முன்னொரு காலத்தில் பூஞ்சோலை என்ற ஊரில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் மிகவும் நல்லவர். அவருக்கு வளவன், முகிலன் என இருமகன்கள் இருந்தனர்.
இளையவனான முகிலன் கெட்ட நண்பர்களிடம் சேர்ந்து தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தான்.
கெட்ட நண்பர்களின் தூண்டுதலால் தந்தையிடம் சொத்துகளைப் பிரித்து தன் பங்கினைக் கொடுக்குமாறு அவ்வப்போது தந்தையிடம் சண்டை இட்டு வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தான்.
முகிலனின் சண்டை தந்தையை மிகவும் பாதித்தது. அதனால் அவர் தனது சொத்துக்களை மூன்று பாகங்களாகப் பிரித்து முகிலனின் பங்கினை அவனுக்குக் கொடுத்தார்.
முகிலன் தனது சொத்துக்கள் முழுவதையும் விற்றுவிட்டு பெரும் பணத்துடன் தொலைவில் இருந்த வேறு ஊருக்குச் சென்றான்.
கெட்ட நண்பர்களின் நட்பினால் தன்னுடைய பணத்தினை முழுவதும் தீயவழியில் செலவிட்டான். நாளடைவில் முகிலனிடம் இருந்த பணம் முழுவதும் காலியாகி விட்டது.
அதனால் அவனுடைய கெட்ட நண்பர்கள் அவனைத் தனியே விட்டுவிட்டுச் சென்றனர். முகிலன் ஒருவேளை உணவுக்குக்கூட இல்லாமல் திண்டாடினான்.
வேலை செய்து பழக்கமில்லாத முகிலனுக்கு உழைத்து உண்ண விருப்பமில்லை. நெடுநாள் பட்டினி கிடந்தபின் நடக்க முடியாமல் முகிலன் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுடைய உடைகள் கிழிந்து பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருந்தான்.
அப்போது பன்றிகளை மேய்பவன் முகிலனிடம் இரக்கம் கொண்டு அவனுக்கு சிறிது உணவளித்தான். தன்னுடைய பன்றிகளை மேய்த்து பராமரித்தால் மீண்டும் உணவு கொடுப்பதாக பன்றிமேய்பவன் கூறினான்.
பசியால் வாடிய முகிலன் அதற்கு சம்மதித்தான். பன்றிகளை மேய்ந்து வந்ததால் முகிலனுக்கு ஒருவேளை உணவு கிடைத்தது. அது முகிலனுக்கு பற்றவில்லை. அதனால் சிலநேரங்களில் பன்றிகளின் உணவினை உண்டு வந்தான்.
‘என் வீட்டில் வேலை செய்வர்கள்கூட நல்ல உணவினை உண்டார்கள். ஆனால் நானோ என்னுடைய கெட்ட நடத்தையால் இன்றைக்கு பன்றிகளுக்கு அளிக்கும் உணவினை உண்ணும் நிலையில் உள்ளேன்.
எப்படியாவது எனது தந்தையைச் சந்தித்து என்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டு அவருடைய வீட்டில் எனக்கு ஏதாவது வேலை போட்டுத் தரச் சொல்ல வேண்டும்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
ஒருநாள் முகிலன் பன்றி மேய்த்துக் கொண்டிருந்தபோது முகிலனின் தந்தையின் வீட்டின் வேலை செய்பவர் முகிலனை அடையாளம் கண்டு கொண்டார்.
முகிலனிடம் விசாரித்து, சமாதானப்படுத்தி தந்தையிடம் அழைத்துச் சென்றார். முகிலனின் தந்தையோ முகிலனைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து முத்தம் இட்டார்.
முகிலன் தந்தையிடம் தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கேட்டு தன்னை அவருடைய வீட்டில் வேலையாளாக சேர்த்துக் கொள்ளக் கூறினான்.
மாறாக தந்தையோ முகிலனை குளிக்கச் செய்து புத்தாடை அணிவித்து விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
விருந்து நடைபெறும் முன்னர் அங்கிருந்தோர்களிடம் முகிலனின் தந்தை “என்னுடைய மகனிடம் இருந்த தீயகுணங்கள் அழிந்து விட்டன. இப்போது அவன் மிகவும் நல்லவன். அதனைக் கொண்டாடவே நான் விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்” என்று கூறினார். எல்லோரும் மகிழ்ச்சியுடன் விருந்தினை உண்டனர்.
தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வரும்போது அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதை திருந்திய மகன் கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!