தெய்வீகப் பழம் - மாதுளை

தெய்வீகப் பழம் – மாதுளை

மாதுளை அதனுடைய தனிப்பட்ட சுவை, மணம், ஊட்டச்சத்துகள், வளரியல்பு ஆகியவற்றின் காரணமாக தெய்வீகப் பழம் என்று அழைக்கப்படுகிறது.

இப்பழம் பண்டைய நாகரிகங்களின் புரதான இறையியல் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன நாகரிகத்தில் இது அதிர்ஷ்டப்பழமாகக் கருதப்படுகிறது. கிரேக்கத் திருமணங்களில் இப்பழம் பராம்பரிய பழமாக பயன்படுத்தப்படுகிறது.

எகிப்தியர்கள் இப்பழம் நித்தியத்தை கொடுப்பதாகக் கருதுகிறார்கள். எனவே இப்பழத்தினை அவர்கள் இறந்த உடல்களுடன் புதைத்து வைக்கிறார்கள்.

இப்பழத்தின் தனிப்பட்ட பண்புகள், ஊட்டச்சத்துக்கள் காரணமாக இது சூப்பர் பழம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது.

மாதுளை லைதிராசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் பியுனிகா கிரனேட்டம் என்பதாகும்.

 

மாதுளையின் வளரியல்பு

மாதுளை 6மீ முதல் 10மீ வரை வளரக்கூடிய சிறுமரம் அல்லது புதர்வகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இம்மரம் இலையுதிர் வகையைச் சார்ந்தது.

இம்மரம் வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் அதிகம் காணப்படுகிறது. குளிர் மற்றும் சூடான கோடையுள்ள இடங்களுக்கு இவை மிகவும் பொருத்தமானவை.

இது களர், உவர், அமிலத்தன்மை கொண்ட மண் உட்பட எல்லா மண்வகைகளிலும் செழித்து வளரும். இதுவே இதனுடைய தனிப்பட்ட சிறப்பாகும். நல்ல வெப்பம் மற்றும் அதிகக் குளிரில் இம்மரம் அதிகளவு பழங்களைத் தருகிறது.

மாதுளையின் தண்டானது செம்பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும். இம்மரக்கிளைகள் வலிமை மிகுந்து முட்கள் போன்ற தோற்றத்தில் காணப்படும். இவற்றின் வேர்கள் ஆழமானவை.

இத்தாவரம் நெடுநாட்கள் வாழக்கூடியது. இத்தாவர இலைகள் சிறியதாகவும், பளபளப்பான பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன.

இம்மரத்தின் பூக்கள் கவர்ச்சிகரமான சிவப்பு நிறத்தில் மெல்லிய இதழ்களை உட்புறத்திலும், கடினமான இதழ்களை வெளிப்புறத்திலும் கொண்டிருக்கின்றன.

 

மாதுளம்பூ
மாதுளம்பூ

 

இப்பூக்களிலிருந்து பச்சைநிற காய்கள் உருண்டை வடிவத்தில் தோன்றுகின்றன. இக்காய்களிலிருந்து அடர் சிவப்பு, ஆரஞ்சு-மஞ்சள், கருஊதா போன்ற வெளிப்புறத்தோல் நிறங்களில் பழங்கள் தோன்றுகின்றன.

பழங்கள் உருண்டையாக ஆப்பிள் போன்று முன்புறத்தில் பூப்போன்ற அமைப்புடன் காணப்படுகின்றன. இப்பழங்கள் பொதுவாக 6-10செமீ விட்டத்திலும், 300 கிராம் எடையிலும் இருக்கின்றன.

 

மாதுளம் பழங்கள்
மாதுளம் பழங்கள்

 

பழத்தின் வெளிப்புறத்தோலானது பளபளப்பாக தோல் போன்று இருக்கும். பழத்தின் உட்புறம் இளம் மஞ்சள் நிறத்தில், மெல்லிய, பளபளப்பான தோல் போன்ற பகுதியால் தனித்தனியாக பிரிப்பட்டிருக்கும்.

அதனுள் முத்துக்கள் போன்ற விதைகள் காணப்படுகின்றன. விதைகள் அடர்சிவப்பு, வெள்ளை கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

மாதுளை பயிர் செய்து ஒரு வருடத்தில் காய்க்கத் தொடங்கும். எனினும் பெரும்பாலானவை 2½-3 ஆண்டுகள் இடைவெளியில் காய்க்கின்றன. மாதுளம்பூ பூத்து 5 முதல் 7 மாதங்களில் காய் காய்க்கத் தொடங்குகின்றது.

மாதுளையின் வரலாறு

மாதுளையின் தாயகம் மத்திய கிழக்கு ஆசியா மற்றும் இமயமலையின் அடிவாரப்பகுதி எனக் கருதப்படுகிறது. இப்பழமானது ஆசியா, காகசஸ், வடஆப்பிரிக்கா, மத்தியதரைக்கடல் பகுதி ஆகிய இடங்களில் பண்டைய காலங்களிலிருந்து பயிரிடப்பட்டது.

இப்பழம் எகிப்து, சீனா, ஆப்கானிஸ்தான், துருக்கி, சிரியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஈரான், ஈராக், இந்தியா, மியான்மார், சௌதிஅரேபியா போன்ற இடங்களில் அதிகம் தற்போது வணிகரீதியாக பயிர்செய்யப்படுகிறது.

உலகின் சிறந்த மாதுளம் பழங்கள் ஆப்கானிஸ்தானின் காந்தகார், பால்க், ஹெல்மாண்ட், நிம்ருஸ் ஆகிய மகாணங்களில் விளைகின்றன.

 

மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

மாதுளையில் விட்டமின் சி,இ,கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) போன்றவை காணப்படுகின்றன.

இப்பழத்தில் தாதுஉப்புக்களான மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், துத்தநாகம், செம்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

இப்பழம் குறைந்தளவு எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதம், அதிகளவு நார்ச்சத்து, நீர்ச்சத்து முதலியவைகளைக் கொண்டுள்ளது.

 

மாதுளையின் மருத்துவ பயன்கள்

மாதுளையின் பூக்கள், பட்டைகள், காய்கள், பழங்கள், வேர்கள் ஆகியவை மருந்துப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்ய

மாதுளையின் பட்டை, தோல், பழம் ஆகியவை செரிமானக் கோளாறுகளால் உண்டாகும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்கிறது. மாதுளையின் சாறு வயிற்றுப்போக்கு, காலரா ஆகியவற்றிற்கும் மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

 

இதயநோய்கள் வருவதைத் தடுக்க

மாதுளம்பழச்சாற்றினை தொடர்ந்து அருந்தும்போது அது இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

மேலும் இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதய நரம்புகளில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து நரம்புகளில் அடைப்புகள் உண்டாவதைத் தடைசெய்கிறது. இதனால் இதயக்நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

 

புற்றுநோய் வருவதைத் தடுக்க

இப்பழத்தில் பிளவனாய்டுகள் எனப்படும் உயர்தர ஆன்டிஆக்ஸிஜென்டுகள் காணப்படுகின்றன. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்கள் உடலில் பல்வேறு புற்றுநோய்களை உருவாக்குகின்றன.

பிளவனாய்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து புற்றுநோய் உண்டாவதை தடைசெய்கிறது. இப்பழச்சாற்றினை தொடர்ந்து அருந்தும்போது ஏற்கனவே உள்ள புற்றுச்செல்களும் அழிகின்றன. எனவே இப்பழத்தினை அடிக்கடி உண்டு புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம்.

 

பற்களின் பாதுகாப்பிற்கு

மாதுளையில் உள்ள பாக்டீரிய, வைரஸ் எதிர்ப்பு பொருட்கள் பற்களில் பாதிப்பு ஏற்படுவதை தடைசெய்கிறது. மேலும் இப்பழம் வாயில் உண்டாகும் தொற்றுநோய்களையும் தடைசெய்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

 

கீல்வாதத்தினைத் தடுக்க

கீல்வாதம் மற்றும் வாதநோய்கள் குருத்தெலும்புகள், மூட்டுகளில் உள்ள தமனி நரம்புகளின் தடிப்புகள் மற்றும் கடினத்தன்மையால் உண்டாகின்றன. இப்பழச்சாறானது நரம்புகளின் கடினத்தன்மை மற்றும் தடிப்புகளைக் குறைத்து வாதநோய்களைத் தடுக்கிறது.

மேலும் இப்பழச்சாறு இணைப்புத்திசுகளில் பாதிப்பினை உண்டாக்கும் நொதிகளின் சுரப்பினைத் தடைசெய்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு வாதநோய்கள் ஏற்படுவதைத் தடைசெய்யலாம்.

 

அனீமியாவை சரிசெய்ய

இப்பழமானது இரத்தத்திற்கு தேவையான இரும்புச்சத்தினை வழங்குகிறது. இதனால் இரும்புசத்து குறைபாட்டால் உண்டாகும் அனீமியா (தூக்கமின்மை, சோர்வு) உள்ளிட்டவற்றை சரிசெய்கிறது. இதனால் இப்பழத்தினை உண்டு அனீமியாவை சரிசெய்யலாம்.

 

மனஅழுத்தத்தைக் குறைக்க

மாதுளைச்சாற்றினை அருந்தும்போது மனஅழுத்தத்திற்குக் காரணமான கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பினைக் கட்டுப்படுத்தி மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. மனஅழுத்தம் உள்ளவர்கள் இப்பழச்சாற்றினை தொடர்ந்து அருந்தும்போது மனஅழுத்தம் குறைவதை உணரலாம்.

 

மாதுளையை வாங்கி உபயோகிக்கும் முறை

மாதுளை வாங்கும்போது அதன் மேற்புறத்தோல் சீரான நிறத்துடன், விரலால் சுரண்டும்போது திடமான ஒலியுடன் இருப்பதை வாங்க வேண்டும்.

கையில் தூக்கும்போது கனமானதாக, விறைப்பானதாக உள்ளவற்றை வாங்கவேண்டும். மிகவும் மென்மையான, வெடிப்புகள் நிறைந்த, மேற்தோல் சுருங்கியவற்றைத் தவிர்க்கவும்.

இப்பழத்தினை அறையின் வெப்பநிலையில் 5-8 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியில் இருவாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இப்பழமானது அப்படியேவோ, பழச்சாறாகவோ உண்ணப்படுகிறது.

மாதுளையில் இருந்து சாலட்டுகள், சூப்புகள், சர்ப்பத்துகள், ஜெல்லிகள், கேக்குகள், இனிப்புகள், குளிர்பானங்கள் தயார் செய்யப்படுகின்றன.

இப்பழம் சுவை, மணம், நிறம் ஆகியவற்றிற்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகின்றது.

சத்துக்கள் நிறைந்த தெய்வீகப்பழமான மாதுளையை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

-வ.முனீஸ்வரன்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.