அந்த கடைசி நிமிடத்து பின் நொடிகளில்
எல்லோரும் கதறி கொண்டு இருந்தார்கள்
உடைந்து உறைந்து போயிருந்த என் அருகே …
அம்மாவின் கடைசி நினைவும்
என்னை பற்றியே இருந்து
பிரிந்திருக்கக் கூடும் அவளின் மூச்சு …
எப்போதெல்லாம் பெட்டியை துடைத்து
அடுக்கி வைக்கிறாளோ
அப்போதெல்லாம் சொல்லி மகிழ்வாள்
இது உன்னை தூளிகட்டிய துணியென்று …
பொம்பள புள்ள மாதிரி அலங்கரித்து
என்னை எடுத்து வைத்திருக்கும்
போட்டோவை எடுத்துப் பார்க்கும் போதெல்லாம்
முத்தம் பதித்த பிறகே மூடி வைப்பாள்…
கட்டாந்தரையில் விழுந்ததில் விளைந்திருந்த
காலின் சிராய்ப்புகளை பார்த்து பார்த்து
விலாநோக அவள் விம்மியது
கும்மியிருட்டில் குன்றொளி போல்
பளிச்சென்று இப்போதும் நினைவுகளில் …
மனைவி மக்களென்று அடையாளக் கிளைகளை
விரித்துக் கொண்ட போதும்
குழந்தையாகவே பார்க்கிறது
இப்போதும் எப்போதும்போல
இன்னும்கூட இருக்குமந்த என்னை
தூளி கட்டிய துணி …
என்பேத்தியின் தீண்டல்கள்கூட
என் அம்மாவை நினைவு படுத்திக்
கொண்டே இருக்கிறது
அந்த விரல்களின் மென்மையில் …
எப்படியும் எதனிடத்தோ
எப்படியாவது என்னுடனேதான்
இருக்கிறாள் என் அம்மா…

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250