புதிதாக தைத்திங்கள் முதல் நாள் பிறந்து வரும் தைமகளை ஒவ்வொரு இல்லமும் வரவேற்று தத்தம் இல்லங்களிலே அவளது வளங்களை இருக்கச் செய்வதே தைப் பொங்கல்.
“தைப்பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர்களின் இல்லங்களிலே உள்ளங்களிலே ஏற்படும் நல்லதொரு மாற்றங்களை குறிக்கும் என்பது மரபு.
தைப் பொங்கள் மூலம் இயற்கைப் படைப்புகளை வணங்குகின்றோம். நமக்கு இப்புவியில் வாழ வகை செய்யும் விதத்தில் அனைத்தையும் தந்து உதவும் இயற்கை இறைவனுக்கு இதன் மூலம் நன்றிகளையும் உரித்தாக்குகின்றோம்.
புதிதாக விளைந்த நம் முக்கிய உணவான அரிசி மற்றும் காய்கறிகள், பழங்கள் இவற்றை இறைவனுக்குப் படைத்து தமிழர்களின் முக்கிய குணமான விருந்தோம்பலையும் நன்றி உணர்வையும் வெளிப்படுத்துகின்றோம்!
நமக்கு உணவளித்த இயற்கைக்கு நாம் பக்தியுடன் புதுப்பானையில் புதுஅரிசியில் இனிப்பு கலந்து தித்திக்கும் பொங்கலுடன், கரும்பையும் சேர்த்து மாக்கோலம் இட்ட மனையில், வாழை இலையில் அனைத்தையும் படைத்து கதிரவனை வணங்குகிறோம்!
இப்புதிய நாளில் புதிய பல நல்ல திட்டங்களை செயல்படுத்த துவங்குவார்கள். தை மாதம் மங்கலம் தரும் மாதமாகும். இந்நாளில் எடுப்பதை விட அதிகம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கைப்படி இயற்கை அன்னையை சுரண்டாது நாமும் வாழ்ந்து இயற்கையையும் பாதுகாத்து வளமாக்குவோம்! வளம் பெறுவோம்! என்ற சபதம் எடுப்போம். அவ்வாறு முயன்றால் ஒவ்வொரு தைப் பொங்கலும் சத்தியமாக தித்திக்கும் வளமான சர்க்கரைப் பொங்கல் தான் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை!
– ஜெயந்தி
மறுமொழி இடவும்