நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்

நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம் என்ற பழமொழியை ஆற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த பாட்டி கூறுவதை வரிக்குதிரை வண்ணமுத்து கேட்டது.

பாட்டியிடம் இருந்து பழமொழிக்கான விளக்கம் ஏதேனும் கிடைக்கிறதா என்ற எண்ணத்தில் கூட்டத்தினர் பேசுவதை தொடர்ந்து கேட்கலானது.

கூட்டத்தில் பெண் ஒருத்தி “பாட்டி இந்த பழமொழி யாரையும் கேலி செய்வதற்காக கூறப்படுவதா?. இப்பழமொழிக்கான விளக்கத்தை கூறுங்கள்” என்று கேட்டாள்.

பாட்டியும் “நீ சொல்வது சரிதான். இதனை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்.

பாட்டி சொன்ன கதை

ஒரு ஊரில் ஒரு காலை இழந்த ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நெடு நாட்களாக ஒரு ஆசை, மனதில் இருந்து வந்தது. என்றாவது ஒரு நாள் நாமும் பிறரைப் போல ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து வாழ வேண்டும் என்பதே அந்த ஆசையாகும்.

ஆனால் கால் இழந்த அவனுக்கு பெண் கொடுக்கத்தான் ஆள் இல்லை.
பண்டைய நாட்களில் நம் நாட்டில் ஒரு பழக்கம் இருந்தது.

அதாவது அண்ணன் தம்பி இருவருரில் யாராவது ஒருவர் அவலட்சணமாக இருந்தால், அவர் தனது சகோதரனைக் காட்டி பெண் பார்ப்பர். யார் மாப்பிள்ளை என திருமண நாளன்று தான் தெரியும்.

இதே போலவே பெண்களிலும் அழகு குறைந்தவளுக்காக அழகான பெண்ணைக் காட்டி ஏமாற்றி கட்டிக் கொடுப்பதும் அன்றைய நாட்களில் வழக்கத்தில் இருந்துள்ளது.

காலை இழந்தவனும் இதைப் போலவே செய்ய எண்ணினான். தனக்கு பெண் பார்க்க தனது வயதினை ஒத்த சித்தப்பா முறையில் உள்ள உறவினன் ஒருவனின் உதவியை நாட காலை இழந்தவன் எண்ணினான்.

அவன் தனது சித்தப்பாவிடம் சென்று “சித்தப்பா எனக்கு நல்ல பெண்ணாகப் பார்த்து வாருங்கள்!” எனக்கூறி கைச்செலவுக்காக பணமும் கொடுத்தனுப்பினான்.

காலை இழந்தவனுக்கு பெண் தேடச் சென்ற சித்தப்பனும் பல இடங்களில் தேடி அலைந்தான். பின் ஒரு கிராமத்தில் அமைதியான அழகான ஒரு பெண்ணைக் கண்டு பேசி முடித்தான்.

திடீரென சித்தப்பாவின் மனதில் ஒரு எண்ணம் உண்டானது. “இவ்வளவு அழகான, நாம் தேடிக் கண்டுபிடித்தப் பெண்ணை போயும் போயும் அந்த முடவனுக்கா கட்டி வைப்பது? நாமே திருமணம் செய்து கொள்ளலாமே?” என்று எண்ணி அவளையே திருமணமும் செய்து கொண்டானாம்.

இவ்வாறு நடக்க இயலாதவன் சித்தப்பனை பெண் பார்க்கச் சொல்ல, சித்தப்பனோ நடக்க இயலாதவனுக்காக பார்த்த தானே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான்.

அது முதலாக ‘நடக்க மாட்டாதவன் சித்தப்பனிடம் பெண் கேட்டானாம்’ என்ற பழமொழி உருவானது. அதுவே நாளடைவில் ‘நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்’ என பொருள் மாறி இன்று நம்மால் பேசப்படுகிறது.

செய்யக்கூடாத செயலை செய்துவிட்ட ஒருவரை கேலி செய்வதற்காக இந்தப் பழமொழியை கூறுவது வழக்கம்.” என்று பாட்டி கூறினார்.

பழமொழி மற்றும் விளக்கத்தைக் கேட்ட வரிக்குதிரை காட்டை நோக்கி ஓடியது. வட்டப்பாறையில் எல்லோரும் பழமொழி பற்றி அறிய ஆவலுடன் காத்திருந்தனர்.

கூட்டத்திற்கு வருகை தந்த காக்கை கருங்காலன் “என் அருமைக் குஞ்சுகளே, குட்டிகளே உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

வரிக்குதிரை வண்ணமுத்து “தாத்தா, நான் இன்றைக்கு நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம் என்ற பழமொழி மற்றும் அதற்கான விளக்கத்தைக் கூறுகிறேன்” என்று தான் கேட்டறிந்தை முழுவதுமாக கூறியது.

அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “குழந்தைகளே வண்ணமுத்து கூறிய பழமொழி மற்றும் அதன் விளக்கம் எல்லோருக்கும் புரிந்தது தானே. நாளை மற்றொரு பழமொழி பற்றி தெரிந்து கொள்வோம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.