ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் தூங்கணாங்குருவி ஒன்று கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து வந்தது.
ஒருநாள் கனத்த பெருமழை பெய்தது; குளிர் கடுமையாக வாட்டியது.
அப்போது அம்மரத்திற்கு குரங்கு ஒன்று வந்தது.
குரங்கு குளிரால் மிகவும் நடுங்கியது. குளிரில் நடுங்கும் குரங்கைப் பார்த்த தூக்கணாங்குருவிக்கு அதன் மேல் இரக்கம் ஏற்பட்டது.
உடனே குரங்கிடம் தூக்கணாங்குருவி “உனக்கு கை கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்றவற்றினால் ஏன் கஷ்டப்படுகிறாய்? நீ ஏன் உனக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ளக் கூடாது?” என்றது பரிவோடு.
ஆனால் அதனைக் கேட்ட குரங்கு “ஊசி மூஞ்சி மூடா. நீ வல்லவனுக்கு புத்தி சொல்கிறாயா? எனக்கு வீடுகட்டுகிற சக்தி இல்லை. அதைப் பிரித்து எரிகிற ஆற்றல் உண்டு. இதோ பார்.” என்று சீறி குருவியின் கூட்டைப் பிரித்துப் பிய்த்து எறிந்து விட்டது.
வீட்டை இழந்த தூங்கணாங்குருவி மூடனுக்கு அறிவுரை சொன்னதால் வந்த வினையை எண்ணி வருந்தியது.
குழந்தைகளே அறிவிலாதவர்களுக்கு அறிவுரை கூறினால் நமக்கு கெடுதலே நிகழும் என்பதை மேலே உள்ள கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.