காதருகே வந்து “இன்று ஆபீஸ் முடிந்து போகும் போது என் வீட்டுக்கு வந்துவிட்டு போ” என அடிக்குரலில் சொன்னாள் சைந்தவி.
சைந்தவி சொந்த ஊர் பீகார். ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த அலுவலகத்தில், அவள் சினிமா நடிகையை போல் பிரபலமானவள்.
அவள் நிறம், அவள் உடுத்தும் நவ நாகரீக மேட்சிங் உடைகள், வித விதமான ஆபரணங்கள் எல்லாம் சேர்ந்து அவளை ஓர் பேரழகியாக நிலைநிறுத்தி விட்டது.
அவள் அருகில் வரும் போதும், நம்மை கடந்து போகும் போதும் நறுமணம் வீசி நம்மை அலைக்கழிக்கும். அவளைச் சுற்றி இங்கு பெரும் ரசிகர் கூட்டம். அவள் கணவனும் இந்த அலுவலகத்தில்தான் வேலை செய்கிறான்.
சைந்தவியும், நானும் ஒரே பிரிவில் வேலை செய்வது, அவள் என்னை அடித்து விளையாடுவது, சதா ஏதாவது பேசி சிரிப்பது என அவள் காட்டும் அன்னியோன்யம் அவள் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அதிகாரிகளுக்கும் பெரும் எரிச்சலாக இருந்து கொண்டிருந்தது.
சில சமயம் தன் கணவனை எதிரில் வைத்துக் கொண்டே, என்னை சீண்டுவாள், தர்ம சங்கடமாகி போகும். நான் எது சொன்னாலும் கேட்பதில்லை. “தும் சுப் கரோ” (வாயை மூடு) என்று அதற்கும் வம்பு இழுப்பாள்.
அவளை பணி முடிந்ததும், தம் வண்டியில் ஏற்றி செல்ல, ஒரு படையே காத்திருக்கும் பட்சத்தில் எளிதில் ஸ்டார்ட் ஆகாத என் பழய பஜாஜ் வண்டியில்தான் வருவேன் என்று அடம் பிடித்து வருவாள். யாராவது எதாவது சொல்வார்கள் என்று சொன்னால் “நீ ஆண் மகன் தானே?” என கேட்பாள்.
இதெல்லாம் என் மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அது தெரியாமல், சைந்தவிக்கும் எனக்குமான பழக்கத்தை தினத்தந்தியில் வரும் கள்ளக்காதல் கதைகளுக்கு இணையாக திரித்து பலர் என் மனைவியிடமே வந்து போட்டு கொடுத்த நிகழ்வுகளும் உண்டு.
அதிகாரிகள் இதை வேண்டுமென்றே, பெரிதாக்கி ஏதாவது செய்வார்கள் என்ற பயம் எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் சைந்தவிக்கு இதெல்லாம் ரொம்ப ஜாலியாகவும் விளையாட்டாகவும் இருந்தது. எதை பற்றியும் சட்டை செய்வது கிடையாது.
இந்த நிலையில்தான், இந்த ஏழரையை கூட்டுகிறாள். ஏற்கனவே அவள் கணவன் வெளியில் போயிருக்கிறான். என்னை எதற்கு குவார்டர்சுக்கு வர சொல்கிறாள்? கட்டாயம் நாம் போக வேண்டாம், என்று முடிவு எடுத்து என் வேலையில் முழ்கி விட்டேன்.
திடீரென்று என் டேபிளுக்கு வந்து நறுக் என்று தலையில் கொட்டினாள். “நீ என்ன யோசிச்சு வைத்திருப்பாய் என எனக்கு தெரியும், ஏன் வர முடியாது? என்ன பயம் உனக்கு? மரியாதையாக வா. நான் உன் வண்டி அருகில் நிற்பேன்” படபட வென்று சொல்லிவிட்டு கோபமாக போனாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நம்ம மைண்டு வாய்ஸ் அவளுக்கு எப்படி கேட்டது ?
சொன்னபடி என் வண்டியின் அருகே நின்று கொண்டிருந்தாள். நாலைந்து உதைக்கு பின்பு வண்டி ஸ்டார்ட் ஆனது. திட்டிக் கொண்டே அமர்ந்தாள். எனக்கு பெரும் கவலையாக இருந்தது. அதே சமயம் பெரும் ஆர்வமும் தொற்றி கொண்டது. ஏதேதோ கற்பனை வந்தது. அவளை இதுவரை தனியே சந்தித்தது கிடையாது. தனியே சந்திக்கும்போது நாமும் இவள் அழகில் மயங்கி, பாக்யராஜ் படத்தில் வருவது போல் சபலம் வந்துவிடுமா?
அவள் வீடு திறந்தே இருந்தது. அவள் மகன் உள்ளே ஸ்கூல் விட்டு வந்து விளையாடிக் கொண்டிருந்தான், என்னை அமர சொன்னாள். மகனை கொஞ்சி, தின்பதற்கு கொடுத்து, தனியே ஓர் ரூமில் போய் விளையாட சொன்னாள். எனக்கும் நிறைய வட இந்திய பதார்த்தங்களை கொண்டு வந்து வைத்தாள்.
அவள் முகம் கழுவி நைட்டிக்கு மாறி வந்தாள். கதவை தாழிட்டாள்.
இவ்வளவு அழகான நைட்டி இருப்பது, எனக்கு அன்றுதான் தெரிந்தது.
பாக்யராஜ் பட காட்சி ஒரு வினாடி வந்து போனது.
‘பகவானே நாம ஏன் இப்படி யோசிக்கிறோம்?’
அவளே ஆரம்பித்தாள், “உன்னை ஏன் வர சொன்னேன் தெரியுமா?”
“அம்மா தாயே, சீக்கரம் சொல்லிவிடு” என்றேன்.
“நான் கொஞ்சம் பணம் தருகிறேன், என் தாய் தந்தையருக்கு, யாருக்கும் தெரியாமல், உன் விலாசம் போட்டு அனுப்பி விடு” என்று சொன்னாள்.
“இது என்ன பிரமாதம், இதை நீ அங்கேயே சொல்லியிருக்கலாமே” என்றேன்.
“அவசரப்படாதே, நிறைய பேச வேண்டும்” என ஆரம்பித்தாள்.
தன் குடும்பத்தில் பிறந்த மூன்று மகளில் முதலாவதாக பிறந்தது, வறுமையில் வாடியது, பத்தாவது படிக்கும் முன்னே, எதுவுமே தெரியாத பருவத்தில், இந்த மத்திய அரசு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த 37 வயது உறவினருடன், கிட்டதட்ட 22 வயது மூத்தவருடன், திருமணம் செய்து வைத்தது.
அவருக்கு பெரும் வியாதி இருந்ததை மறைத்தது, மாமியார் வீட்டில் பட்ட துயரம், பிள்ளை பெற்று கொள்ளவில்லை, என வீடு துடைத்த தண்ணீரை தம் தலையில் ஊற்றி கொடுமைப்படுத்தியது. அவள் கணவனிடம் போய் எனக்கு உடனே குழந்தை வேண்டும் என்று குழந்தை போல் அழுதது.
இரண்டு வருடம் கழித்து அவள் கணவன் ஒரு இரவில் தூங்கும் போதே இறந்து போனது. இறந்தது தெரியாமல் இரவு முழுவதும் பிணத்துடன் படுத்து உறங்கியது. அதற்கு வாங்கிய வசவுகள், மொட்டையடித்து சின்னா பின்னமாக்கியது.
நரகத்திலிருந்து தப்பி அம்மா வீட்டுக்குப்போய் அழுது வீழ்ந்தது. இன்னும் தீராத வீட்டின் வறுமை. இரண்டாது தங்கை வீட்டை விட்டு போனது. அவளை இவர்கள் தேடாமல் விட்டது. அப்பாவுக்கு சுகர் வந்து காலை எடுத்தது. அம்மா இன்னமும் வீடு வேலை செய்வது என அடுக்கி கொண்டே போனாள்.
கண்ணீரில் கரைந்தாள், நான் செய்வது அறியாமல் தவித்தேன் …
அந்த அரசு ஊழிய கணவன் இறந்ததன் கருணை அடிப்படையில் இவளுக்கு இந்த வேலை கிடைத்தது. தற்போதைய கணவனை காதலித்து திருமணம் செய்தது. கல்யாணத்ததிற்கு பிறகு அவன் மாறிப் போனது.
அப்பா அம்மாவிற்கு பணம் அனுப்பகூட அவன் தடை போடுவது, எந்த புரிதலுமின்றி அவளை வெறும் செக்ஸ் பொம்மை போல் நடத்துவது என அவள் அழுகையும் பேச்சும் என்னை சிதறடித்தன.
அவளுக்கு காதல், காமம் எல்லாம் கசப்போ கசப்பாய் மாறிப் போனது.
தனக்கு வந்திருக்கும் பிளாட்டிலெட் செல் குறைபாடு, தன் கஷ்டத்தை மறைக்க, உற்சாகமாய் தெரிய, தாம் பகட்டாக உடுத்தி திரிவது, இது எதுவும் தெரியாத கூட்டம் அவளை துரத்துவது, ஒரு நம்பி பழகிய பெரிய அதிகாரி தவறாக நடக்க முயன்றது, அவரிடம் தன் வியாதியை கொஞ்சம் மாற்றி சொல்லி தப்பித்தது என்று பல இக்கட்டான சம்பவங்களை அடுக்கி கொண்டே போனாள்.
எந்த பாவமும் செய்யாத இந்த குழந்தைக்காகதான் உயிரோடு இருப்பதாகவும், மூட்டை கணக்கில் துயரங்களை சொல்லி கொண்டே போனாள். கண்ணீர் நின்ற பாடில்லை .
என் கண்ணில் மட்டும் காமம் அற்ற அன்பை அவள் கண்டதாகவும், ஒரு அண்ணனைப் போல் அவளுக்கு தோன்றியதையும் சொன்னாள்.
“உன்னிடம் என் பாரத்தை இறக்கி வைப்பது பெரும் ஆறுதலாக இருக்கிறது” என்றாள்.
நான் பேயறைந்த பேயாய் உட்கார்ந்திருந்தேன்.
உனக்குள் இத்தனை ரணமா? இவ்வளவு காயங்களா? ச்சேய் .. இதெல்லாம் தெரியாமல் நானும் கூட ஒரு கணம் தப்பாக யோசித்து விட்டேனே என்ற ஒரு குற்ற உணர்வு தோன்றியது.
அவள் அழுது கொண்டே இருந்தாள்.முகமெல்லாம் ஈரம்,
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…
அவள் கையை பிடித்து கொள்ளலாமா?
தேவைபட வில்லை.
அவளே அழுகையை நிறுத்தி, முகத்தை துடைத்து, மூக்கை இழுத்து, எழுந்து போய் பத்தாயிரம் ரூபாய் பணமும், பேங்க் டீடெயில்ஸ்ம் என்னிடம் கொடுத்தாள்.
“நான் நாளை கட்டாயம் அனுப்புகிறேன், நீ கவலை படாதே” என சொன்னேன்.
அவளும் பதிலுக்கு “என் கதையை கேட்டு நீயும் கவலைப்படாதே” என வழக்கமான வம்பிழுக்கும் தொனிக்கு மாறினாள்.
என்னால் உடனே அப்படி மாற முடியவில்லை.
நான் விடை பெற்று, குவார்ட்டர்ஸ் படிக்கட்டுகளில் இறங்கினேன். அக்கம் பக்கம் அனைவரும் என்னையே பார்த்து கொண்டிருந்தார்கள்.
நான் மிகவும் சோர்வாக நடந்தேன். ஒரு சிலர் முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.
அவர்களுக்குள் ஒரு கள்ளக்காதல் உறுதியானது.
வீட்டிற்கு வந்து, மனைவியிடம், “நீ என்னுடன் நிஜமாகவே மகிழ்சியான வாழ்க்கை
நடத்துகிறாயா?” என கேட்டேன்.
“ஏன் இந்த கேள்வி “என்றாள்?
“நாம சைந்தவியை கொஞ்சம் பாத்துக்கணும்மா” என்று சொன்னேன்.
“ஏன் அவ புருஷன் அமெரிக்கா போறானா? அது சரி, நான் மகிழ்சியா இருக்கிறதுக்கும், நாம சைந்தவியை பாத்துகிறதுக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ மண்டை குழம்பிடுச்சு, சாப்பிட்டு கம்முன்னு படுங்க” என்றாள் .
அன்றிரவு எனக்கு தூக்கமே வரவில்லை, உறங்கி கொண்டிருந்த என் மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டே வெறுமனே கண் மூடிக் கிடந்தேன், ஆழ்மனதில் சைந்தவி அழுது கொண்டேயிருந்தாள் .
கொஞ்ச நாள் கழித்து எனக்கு மாற்றல் வந்தது. ஹைதராபாத் ரயில்வே ஸ்டேஷனில் வழியனுப்ப யார் யாரோ வந்தார்கள். சைந்தவி மட்டும் வரவில்லை.
ஹைதராபாத்தை தொட்டு அடுத்த, செகந்திராபாத் ஸ்டேஷனில் வண்டி நின்ற பின் கிளம்ப ஆரம்பித்தது. சினிமாவை மிஞ்சும் காட்சியாக சைந்தவி ஓடி வந்தாள். ஜன்னல் வழியே ஒரு சென்ட் பாட்டிலையும், ஒரு கிரீட்டிங் கார்டையும் எங்கள் கையில் திணித்து மறைந்து விட்டாள்.
அதற்கு பின் சைந்தவி பெரிதாய் ஏதும் தொடர்பு கொள்ளவில்லை.
அவள் கொடுத்த சென்ட் பாட்டில் ஒரு நாள் உடைந்து கொட்டி விட்டது. வீடு முழுதும் ஒரே வாசம்.
அதேபோல் சென்ட் வாங்க, நானும் என் மனைவியும் நிறைய கடைகளில் ஏறி இறங்கி விட்டோம். இதுவரை அந்த பிராண்ட் எங்கும் கிடைக்கவில்லை.
ஆனால் இப்போதும் அந்த சென்ட் வாசம் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கிறது. அப்போது சைந்தவி கடந்து போவது போல் ஒரு பிரமை தோன்றி மறைகிறது.
முனைவர் க. வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849
படித்து முடித்தவடன் இந்த கதையிலும் எப்போதும் போல ஒரு பெரு மூச்சு வந்தது போகிறது…
வலியை வாசமாக்கி
படிப்பவர்களை வசமாக்கும் கதை
எனக்கு தெரிந்த கதை.
புரிந்த கதை …
காதல் என்பது கல்யாணத்தின் தொடக்க பிராயம் என்பதல்ல… அது தூய அன்பின் அடுத்த பரிமாணம்… அது கல்யாணத்தில் முடிய வேண்டுமென்ற அவசியமல்ல…. அது இருவரும் அடுத்தவரின் மனதையும் உணர்வுகளையும் புரிந்து நடக்கும் நட்பின் அத்தியாயமாகும்… இதனை தெளிவாக உணர்த்துகிறது இந்த கதை. கதாபாத்திரங்களின் தேர்வோ அழகு… பாராட்டுக்கள்… தொடர்ந்து எழுத என் கோரிக்கைகள்…
Arumaiyaana alagiya sirukadhai….💖
Excellent story
Heart touching 💞
அற்றவைகளால் நிரம்பியவளின் வலி…
பேச்சு மொழியிலும், உரைநடை மொழியிலும் வேறுபாடு வேண்டும்…
மற்ற வகையில் கதை சிறப்பம்சம் உடையது…
ஆறுதல் மொழி கூறவென்றும், சோகமொழி கூறவென்றும் இன்று நபர்களைத் தேட வேண்டியுள்ளது. இது சிலசமயம் தவறாகி விடுகிறது. அந்தக் குணம் நமக்கிருந்தால் கட்டாயம் நாம் கட்வுள் தான். அப்படி மனிதர்கள் இன்றில்லை. அவ்வாறு தலை சாய்த்து மனதிலுள்ள பாரம் குறைய கூறும் ஆள் கண்டதும் மகிழ்ச்சி.
கதை ஆழமானதும்- உளவியல் தனமையும் கொண்டதும் ஆகும்.
வாழ்த்துகள்
சைந்தவி தவிர வேறு யாருக்கும் பெயர் வைக்காமல் விட்டதும் நல்லது எனத் தோன்றுகிறது. பாதி கதை கடக்கும் போது அவனுக்குத் தோன்றிய அதே குற்ற உணர்ச்சியும், கதை படித்து முடித்தபின் அந்த புனிதமான சென்ட் நறுமணமும் எனக்கும் வந்தது.