தூக்கம் வரல – அறிவியல் குறுங்கதை

இரண்டு பேருந்துகளும் உயிரியல் பூங்காவை வந்தடைந்ததும், வேதிவாசன் நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கு சென்று விட்டார்.

அதற்கிடையில், சக ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி வரிசையாக நுழைவு வாயிலின் முன் நிற்க வைத்திருந்தனர்.

முன்னதாக வருகை பதிவும் கவனமாக எடுக்கப்பட்டிருந்தது. நுழைவுச் சீட்டுகளை வாங்கிய உடன், மாணவர்களை, ஆசிரியர்கள் வரிசையாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

இருந்த எழுபத்தைந்து மாணவர்களையும், குழுவிற்கு இருபத்தைந்து என்ற அடிப்படையில் மூன்று குழுக்களாக பிரித்தனர். ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர்.

முதலில் காலை சிற்றுண்டி பொட்டலங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன‌. அனைவரும் உண்டு முடித்த பின், தேங்கிய குப்பைகளை அங்கிருந்த குப்பைத் தொட்டிகளில் போட்டு விட்டு, விலங்குகளைக் காண பூங்காவிற்குள்ளே சென்றனர்.

மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருந்தனர். பெரும்பாலான மாணவர்கள் விலங்குகள் பற்றிய செய்திகளைக் குறிப்பெடுப்பதற்காக சிறுநோட்டு புத்தகத்தைக் கையில் வைத்திருந்தனர்.

குறிப்பு எடுப்பதன் நோக்கம் ‘கல்விச் சுற்றுலா பற்றிய கட்டுரை எழுதும்படி ஆசிரியர்கள் சொல்லலாம்’ என்ற முன்யோசனையாகவும் இருக்கலாம்.

மாணவர்கள் கண்டவை

பயணத்தைத் தொடங்கிய முதலே அங்கிருந்த மரங்கள் உள்ளிட்ட தாவரங்களை மாணாக்கர்கள் கண்டு மகிழ்ந்தனர். தாவரங்கள் பற்றிய அறிவியல் செய்திகளையும் ஆசிரியர்கள் விவரித்து கொண்டிருக்க, அனைவரும் எதிர்பார்த்தது போல், விலங்குகளைக் காணும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியது.

கூட்டமாக சேட்டை செய்து கொண்டிருந்த குரங்குகள், நெடுங்கழுத்து உடைய‌ ஒட்டகச்சிவிங்கி, கம்பீர நடைபோட்டு கர்ஜித்துக் கொண்டிருந்த சிங்கங்கள், உறுமும் புலி ஆகியவற்றைக் கண்டனர்.

பிளிறிக் கொண்டிருந்த யானைகள், துள்ளி ஓடிய அழகு மான்கள், மிரட்டிய காட்டெருமைகள், காட்டுப் பூனைகள், பெருத்த கரடிகள், சீறிப் பாய்ந்த சிறுத்தை, என பல வகையான விலங்குகளை மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.

நீரில் நீந்திக் கொண்டிருந்த நீர்யானைகள், முதலைகள், முள்ளம்பன்றி, வகைவகையான மீன் இனங்கள், பாம்புகள் முதலியனவற்றையும் மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பற்பல வண்ணங்களில் காட்சியளித்த அழகுப்பறவைகள், தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த அழகு மயில்கள், முயல்கள் முதலியனவும் மாணவர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்தன.

அவ்வப்போது விலங்குகள் பற்றிய அறிவியல் செய்திகளையும் ஆசிரியர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்களை மாணவர்கள் கண்டு களித்தனர்.  அதற்குள் மாலைப் பொழுதும் மலர்ந்தது.

மாணவர்கள் அனைவரும் பூங்காவிலிருந்து வெளியே வந்ததும், மீண்டும் வருகைப்பதிவு சரி பார்க்கப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். மாணவர்களும் அவரவர் தம் இருக்கையில் சென்று அமர்ந்தனர்.

இரவு தங்குதல்

அது இரண்டு நாட்கள் கல்விச்சுற்றுலா என்பதால், ஒரு பள்ளியில் அன்றைய‌ இரவு தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன‌.

எனவே, பேருந்துகள் அவ்விடம் நோக்கிப் புறப்பட்டன. சொல்லப் போனால் காலையில் இருந்தது போன்ற ஆரவாரம், அப்போது மாணவர்களிடையே இல்லை.

நாள் முழுவதும் சுற்றியதில் அனைவரும் உடலளவில் சோர்வு அடைந்திருந்தனர். சுமார் ஆயிரத்து ஐநூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவை சுற்றியதால் இளைப்பு ஏற்பட்டது.

சுமார் ஒருமணி நேரப் பயணத்திற்கு பின் பேருந்துகள், தங்கும் இடத்திற்கு வந்தடைந்தன.மாணவர்கள் தங்கும் அறைகளுக்கு கூட்டிச் செல்லப்பட்டு, விரைவில் இரவு உணவு உண்பதற்கு தயாராகுமாறு ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டனர்.

மாணவர்களும் அவ்வாறே செயல் பட்டனர். ஆசிரியர்கள் உணவு பரிமாற‌ மாணவர்கள் வயிராற உண்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.

பின்னர் ஆசிரியர்களும் இரவு உணவை முடித்துக் கொண்டு ‘மாணவர்கள் உறங்கச் சென்று விட்டனரா’ என்பதை உறுதி செய்த பின்னர் அவர்களது அறைக்கு சென்று விட்டனர்.

வெகுநேரமாக நடந்ததினாலும், பேருந்து பயணமும் அவர்களை வெகுவாக களைப்படையச் செய்திருந்தது. உடல் களைப்பால் சடுதியில் தூக்கம் பற்றுவது இயற்கை தானே? .

தூக்கம் வரல‌

இருந்தும் ஆசிரியர் வேதிவாசனுக்கோ தூக்கம் வரவில்லை! முயற்சித்தும் தூக்கம் வராததால், எழுந்து வெளியே சென்று இருண்ட வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், சட்டென எழுந்த கணிதநேசன், படுக்கையில் வேதிவாசனை காணாததால் எழுந்து வெளியே வந்தார். அங்கு நின்று கொண்டிருந்தவரை பார்த்தவுடன், “அய்யா என்ன இங்க நின்னுகிட்டு இருகீங்க?” எனக் கேட்டார்.

“கணி, தூக்கம் வரல” என்றார் வேதிவாசன்.

“ஆமாம் எனக்கும் தூக்கம் வரல. புது இடத்துல படுத்ததால அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வரமாட்டேங்குது” என்றார் கணிதநேசன்.

“இதெல்லாம் இயற்கை அறிவியல் தானே!” என்றார் வேதிவாசன்.

“ஓ..ஓ.. இதுக்கு பின்னணியில் அறிவியல் இருக்கா?,  கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிக்கிறேன்” என்றார் கணிதநேசன்.

“நிச்சயமா! புது இடத்துல படுக்கிறப்ப‌ தூக்கம் சீக்கிரத்துல வராததற்கு காரணம், மூளையோட கண்காணிப்புத் திறன்தான்!” என்றார் வேதிவாசன்

“என்ன, மூளையோட கண்காணிப்புத் திறனா?” என வியப்புடன் கேட்டார் கணிதநேசன்.

(உடனே) “ஆமாம், புதுஇடம் என்பதால, எந்த மாதிரியான சூழ்நிலை இருக்கும்னு தெரியாதுல. அதனால் நமது மூளை எச்சரிக்கையா இருக்குமாம். அதாவது மூளையின் அரைப்பகுதி தூக்கத்துல இருக்க மீதி அரைப்பகுதி விழிச்சிட்டு இருக்கும்” என்றார் வேதிவாசன்.

“சரி, விழிச்சிக்கிட்டு இருப்பது, வலது பக்க மூளையா? அல்லது இடது பக்க மூளையா?” என கணிதநேசன் கேட்டார்.

“பொதுவா இடது பக்க மூளைதான் இரவிலும் செயல்திறனோடு இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடிச்சிருக்காங்க.

ஆனாலும் வலது பக்க அல்லது இடது பக்க மூளைப் பகுதி மாறிமாறி செயல்படலாம்னும் விஞ்ஞானிகள் கருதுறாங்க.” என வேதிவாசன் பதிலளித்தார்.

“நல்லது வேதி. ஆனால் எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்காங்க?” என வினவினார் கணிதநேசன்.

அதற்கு வேதிவாசன் “ஆய்வகக் கருவிகள்தான் கணி, குறிப்பா, மெக்னடோ என்செ பல்லோகிராபி (magnetoencephalography), காந்த ஒத்திசைவு உருக்காட்சி (magentic resonance imaging)  மற்றும் பாலிசோம்னோகிராபி (polysomnography) ஆகிய மூன்று கருவிகளைப் பயன்படுத்தி (புதுஇடத்தில் படுக்கும்போது) மூளை இரவில் செயல்படும் விதம் பற்றி ஆராய்ச்சி செஞ்சிருக்காங்க.” என்றார்.

அதற்குள் அறையில் சத்தம் கேட்கவே, இருவரும் உள்ளே சென்றனர்.

அதற்குள், இரண்டு சகஆசிரியர்களும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்து வேதிவாசன் “என்னாச்சு?”எனக் கேட்க, அவர்கள் இருவரும் ஒரே குரலில் “தூக்கம் வரல” என்று கூறினர்.

முனைவர்.ஆர்.சுரேஷ்

சென்னை, அலைபேசி: 9941091461