நட்சத்திர பழம் இந்தியாவில் குறைந்தளவு கிடைக்கும் பழவகைகளுள் ஒன்று. இப்பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் தின்பதற்கு நெல்லிக்காயைப் போன்று ருசிக்கும்.
இப்பழம் பச்சை கலந்த மஞ்சள் நிறத்துடன் பளபளப்பாக இருக்கும். இப்பழமானது அன்னாச்சி, எலுமிச்சை, பிளம்ஸ் ஆகிய பழங்களின் வாசனைக் கலந்தது போல் இருக்கும் தனிப்பட்ட மணத்தினை உடையது.
நட்சத்திர பழத்தின் தாயகம் மலேசியா ஆகும். தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, மியான்மார், இந்தோனேசியா ஆகிய இடங்களில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.
தென்அமெரிக்கா, தென் ஐக்கிய அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களிலும் இது பயிர் செய்யப்படுகிறது. தெற்காசியா, கிழக்காசியா, தென் பசிபிக் ஆகிய இடங்களில் இப்பழம் மிகவும் பிரபல்யமானது.
இப்பழம் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் செழித்து வளரும் புதர் போன்ற மர வகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இப்பழ மரம் 6-9 மீ உயரம் வரை வளரும் வளரியல்பினை உடையது.
இம்மரமானது பயிர் செய்து 3 முதல் 4 வருடங்களில் பலன் தரத் தொடங்கும். இப்பழ மரம் தொடர்ந்து 40 வருடங்கள் வரை பலன் தரும். இம்மரத்தில் இளஞ்சிவப்பு நிற மணி வடிவ பூக்கள் கொத்தாக காணப்படுகின்றன.
இப்பழம் பச்சை கலந்த மஞ்சள் வண்ணத்தில் நீள் வட்டவடிவில் பளபளப்பாக ஐந்து விளிம்புகளுடன் 60 முதல் 130 கிராம் எடையில் காணப்படும். இப்பழத்தின் சதைப்பகுதியானது நீர்சத்து மிகுந்து மிருதுவாக புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும்.
இப்பழத்தின் நடுவில் 10 முதல் 12 பழுப்பு நிற விதைகள் காணப்படும். இப்பழத்தினை குறுக்குவாக்கில் வெட்டும்போது பழத்துண்டு ஐந்து விளிம்புகளை உடைய நட்சத்திரம் போன்று காணப்படும். அதனால் இப்பழம் நட்சத்திர பழம் என்றழைக்கப்படுகிறது.
நட்சத்திரப்பழத்தில் காணப்படும் சத்துக்கள்
இப்பழத்தில் விட்டமின்கள் ஏ,சி,இ, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃளோவின்), பி3 (நியாசின்), பி6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் போன்றவைகளும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும், கார்போஹைட்ரேட், புரதச் சத்து, நார்ச்சத்து, நீர்சத்து, குறைந்த அளவு எரிசக்தி ஆகியவையும் காணப்படுகின்றன.
நட்சத்திர பழத்தின் மருத்துவப் பண்புகள்
உடல் எடை குறைப்பிற்கு
இப்பழமானது அதிகளவு நார்சத்து மற்றும் நீர்சத்தினையும், தேவையான தாதுஉப்புக்களையும் குறைந்த அளவு எரிசக்தியையும் கொண்டுள்ளது. இதனால் இப்பழத்தினை உடல் எடையை குறைக்க விரும்புவோர் இடைவேளை உணவாக உண்ணலாம்.
இப்பழத்தில் அதிகம் உள்ள நார்சத்து வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. நீர்சத்தானது உடல் எடை குறைப்பதற்கான உடற்பயிற்சியின்போது உடலுக்கு தேவையான நீரினை வழங்குகிறது.
இப்பழத்தில் உள்ள தாது உப்புக்கள் நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி உடலினை பலப்படுத்துகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்டு நல்ல பலனைப் பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெற
இப்பழமானது அதிகளவு விட்டமின் சி-யினைக் கொண்டுள்ளது. இப்பழமானது ஒரு நாளைக்கான விட்டமின் சி தேவையில் 57 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
பொதுவான நோய்களான சளி, இருமல், ஜலதோசம், வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று ஆகியவற்றிலிருந்து விட்டமின் சி பாதுகாக்கிறது.
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் சுற்றுப்புறச்சூழலால் ஏற்படும் நச்சுக்கள் மற்றும் உடல் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் தாக்குதல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றன.
மேலும் விட்டமின் சி-யானது உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. நம் உடல் செயலான வியர்த்தலின் போதும், கழிவாகவும் வேகமாக வெளியேற்றப்படுகிறது. இதனால் விட்டமின் சி நிறைந்த இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சீரான இதய செயல்பாட்டிற்கு
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைச் சீர்செய்து சீரான இதய செயல்பாட்டிற்கு வழிசெய்கிறது. இப்பழத்தில் உள்ள மெக்னீசியம் சோடியத்தின் அளவினை வரைமுறைப்படுத்தி உடலின் இதயம் உட்பட எல்லா தசைகளின் செயல்பாட்டினையும் சீராக்குகிறது. சீரான இதய தசை செயல்பாட்டினால் இரத்த ஓட்டம் சீராகி உடல் நலம் பேணப்படுகிறது.
புற்று நோயிலிருந்து பாதுகாப்பு
உடலின் வளர்ச்சி சிதை மாற்றத்தின்போது வெளியாகும் ப்ரீ ரேடிக்கல்கள் செல்களில் உள்ள டிஎன்ஏ-களை சிதைவுறச் செய்து உடல் உறுப்புகளில் புற்று நோயை உருவாக்குகின்றன.
ஆன்டிஆக்ஸிஜென்டுகள் குறையும்போது ப்ரீ ரேடிக்கல்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் அதிகம் உள்ள இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்வதோடு நல்ல செல்களின் பாதிப்பையும் குறைக்கும். இதனால் புற்று நோயின் தாக்குதலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
சருமப்பாதுகாப்பு
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி-யானது சருமத்தில் காணப்படும் கழிவுகளை வெளியேற்றி சருமத்தினைப் பொலிவுறச் செய்கின்றது. மேலும் இப்பழத்தினை உண்ணும்போது சருமானது நீர்சத்துடன் சுருக்கங்கள், பருக்கள் இன்றி பளபளப்பாக இருக்கும். எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு சருமப் பாதுகாப்பினைப் பெறலாம்.
நல்ல செரிமானத்திற்கு
இப்பழத்தில் காணப்படும் அதிகளவு நார்ச்சத்து உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இப்பழத்தினை உண்டு மலச்சிக்கல், குடல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
தாய்பால் சுரக்க
பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது. எனவே பிரசவித்த தாய்மார்கள் இப்பழத்தினை உண்டு பால்சுரப்பிற்கு இயற்கை வழியில் நிவாரணம் பெறலாம்.
நட்சத்திர பழத்தினைப் பற்றிய எச்சரிக்கை
இப்பழத்தில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகளவு காணப்படுகிறது. எனவே சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இப்பழத்தினை தவிர்ப்பது நலம்.
நட்சத்திர பழத்தினை உண்ணும் முறை
ஒரே சீரான நிறத்துடன் மேற்பரப்பில் காயங்கள் ஏதும் இல்லாத கனமான பழத்தினை தேர்வு செய்ய வேண்டும். தொட்டால் மிகவும் மெதுவாக உள்ள பழத்தினை தவிர்த்து விடவேண்டும்.
இப்பழத்தினை அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இப்பழத்தினை தேர்வு செய்யும்போது நீளமாகவும், சதைப்பற்று அதிகம் உள்ளதைத் தேர்வு செய்யவும்.
இப்பழத்தினை நீரில் நன்கு கழுவி அப்படியேவோ அல்லது பழக்கலவைகளில் சேர்த்தோ உண்ணப்படுகிறது. இப்பழம் ஜாம்கள், இனிப்புகள், சாலட்டுகள் தயார் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
சத்துக்கள் நிறைந்த நாவில் நீர் ஊறவைக்கும் நட்சத்திர பழத்தினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்