துரியன் பழம்

துரியன் பழம் பலா பழம் போன்ற தோற்றத்துடன் அளவில் சிறியதாக உள்ள பழம். பொதுவாக இதன் விலையானது மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு வித வெறுக்கத் தக்க மணத்துடன் இனிமையான சதைப்பகுதியை இப்பழம் பெற்றுள்ளது.

இதனால் துரியன் பழத்தின் மணம் நரகத்தைப் போன்றும், சுவை சொர்க்கத்தைப் போன்றும் இருக்கும் என்ற பழமொழியை இப்பழம் பெற்றுள்ளது.

துரியனின் தாயகம் தென்கிழக்கு ஆசியா என்று கருதப்படுகிறது. இப்பழத்தினை அதிக அளவு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடு தாய்லாந்து ஆகும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இப்பழம் பழங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. துரியன் மலேசியா, இலங்கை, இந்தியா, வியட்நாம், பிலிபைன்ஸ் உள்ளிட ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. சுமார் 600 வருடங்களுக்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் இப்பழம் அறிமுகமானது.

இப்பழம் மர வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. துரியன் மரமானது வெப்ப மண்டலங்களில் நன்கு செழித்து வளரும். நல்ல வடிகால் வசதியுள்ள கனிம வளம் நிறைந்த செழிப்பான மண்ணில் இம்மரம் செழித்து வளரும்.

இம்மரமானது பயிர் செய்து நான்கு அல்லது ஐந்து வருடங்களில் பலன் தரத் தொடங்கும். பசுமை மாறா தாவரமான இம்மரம் 80 முதல் 150 வருடங்கள் உயிர் வாழும் தன்மையுடையது.

மொத்தம் 30 வகையான துரியன் பழங்கள் உலகில் இருக்கின்றன. அவற்றுள் 9 வகையான பழங்களே உண்ணத் தகுந்தவை. இப்பழமரம் 50 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையவை. மால்வேசி குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஜீன் முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே கிடைக்கும்.

துரியன் மரம்
துரியன் மரம்

 

இப்பழமானது பச்சை கலந்த பழுப்பு வண்ண முட்கள் கொண்ட மேல்தோலையும், உட்புறத்தில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு வடிவ சுளை போன்ற சதைப்பகுதியையும் கொண்டிருக்கும். இப்பழமானது வட்டம் அல்லது நீள்வட்டமாக இருக்கும்.

இப்பழம் 30 செமீ வரை நீளத்தையும், 15 செமீ வரை விட்ட அளவினையும் உடையது. இப்பழத்தின் சதைப் பகுதியுனுள் பலாப்பழக் கொட்டையினை ஒத்த கொட்டைகள் காணப்படுகின்றன.

 

துரியனில் காணப்படும் சத்துக்கள்

இப்பழத்தில் விட்டமின் ஏ,சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), பி5(பேண்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), போலேட்டுகள் போன்றவைகளும், தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகளும், ஆல்பா, பீட்டா கரோடீனாய்டுகளும், கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், கொழுப்புகளும், நார்சத்தும், நீர்சத்தும் காணப்படுகின்றன.

நமது தினசரி விட்டமின் பி1 தேவையில் 33 சதவீதத்தையும், பி6 மற்றும் சி தேவையில் 24 சதவீதத்தையும் இப்பழம் பூர்த்தி செய்கிறது.

 

துரியனின் மருத்துவ பண்புகள்

நல்ல செரிமானம் நடைபெற

இப்பழம் நார்சத்து மிக்கது. இதனால் இப்பழத்தினை உண்ணும்போது உணவானது நன்கு செரிமானம் ஆகிறது. இப்பழத்தில் காணப்படும் விட்டமின்கள் பி1(தயாமின்) மற்றும் பி3(நியாசின்) பசியின்மை சரிசெய்து செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது.

உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உடலானது உட்கிரகித்து வளர்ச்சிதை மாற்றம் நன்கு நடைபெற இப்பழம் உதவுகிறது.

நாள்பட்ட குடல் நோய்கள் மற்றும் மூலம் போன்றவற்றிற்கு இப்பழம் சரியான தீர்வாகும். இப்பழத்தினை உண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு பெறலாம்.

 

இரத்த அழுத்தத்தை சீராக்க

இப்பழமானது அதிக அளவு பொட்டாசியத்தையும், குறைந்த அளவு சோடியத்தையும் கொண்டுள்ளது. இதனாலேயே துரியனானது இரத்த அழுத்தத்திற்கு ஏற்ற பழமாகக் கருதப்படுகிறது.

இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியமானது உடலில் உள்ள தசைகளின் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. இதனால் இதய துடிப்பு சீராக்கப்பட்டு இதய தசைகளை நன்கு செயல்படச் செய்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்கிறது.

குறைந்த அளவு சோடியத்தைக் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இப்பழம் ஏற்றது.

 

சருமம் முதுமை அடைவதை தடுக்க

முதுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் இன்றைய சூழலில் இளம் வயதில் முடி நரைப்பது, சரும சுருக்கம் போன்றவை ஏற்படுகின்றன. அதற்கு சுற்றுசூழல் மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள உணவு பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவை காரணங்களாகும்.

இக்குறைபாடுகளை ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ள துரியன் சரியான தேர்வாகும். இப்பழத்தில் காணப்படும் நீர்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் சருமம் மற்றும் கேசம் விரைவில் முதுமை அடைவதை சரிசெய்கிறது.

 

மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மைக்கு

இப்பழத்தில் இயற்கை தூக்கத்திற்கு காரணமான டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் காணப்படுகிறது. மனப்பதட்டத்தைக் குறைக்கும் வேதிப்பொருட்களான செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்றவற்றின் வளர்சிதைக்கு டிரிப்டோபன் தேவைப்படுகிறது.

மனஅழுத்தம், பசியின்மை, பதட்டம் போன்றவற்றை குறைக்கும் பொருளாக டிரிப்டோன் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே துரியனை உண்டு தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு தீர்வினைப் பெறலாம்.

 

கருவுறுதலை ஊக்குவிக்க

கருவுறுதலுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அவசியமானது. துரியனில் இந்த ஹார்மோன் அதிகஅளவு உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழம் கருவுறுதலுக்கு இயற்கை மருந்தாகக் கருதப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் தாயின் அதிக உடல் எடை மற்றும் போதுமான எடையின்மை காரணமாக ஏற்படும் கருசிதைவினை இப்பழம் தடைசெய்கிறது. ஆண் பெண் பாலின ஹார்மோன் குறைபாடை சரிசெய்து குழந்தைப் பேற்றினை இப்பழம் வழங்குகிறது.

 

புற்றுநோயைத் தடுக்க

இப்பழத்தில் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி காம்பிளக்ஸ் போன்ற ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் போது வெளியாகும் ப்ரீரேடிக்கல்களை சரி செய்து செல்களின் உள்ள டிஎன்ஏ-வைப் பாதுகாத்து புற்றுசெல்கள் உருவாவதைத் தடை செய்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு புற்றுநோய் வராமல் பாதுகாக்கலாம்.

 

எலும்புகளைப் பாதுகாக்க

இப்பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியமும், கால்சியமும் காணப்படுகின்றன. இப்பழத்தில் நம் அன்றாட பொட்டாசிய தேவையில் இப்பழம் 9 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. மேலும் பொட்டாசியமானது உடல் கால்சியத்தை உட்கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

கால்சியம் உடலில் கரைந்து விடாமலும், உடலைவிட்டு வெளியேறி விடாமலும் எலும்புகளில் சேமிக்க பொட்டாசியம் காரணமாகிறது. எனவே இப்பழத்தினை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

 

அனீமியாவை தடுக்க

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படுகிறது. இப்பழத்தில் அதிக அளவு ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது. இந்த அமிலமே ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்பழத்தில் காணப்படும் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தால் இப்பழத்தினை உண்ணும்போது இரத்தம் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதோடு உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கி உடலினை நன்கு இயங்கச் செய்கிறது.

 

துரியனைப் பற்றிய எச்சரிக்கை

இப்பழத்தில் மற்ற பழங்களைவிட அதிக அளவு கொழுப்பு உள்ளது. இப்பழத்தினை அதிகம் உண்ணும்போது கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்கும், கொலஸ்ட்ராலின் அளவினை குறைக்க விரும்புபவர்களும் இப்பழத்தினை அளவோடு உண்ண வேண்டும்.

 

இப்பழத்தினை உண்ணும் முறை

பலாப்பழத்தினைப் போன்று இப்பழத்தினை நீளவாக்கில் கீறி உள்ளிருக்கும் மஞ்சள் நிற சதைப்பகுதியை வெளியே எடுக்க வேண்டும்.

மஞ்சள் நிற சதைப்பகுதியையும் கீறி உள்ளிருக்கும் கொட்டைகளை வெளியே எடுத்துவிட்டு பழத்தினை உண்ண வேண்டும்.

கொட்டைகளை வேக வைத்தோ, வறுத்தோ உண்ணலாம். துரியன் பழம் இனிப்புகள், கேக்குகள், பிஸ்கட்டுகள் ஆகியவற்றில் வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. காயாக‌ உள்ள துரியன்  சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

தனிப்பட்ட வாசைன உடைய சத்துக்கள் நிறைந்த துரியனை உண்டு பெரு வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்