நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்

நன்னீர் வாழிடம் நீர் வாழிடத்தின் முக்கிய பிரிவாகும். நன்னீர் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உப்பினைக் கொண்டுள்ள நீரினைக் குறிக்கும்.

உலகின் எல்லா கண்டங்களிலும் நன்னீர் வாழிடம் உள்ளது. நன்னீரானது ஆறுகள், குளங்கள், நீரோடைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஊற்றுக்கள் ஆகியவற்றில் உள்ளது.

உலகில் உள்ள மொத்த நீரில் மூன்று சதவீதம் நன்னீர் ஆகும். நன்னீரின் 99 சதவீதம் உறை பனியாகவும், பனிக்கட்டியாகவும் உள்ளது.

சுமார் 700 வகை மீன்கள் மற்றும் 1200 வகையான இருவாழ்விகளுக்கு இவ்வாழிடம் புகலிடமாக உள்ளது. புவியில் 20 சதவீதம் நன்னீர் வாழிடத்தால் சூழப்பட்டுள்ளது.

உலகின் உள்ள உயிரினங்களின் தாகத்தினை நன்னீரானது பாதிக்கும் மேற்பட்டளவு பூர்த்தி செய்து தாகம் தீர்க்கும் ஊற்று போல செயல்படுகிறது.

நன்னீர் வாழிடத்தின் வெப்பநிலையானது 39 முதல் 71 பாரன்கீட் வரை இருக்கும். நன்னீர் வாழிடமானது சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை உள்ளது.

அமெரிக்காவில் உள்ள‌ ஃப்ளோரிடா எவர்கிலேட்ஸ் உலகின் மிகப்பெரிய நன்னீர் வாழிடமாகும்.

 

ஃப்ளோரிடா எவர்கிலேட்ஸ்
ஃப்ளோரிடா எவர்கிலேட்ஸ்

 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இடங்களில் இவ்வாழிடம் அமைந்துள்ளதால் இவ்வாழிடம் நிறைய உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ளது.

நன்னீர் வாழிடமானது ஒன்றைப் போல் மற்றொன்று இருப்பதில்லை. லிம்னாலஜி என்பது நன்னீர் சூழல் அமைப்பினைப் பற்றிப் படிக்கும் அறிவியலாகும்.

 

நன்னீர் வாழிடத்தின் பிரிவுகள்

நன்னீர் வாழிடமானது லென்டிக் மற்றும் லோடிக் என இருப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

நிலையாக நிற்கும் நீர் லென்டிக் எனவும், ஓடிக்கொண்டிருக்கும் நீர் லோடிக் எனவும் அழைக்கப்படுகிறது.

குளங்கள், குட்டைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவை லென்டிக் பிரிவைச் சார்ந்தது. ஆறுகள், நீரோடைகள் ஆகியவை லேடிக் வகையைச் சார்ந்தவை.

குளங்கள் மற்றும் ஏரிகள்

குளங்கள் மற்றும் ஏரிகள் ஒருசில சதுரமீட்டரிலிருந்து ஆயிரம் சதுரகிமீ வரை காணப்படும்.

இவற்றில் சில பருவகாலத்தை சார்ந்தவை. அதாவது மழைகாலத்தில் மட்டும் நீரினைக் கொண்டிருக்கும்.

குளங்கள் மற்றும் ஏரிகள் நீண்டகாலத்திற்கு முன்னதாகவே உருவானவை.

 

குளம்
குளம்

 

அதிகப்பட்சம் ஆழம் 10 அடி வரை உள்ள நீர்நிலைகள் குளங்கள் என்றும். அதிகபட்சம் ஆழம் 10 அடிக்கும் அதிகமாக உள்ளவை ஏரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

 

ஏரி
ஏரி

 

இவ்வகை நீர்நிலைகள் ஆழம் மற்றும் கரையில் இருந்து அமைந்துள்ள தூரம் ஆகியவற்றைப் பொறுத்து மூன்று மண்டலகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை லிட்டோரல் அல்லது மேற்பரப்பு மண்டலம், லிம்னெடிக் அல்லது நடுப்பகுதி மண்டலம், ஆழமான மண்டலம் ஆகியவை ஆகும்.

 

லிட்டோரல் அல்லது மேற்பரப்பு மண்டலம்

கரைப்பகுதியை ஒட்டிய நீர்நிலையின் மேலே உள்ள பகுதி மேற்பரப்பு மண்டலம் ஆகும்.

ஆழம் குறைந்த பகுதி ஆதலால் சூரியஒளியினைப் பெற்று இப்பகுதி வெப்பமாக உள்ளது.

இப்பகுதியில் ஆல்காக்கள், பாசிகள், தாமரை, அல்லி உள்ளிட்ட மிதக்கும் நீர்வாழ்த்தாவரங்கள், நத்தைகள், மீன்கள், பூச்சிகள், லார்வாக்கள் உள்ளிட்ட கலவையான உயிரினங்கள் காணப்படுகின்றன.

 

ஆல்கா
ஆல்கா

 

இப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாம்புகள், ஆமைகள், வாத்துக்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாக அமைகின்றன.

 

வாத்துகள்
வாத்துகள்

 

லிம்னெடிக் அல்லது நடுப்பகுதி மண்டலம்

மேற்பரப்பிற்கு கீழே அதனை ஒட்டி அமைந்த பகுதி நடுமண்டலம் ஆகும். இப்பகுதி நீரில் ப்ளாங்டன்கள் மற்றும் நன்னீர் மீன்கள் அதிகளவு காணப்படுகின்றன.

 

பிரானா நன்னீர் மீன்
பிரானா நன்னீர் மீன்

 

ஆழமான மண்டலம்

நடுமண்டலத்திற்கு கீழே உள்ளது ஆழமான மண்டலம் ஆகும். இப்பகுதியில் தண்ணீரானது மிகவும் குளிர்ந்தும் அடர்த்தியாகவும் காணப்படுகிறது.

இப்பகுதியில் சூரியஒளியானது மிகக்குறைவாகவே உள்ளது. இங்கு ஹெட்ரோட்ரோப்கள் எனப்படும் விலங்குள் காணப்படுகின்றன.

இவை இறந்த அடியில் சேகரமாகும் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன.

இங்கு கோடை மற்றும் குளிர் காலத்தில் வெப்பநிலையானது 4 டிகிரி செல்சியஸாக உள்ளது.

குளங்கள் மற்றும் ஏரிகளில் தாமரை, அல்லி, வெங்காயத் தாமரை, ஆகாயத்தாமரை, புற்கள் உள்ளிட்ட தாவரங்களும், நத்தைகள், பூச்சிகள், புழுக்கள், ஆமைகள், தவளைகள், மீன்கள் உள்ளிட்ட விலங்குகளும் காணப்படுகின்றன.

 

அல்லிப்பூக்கள்
அல்லிப்பூக்கள்

 

ஆறுகள் மற்றும் நீரோடைகள்

ஓடிக்கொண்டிருக்கும் நீரினைக் கொண்டுள்ள ஆறுகள் நீரோடைகள் ஆகியவை லோடிக் வகையைச் சார்ந்தவை. ஆறுகள் மற்றும் நீரோடைகள் ஒரே திசையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன.

 

ஆறு
ஆறு

 

இவ்வகையில் நீரானானது உற்பத்தியாகும் இடத்தில் குளிர்ச்சியாகவும், ஏனைய இடங்களில் வெப்பமாகவும் இருக்கும்.

உலகின் எல்லா இடங்களிலும் ஆறுகளும் நீரோடைகளும் பலநூறு மைல்கள் பயணித்து இறுதியில் கடலில் கலக்கின்றன.

பொதுவாக மரங்கள் ஆற்றின் கரையோரங்களில் வளருகின்றன. நீர்வாழ் புற்கள், மரங்கள் போன்றவை ஆற்றில் வளரும் தாவரங்கள் ஆகும்.

 

நீர்வாழ் புற்கள்
நீர்வாழ் புற்கள்

 

மீன்கள், நண்டுகள், பாம்புகள், முதலைகள், நத்தைகள், ஓட்டர்கள், பூச்சிகள் ஆகியவை இங்கு காணப்படும் விலங்குள் ஆகும்.

 

முதலை
முதலை

 

 

ஓட்டர்
ஓட்டர்

 

நன்னீர் வாழிடத்தின் முக்கியத்துவம்

நன்னீர் வாழிடமானது சுமார் 100000 அதிகமான உயிரினங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது.

 

அன்னம்
அன்னம்

 

பல்லுயிர், பொருளாதாரம், பொழுபோக்கு, கலாச்சார முக்கியத்துவம் மற்றும் நம்முடைய அடிப்படைத் தேவையான நீர் ஆகியவற்றை நன்னீர் வாழிடம் நமக்கு வழங்குகிறது.

 

நன்னீர் வாழிடம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்

இன்றைக்கு சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவை நன்னீர் வாழிடம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் ஆகும்.

சுற்றுசூழல் மாசுபாடு

நில மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு ஆகியவை நன்னீர் வாழிடத்தை அதிகளவு பாதிப்படையச் செய்கின்றன.

இதனால் இவ்வாழிடத்தை சார்ந்த உயிரினங்கள் பாதிப்படைவதோடு சில உயிரினங்கள் அழிந்தும், சிலவை அழியும் தருவாயிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக கங்கை ஆற்றின் டால்பின்களைக் கூறலாம்.

உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல் நிகழ்வினால் மழைப்பொழிவு குறைந்து நன்னீர் வாழிடத்தில் நீரினை பற்றாக்குறையினை உண்டாகிறது. சில இடங்களில் நீர் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் நன்னீர் வாழிடத்தில் உள்ள உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு உயிரினங்களின் நீராதாரம் வெகுவான பாதிப்பினைச் சந்தித்துக் கொண்டுகிறது.

 

நன்னீர் வாழிடம் – பாதுகாக்கும் வழிகள்

நம் வீட்டில் உள்ள சமையலறை, கழிவறை தூய்மையாக்கிகள், தரையை சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் பொருட்கள், துவைக்கும் மற்றும் குளிக்கும் சோப்புகள் போன்றவற்றிற்கு சுற்றுசூழல்மாசினை உண்டாக்காதவைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் இப்பொருட்களை உபயோகிக்கும்போது குறைந்த தண்ணீர் தேவைப்படுபவற்றை தேர்வு செய்யவும்.

நம்முடைய அன்றாட செயல்களான குளித்தல், துவைத்தல் உள்ளிட்டவைகளுக்கு குறைவான நீரினைப் பயன்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைக் கழிவுகளை ஆறு, குளங்களில் கலக்கக் கூடாது.

நீரினை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதால் நன்னீர் வாழிடத்தை பாதுகாக்கலாம்.

இயற்கையின் பரிசான நன்னீர் வாழிடத்தை போற்றிப் பாதுகாத்து நம்முடைய சந்ததியினருக்கு அளிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

–வ.முனீஸ்வரன்

 

Comments are closed.