தைரியத்தின் மறுபெயர்

தைரியத்தின் மறுபெயர் உங்களுக்குத் தெரியுமா? அதுதான் தன்னம்பிக்கை. ஒருவர் தன் வாழ்வின் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது.

தைரியத்துடன் கூடிய தன்னம்பிக்கையே நம்மை வாழ வைக்கும். இதனை ஒரு கதை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

விளக்கக் கதை

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் காலையில் எழுந்ததும் சூரியனின் உதயத்தை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் அவன் காலையில் கண் விழித்து சூரியனை பார்க்க நினைக்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பிச்சைகாரனைப் பார்க்க நேர்ந்தது.  அவ்வளவுதான் அரசனுக்கு கோபம் வந்தது.

கோபத்துடன் நடக்கையில் அவனுடைய காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தது. இதனைப் பார்த்தவுடன் அரசனின் கோபம் அதிகமாகி பிச்சைக்காரனை அரசவைக்கு இழுத்து வரும்படி உத்தரவிட்டான்.

அரசனின் உத்தரவை ஏற்று காவலர்களும் பிச்சைக்காரனை அரசவைக்கு இழுத்து வந்தனர்.

அரசன் “நான் இன்று காலையில் இந்த பிச்சைகாரனின் முகத்தில் விழித்தால் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயம் உண்டாகக் காரணமான இவனை தூக்கிலிடுங்கள்” என்று ஆணை பிறப்பித்தான்.

அரசனின் ஆணைக் கேட்டதும் பிச்சைக்காரன் அதிர்ச்சி அடையாமல் கலகல எனச் சிரித்தான்.

பிச்சைகாரனின் சிரிப்பைக் கண்டு அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திகைத்தனர்.

அரசன் பிச்சைக்காரனிடம் “நீ ஏன் இப்பொழுது சிரிக்கிறாய்?. உனக்கு மரணத்தைக் கண்டு பயம் வரவில்லையா?” என்று கேட்டான்.

அதற்கு பிச்சைக்காரன் “அரசே தாங்கள் என் முகத்தில் விழித்தால் உங்களுக்கு காலில் காயம் உண்டானது. ஆனால் நானோ இன்று தங்களின் முகத்தில் விழித்தேன்.

அதற்குப் பரிசாக எனக்கு இன்று மரண தண்டனைக் கிடைத்திருக்கிறது. மக்களுக்கு இப்போது ஒன்று நன்றாகப் புரிந்திருக்கும்.

அரசனின் முகத்தில் எவன் விழித்தாலும் மரணம் நிச்சயம். அரசனின் முகம் அவ்வளவு ராசியானது என்று நாடே சிரிக்கும். அதனை நினைத்தேன், சிரித்தேன்” என்று கூறினான்.

அரசனுக்கு அப்போதுதான் புரிந்தது தான் செய்த தவறு. அதனால் பிச்சைகாரனின் தண்டனையை உடனே ரத்து செய்தான்.

பிச்சைகாரனின் தைரியம், சமயோசிதம் ஆகியவையே அவனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றின.

தன்னம்பிக்கை உள்ளவனிடமே தைரியம் நிலைக்கும். சமயோசிதம் பிறக்கும். ஆதலால்  தன்னபிக்கை கொள்வீர். வாழ்வில் வெற்றி காண்பீர்.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.