தீராக்காதல் – கவிதை

முடி நரைத்து,

முதுமை கனியாகையில்,

அவன் மடியில் தவழ்ந்தது – அவளின்

நாட்குறிப்பு!

ஓராயிரம் முறைகள்

ஒப்பித்தாயிற்று!

இறுதி அத்தியாயம் மட்டும்

கவியாறாய் பெருகி… பெருகி…

கடலாய்க் கனக்கிறது!

அத்தான்!

ஒருமுறை கூட அழைத்ததில்லை இப்படி!

கண்கள் கூட

கருணையைக் காட்டியதில்லை உன்னிடம்!

அகழ்ந்தாலும் ஏற்கும்

அன்னை பூமியாய்

எனைத் தாங்கினாயே!

அரண்டாலும் புரண்டாலும்

அகிலத்தில் உனைப் போல்

ஆளுமுண்டோ?

அன்புதனை சுரக்கும்

அட்சயபாத்திரமும் நீயோ?

உனை ஏசாது

என் நாட்கள் நகர்ந்ததுமில்லை!

நான் இல்லா உன்

நிமிடங்கள் கரைந்ததுமில்லை!

என் விழிகள் உனை கண்டுகொண்டதே இல்லை!

உன் விழிகள் எனைவிட்டு விலகியதே இல்லை!

இத்தனை அன்பை

மெத்தனமாய் என் மேல் – ஏன்

பொழிந்தாயோ? – என்

ஊனம் தான் கரிசனையோ?

பித்தாய் நான்

பிதற்றித் திரிந்தேனே! – எனை

முத்தாய் காக்கும் சிப்பியை

தெருவோடாய்த்

தரையில் எறிந்தேனே!

வேசமொன்று கொண்டேனய்யா,

உமை விலகிடவே!

முடமெந்தன் அன்பால்…

வடமிழுக்க இயலாதய்யா!

கொள்ளைப் பிரியம் – உன்

மேல் கொண்டேனய்யா!

கோடிமுறை – உன்

காலடியில் வீழ்வேனய்யா!

கொத்தடிமையாய்

சேவகம் செய்வேனய்யா! – நான்

முடமன்றி நலமாக இருந்திட்டால்!

சேவகனாய் நீ

மாறாதிருக்க…

ராட்சசி அவதாரமய்யா! – உன்

கனவிற்கு தடை நானய்யா!

வார்த்தைக் கனல் உமிழ்ந்தேனய்யா!

நகராத் தேர்! – என்

சக்கரங்களை மாற்ற முயலாதே!

உன் கனவுகள் துரத்தி

காததூரம் ஓடிடு!

காலம் கனிகையில் – என்

கையேடு உன் கைகிட்டும் – என்

காதல் உன் கண் முட்டும்!…

மார்போடு அணைத்த,

நாட்குறிப்போடு!

தீராக்காதலை

தீர்த்தமாய் பருகிடவே!

அவள் சென்ற வழியில்

அவனும் அவளைத்தேடி…

விஜயா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.