அது ஒரு திரைப்படம்
ஆவணப் படத்தின் சாயலில்
எடுக்கப்பட்ட படத்தில்
எல்லோரும் அன்றாட மனிதர்கள்
உறவினர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள்
அப்பொழுது தான் பரிச்சயம் ஆனவர்கள்
கனவுகள் நினைவுகள் நிஜங்கள்
தெரிந்த இடங்கள்
தெரியாத இடங்கள்
பற்றிய புரிதல்களோடு
அது என் முன்னே காட்டப்படுகிறது
அது ஒரு ஆள்
அது நான் தான்
வேறு வழியின்றி
நான் தான்
ஆரம்பத்திலிருந்து அப்படத்தை
என்னால் முடிந்த வரையிலும்
முடியாமலும் அப்படத்தை
ஓட்டிக் கொண்டிருக்கிறேன்
இடைவேளை இல்லாமல்
நிற்காமல் ஓடும் படம் அது
அனைத்து பரிமாணங்களும்
கொண்ட நிஜமான மனிதர்கள்
நடிக்கிறார்கள் அதில்
நானும் நடிக்கிறேன்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
நான் இல்லாமல் போகும்போது
படம் முடிவுக்கு வருகிறது