந்து கோவிலின் மதிற்சுவர் அருகே சென்றார்.

வேத ஒலியும், வேள்விப் புகையும் கோவிலினுள் இருந்து வருவதை நந்தனார் உணர்ந்தார். ‘கோவிலிற்குள் சென்று இறைவனின் திருநடனத்தைக் காண்பதற்கு இந்த உடல் தடையாக இருக்கிறதே? இறைவா உன்னுடைய தரிசனம் எனக்குக் கிடைக்காதா?’ என்று மனதிற்குள் உருகினார்.

சோர்வு மிகுதியால் கோவிலின் மதிற்சுவர் அருகே படுத்து உறங்கினார் நந்தனார். அவருடைய கனவில் தோன்றி அம்பலத்தரசன் “அஞ்சாதே, நீ தீயிடைப் புகந்து, தில்லைவாழ் அந்தணர்களுடன் எம்முடைய சந்நிதிக்கு வருவாயாக” என்று அருளினார்.

தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் தோன்றி இறைவனார் “திருக்குலத்தில் தோன்றிய நந்தனார் என்னும் பக்தன் நம்மை தரிசிக்கும் ஆவலில் மதிற்சுவர் அருகே படுத்துக் கிடக்கிறான். அவனை அழைத்து நெருப்பில் புகச் செய்து எம் சந்நிதிக்கு அழைத்து வாருங்கள்” என்று ஆணையிட்டார்.

துயிலெழுந்த நந்தனார் இறைவனின் அருளை எண்ணி வியந்தார். ‘நாயேனுடைய ஆசையை நிறைவேற்ற இறைவனார் விருப்பம் கொண்டு விட்டார். இறைவனுக்குத்தான் என்மேல் என்னே கருணை’ என்று எண்ணி ஆனந்தக் கூத்தாடினார்.

தில்லைவாழ் அந்தணர்களும் விடிந்ததும் நந்தனாரைக் கண்டு இறை ஆணையைக் கூறினர். “இறைவனின் ஆணைப்படி நடக்கட்டும்” என்று நந்தனார் கூறினார்.

அந்தணர்கள் திருமதிலின் தெற்கு வாயிலுக்கு புறத்தே நெருப்புக் குழியை அமைத்திருந்தனர். இறைவனின் ஆணையை நிறைவேற்ற நந்தனார் நெருப்புக் குழியை வலம் வந்து இறைவனை உச்சரித்தபடி நெருப்பிற்குள் புகுந்தார்.

அப்போது தேகப்பொலிவும், நூல் விளங்கும் திருமார்பும், வெண்ணீறும் அணிந்து புண்ணிய மாமுனிவர் கோலத்துடன் திருநாளைப் போவார் நாயானார் நெருப்பிலிருந்து வெளிப்பட்டார். அவரைக் கண்டதும் தில்லைவாழ் அந்தணர்கள் அதிசயித்தனர்.

தங்கத்தை நெருப்பில் இட்டு புடமிடுவர். நந்தனார் நெருப்பில் புகுந்து திருநாளைப் போவார் நாயனார் என்ற நிலைக்கு உயர்ந்தார்.

பொதுவாக எல்லோரும் நீரில் ஆடித் திருக்கோவிலுக்குச் செல்வர். ஆனால் திருநாளைப் போவார் நாயனார் நெருப்பில் குளித்து திருக்கோவிலுக்குள் தில்லைவாழ் அந்தணர்களுடன் சென்றார்.

வாத்தியங்கள் முழங்க, மறையொலி ஒலிக்க திருநாளைப் போவார் தம்மை கனவில் அழைத்த ஆடலரசன் சந்நிதியை நோக்கிச் சென்றார்.

அங்கே சென்றதும் திருநாளைப் போவார் நாயனார் அவ்விடத்திலிருந்து மறைந்து இறைவனின் திருவடியை அடைந்தார்.

திருநாளைப் போவார் நாயனார் குருபூஜை புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

பிறந்த குலத்திற்கும், இறை அன்பிற்கும் தொடர்பில்லை என்று நிரூபித்த திருநாளைப் போவார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘செம்மையே திருநாளைப் போவாருக்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.