தென்றலே உன்னிடத்தில் கேள்வி ஒன்று கேட்கணும்
என்னவளின் ஊடலுக்கு நீதானே காரணம்
அன்றொருநாள் அவளருகில் நானிருந்த பொழுதிலே
அங்கம் தடவிச் சென்ற நீயும் அவளுக்கு உடன்பிறப்போ
செந்தாமரை மலரென அவள் சிரித்திரிந்த பொழுதிலே
செல்லமாக தவழ்ந்த கூந்தல் உன்னுடைய பிடியிலே
வந்தாய் சிறிதுநேரம் எங்களுடன் நின்றாய்
வண்ணபூவை அவள்மீது வீசிவிட்டுச் சென்றாய்
நந்தவன வாசனையில் அவளை மயங்க வைத்தாய்
நான் விரும்பும் அவள் முகத்தை என் தோள்மீது சாய்த்தாய்
குன்றிலோடும் அருவி நீரை கொண்டு வந்து தெளித்தாய்
கூடஇருந்த அவள் என்னை இறுக்கி அணைக்கச் சிரித்தாய்
தந்தனத்தோம் தாளம் போட்டு என்னைப் பாடச்சொன்னாய் -உன்
தமக்கையவள் இப்பாடல் யார் குறித்து என்றாள்
சிந்தும் தமிழ் கவிதையிங்கு யாரை நோக்கி என்றாள்
சிவந்த முகத்தோடு அங்கு விலகி ஓடிச் சென்றாள்
என் கவிதைக் கருவாக நீதானே வந்தாய்
என் காதலியின் ஊடலுக்கு காரணமாய் நின்றாய்
உன்தவறோ என்தவறோ எல்லாமே உன்னால்
உண்மை சொல்லி அழைத்துவர உடனே நீசெல்வாய்
–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942