தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

தமிழ்நாட்டு மக்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் பெரும்பாலும் ‘காசிக்குச் சென்று சாமியைப் பார்த்தால் புண்ணியம்’ என்று சொல்லிக் கொண்டு காசிக்கும், பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், வைஷ்ணவி தேவி கோவிலுக்கும் மற்ற இதர கோவிலுக்கும் பஸ் மூலமாகவும், டிராவல்ஸ் மூலமாகவும் சென்று வருகிறார்கள்.

அதே மாதிரிதான் வடநாட்டு மக்களும் ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரிக்கும் வந்து செல்கிறார்கள்.

இதில் உத்தியோகம் பார்க்கிறவர்களும், தொழில் செய்து வருபவர்களும் விவசாயம் செய்து வருபவர்களும் அவரவர் வேலைகளை மற்றவர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு சுமார் 10 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை ஒரே குரூப்பாக நிம்மதியாக போய் வருகிறார்கள்.

போகும் போது ஒவ்வொரு மாகாணமாக அங்கே உள்ள மக்களின் வாழ்க்கை பற்றியும், காடுகள், மலைகள், ஆறுகள் உள்ள இடங்களையும் பார்த்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும் ஒவ்வொரு கோவிலைப் பற்றி பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். அப்போது மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது.

தென்நாட்டில் உள்ள கோவில்களில் கர்ப்ப கிரஹத்தில் பூசாரியை தவிர யாரும் உள்ளே போகக் கூடாது என்கிற கட்டுப்பாடு.

ஆனால் காசியில் உள்ள சிவலிங்கத்தை ஆண், பெண் வித்தியாசம் பாராமல் எல்லோரும் மலர் சாற்றி சாமியைக் கும்பிடலாம். காசி கோவில் மிகவும் சிறியது. சுமாரான வீடு போலவே இருக்கும்.

சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள இமயமலையில் பத்ரிநாத், கேதார்நாத், மணிகான் உள்ள கோவில்களில் வெந்நீர் ஊற்றையும் கண்டு மகிழலாம். அதில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்லலாம்.

இவ்வளவு உயரமான மலையின் மேல் எங்கிருந்து வெந்நீர் வருகிறது என்று யோசித்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.

அதே மாதிரி வடநாட்டு மக்களும் தென்நாட்டிற்கு வந்து திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வந்து ஏழுமலையான் கோவில், மீனாட்சியம்மன் கோவில், ராமநாதர் கோவில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, குமரிக் கோவில் உள்ளிட்ட இடங்களைப் பார்க்கிறார்கள்.

முக்கடல் ஒன்று சேரும் கன்னியாகுமரி இடத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.

வடநாட்டில் உள்ள கோவில்கள் மிகவும் சிறியவைகளாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள கோவிலைப் பார்த்துவிட்டு இவ்வளவு பெரிய கோவிலை எப்படியெல்லாம் கட்டியிருக்கிறார்கள் என ஆச்சர்யப்பட்டு பார்த்து செல்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்கு வடநாட்டில் (தூரத்தில்) உள்ள கோவிலைப் பார்க்கச் சந்தோஷம். அதேமாதிரி வடநாட்டு மக்களுக்கு தென்நாட்டிலுள்ள கோவில்களைப் பார்க்கச் சந்தோஷம். அதுதான் தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி என்கிறோம்.

ஒரே இடத்தில் இருந்து கொண்டு பார்த்ததையே பார்த்தால் சலிப்பு தட்டும். அடுத்த இடத்தை பார்த்தால் மனதிற்குச் சந்தோசம்.

உதாரணத்திற்கு ஒரு மலையிலிருந்து வேறொரு மலையைப் பார்த்தால் அந்த மலை அழகாகத் தெரியும். அங்கே இருந்து கொண்டு இந்த மலையை பார்த்தால் இந்த மலையும் அழகாகத் தான் தெரியும்.

ஆக, கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் இல்லாத இடம் கிடையாது.

அதனால் தான் ‘கடவுள் தூசியிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

எல்லாவற்றிறகும் மனம் தான் காரணம்.

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.