திரிபுரம் முகம் வாட்டத்துடன் காணப்பட்டதை விசாலம் அறியாமல் இல்லை. ‘வேலைகளை முடித்துவிட்டு கிளம்பும் சமயம் அவளிடம் விவரமாகக் கேட்டுக் கொள்ளலாம்’ என அமைதியாக இருந்தாள்.
சமையல் வேலை பார்த்து குடும்பம் நடத்தும் திரிபுரம், விசாலம் வீட்டில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக வேலை செய்கிறாள். அவள் கணவன் கட்டிட காண்டிராக்டர் ஒருவரிடம் மேஸ்திரியாக இருக்கிறார். ஐம்பது வயது இருக்கும்.
இருவருக்கும் ஒரே மகன். அவனும் இருபது வயதிலேயே அவர்கள் சம்மதமில்லாமல், ஒரு பெண்ணை மணந்து கொண்டு வீட்டைவிட்டுப் போய்விட்டான்.
திரிபுரமும் அவளது கணவரும் இடிந்து போய், எந்த ஒரு ஆதரவுமின்றி தனியே காலந்தள்ளி வர, திரிபுரமும் தன் பங்குக்கு நாலைந்து வீடுகளில் சமையல் வேலை செய்து வந்தாள்.
சகவாச தோஷம் திரிபுரம் கணவரைக் குடிகாரனாக மாற்றியது. நொறுங்கிப் போனாள் திரிபுரம்.
தினம் வீட்டில் களேபரம். திரிபுரம் வாழ்க்கை நரகமாக மாறி விட்டது.
‘கணவன் என்றாவது ஒருநாள் திருந்த மாட்டானா?’ என்னும் ஏக்கம் மேலிட, பொறுமையுடனும், அமைதியுடனும் நாட்களை ஓட்டி வந்தாள்.
வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்பிய திரிபுரத்திடம் “என்னம்மா? வரும்போதே முகம் வாட்டமாயிருந்தது. என்ன விஷயம்?”
விசாலம் கேட்டதும், திரிபுரம் கண்கள் கலங்கின.
“எப்பவும் உள்ள பிரச்சினைதான்மா. எல்லாம் என் தலைவிதி. காலா காலத்துல மஞ்சள் குங்குமத்துடன் போய்ச் சேர்ந்துட்டா பரவாயில்லை” என்றாள்.
“திரிபுரம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது தானாக வந்து விடாதும்மா. பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் உன்னோட கணவனுக்கு ஏற்படுகிற மாதிரி நீ நடந்துக்கல. அவனது போக்கை வளரவிட்டுட்டே” விசாலம் இப்படி கூறியதும்,
“என்னம்மா சொல்றீங்க? வேலைக்கு ஒழுங்காப் போறதில்லை. சகவாசமும் சரியில்லை. சீட்டாட்டம், குடிப்பழக்கம்னு ஆசைப்பட்டு, கிடைக்காமல் போனவங்க மனம் நோகக்கூடாதுங்கிறதுக்காகவே அவங்க கவலைகளை மறக்க டாஸ்மாக் கடைகள் திறந்திருக்காங்களோன்னு நினைக்கத் தோணுது.
நானும் எவ்வளவோ அல்லாடி, மன்றாடி, கெஞ்சி, அழுது புலம்பி அவரை மாற்ற முயற்சி பண்ணியும் முடியலைம்மா.
மனசிலும் உடம்பிலும் இனி தெம்பு இல்லை. நானும் போயிட்டேன்னா, அப்போதாவது திருந்துவார். சுமங்கலியாய் போய்ச் சேர்ந்த பெருமையும் கிடைக்கும் இல்லையா?” விரக்தியாய் பேசிய திரிபுரத்திடம்,
“பெண்களால் முடியாதது எதுவுமில்லை. கணவன் சரியில்லைன்னா அவனை நல்வழிப்படுத்த, நல்ல வழிகாட்டுதல்களை நாம்தான் மேற்கொள்ளணும்.
துணிச்சல், மனோதைரியம், மனஉறுதி, பொறுமை மூலம் கொஞ்சங் கொஞ்சமாக அவனது போக்கை மாற்ற அயராத முயற்சி இருந்தாலே போதும்.
நம் அருகாமையையும் துணையும் அவசியம் தேவை என்பதை உணர வைத்து, நம்மைச் சார்ந்து அவனை இருக்க வைப்பதில்தான் நம் வெற்றி இருக்கிறது.
உழைப்பில் அவன் மனம் ஈடுபடணும். சொந்தமாக தொழில் தொடங்கலாம். எவ்வளவோ வழிகள் இருக்கு.
உன் கைப்பக்குவமும், திறமையும், அவனது அயரா உழைப்பும் கைகோர்த்து செயல்படும் பட்சத்தில் தொழிலில் அவனது முழு கவனமும் திசைமாறாமல் பதியும். நாளடைவில் தங்கக் கம்பியாக மாறி விடுவான்.”
விசாலம் பேசுவதை திரிபுரம் மவுனமாகக் கேட்டுக் கொண்டிருக்க, விசாலம் தொடர்ந்தாள்.
“நீ முதலில் போயிட்டா மட்டும் அவன் திருந்திடுவானா? நிலைமையை இன்னும் படுமோசமாகிக் கொள்ள அவனுக்கு ஒரு காரணம் கிடைத்து விடும்.
அப்படியே அவன் தன் தவறை உணர்ந்தாலும், கடைசிவரை தனிமரமாய், யாருடைய அன்பும், ஆதரவுமின்றி நடைப்பிணமாகத்தான் வாழ வேண்டி வரும்.
ஆள் பலமும் பண பலமும் இருந்து கணவனானவன் எவ்விதப் பிரச்சினையுமின்றி இருக்கும் பட்சத்தில், பெண்ணானவள் சுமங்கலியாய் போய்ச் சேர ஆசைப்படுவதில், தவமிருப்பதில் தவறில்லை.
‘தீர்க்க சுமங்கலி பவ!’ என ஆசீர்வதிப்பதே கணவனும் மனைவியும் ஆரோக்கியமாக, சந்தோஷமாக ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும், ஒருவரையொருவர் சார்ந்து நின்றும் நீண்ட ஆயுளுடன் அன்பு குறையாமல் வாழ்வதற்கே.
நான் முந்தியா? நீ முந்தியா! என்றெல்லாம் போட்டி போடுவது மனம் ஒத்த தம்பதிகளுக்கு அழகல்ல. மனதைத் திடமாக சந்தோஷமாகக் கழிக்கத் தேவையான செயல்களில் இறங்கு.”
விசாலம் பேசிய பேச்சில் திரிபுரம் மனதில் ஒருவித தெளிவு பிறக்க, பூஜையறை சென்று குங்குமச் சிமிழை எடுத்து வந்து விசாலத்திடம் கொடுத்து, “நீங்களே உங்க கையால குங்குமமிட்டு ஆசீர்வதிங்கம்மா!” என நமஸ்கரித்தாள்.
“தீர்க்க சுமங்கலி பவ!” என்றாள் விசாலம்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998