இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று.
இன்றைக்கு நம்முடைய அன்றாட வாழ்வில் நெகிழி இரண்டறக் கலந்து விட்டது. நெகிழிக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தி நம்மால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். அவ்வாறான பொருட்களில் துணிப்பையும் ஒன்று.
வெளியே செல்லும் போது துணிப்பையைக் கொண்டு செல்வது என்பது எளிதான காரியம் என்பதை வலியுறுத்தும் வாசகம் அடங்கிய துணிப்பை என்னுடைய கவனத்தைக் கவர்ந்தது.
அதனையே நான் இங்கு பகிர்ந்துள்ளேன். சின்ன சின்ன செயல்கள்தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
‘சின்ன நெகிழிதானே ஒருமுறை நாம் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் என்ன கெட்டுவிடவா போகிறது?’ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு.
‘சொட்டுச் சொட்டாக தேன் வடிந்தாலும் குடம் நிரம்பி விடும்‘ என்ற புத்தரின் வாக்கியத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சின்ன சின்ன நெகிழிதான் எண்ணிக்கையில் அதிகரித்து இன்றைக்கு சுற்றுசூழலின் ஆரோக்கியத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆதலால் வெளியே செல்லும்போது கைபேசியை விட எடை குறைவான மஞ்சள் பையையும் எடுத்துச் செல்லுங்கள். வளமான இயற்கை சுற்றுச்சூழலை சந்ததியருக்கு பரிசளியுங்கள்.
மஞ்சப்பை அவமானம் அல்ல; வாழ்வின் அடையாளம்!
துணிப்பையை சுமப்போம்! சுகமான வாழ்வு பெறுவோம்!