மாணவச் செல்வங்களே! நீங்கள் கல்வி கற்கிறீர்கள்.அதற்கு பெரிதும் துணை புரிவது யார்? உங்கள் தாயும் தந்தையும்!
மாதா, பிதா, குரு, தெய்வம் என வெகு காலம் முன்பே நம் முன்னோர்கள் மிகச் சரியாக வரிசைப்படுத்தியிருப்பது நீங்கள் அறிந்த ஒன்றே!
தாய் தந்தைக்குப் பிறகே மற்றவர்கள். எந்த நேரத்திலும், எக்காலத்திலும் உங்களை அரவணைத்துப் பாதுகாப்பவர்கள். உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள். உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற உங்கள் தாய், தந்தை சொற்படிக் கேட்டு நடந்து, அவர்களை மதித்து, அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதே உங்கள் வேலை. கடமையும் கூட.
அனைத்துக்கும் மேலாக நீங்கள் படித்து, ஆளாகி, சமூகத்தில் ஒரு வளர்ந்த பிரஜையாக உருவாகி, பதவியில் அமர்ந்து, நீங்களும் குடும்பம் என ஒன்றை அமைக்கும் சூழ்நிலை உருவாகும் போது, உங்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்த பெற்றோர்களை எக்காரணத்தைக் கொண்டும் மறந்து விடாதீர்கள். அப்போதுதான் நீங்கள் இந்த பூவுலகில் பிறந்தற்கான பயனை அடைய முடியும்.
உங்களுக்கு குஜராத் மாநிலம் ‘பவ்நகர்’ என்னும் ஊரில் நிகழ்ந்த ஓர் உண்மைக் கதையைச் சொல்கிறேன்.
கதை உங்களை நெகிழ வைத்துவிடும். உங்கள் பெற்றோர் மீது அபரிதமான அன்பும், பாசமும், அக்கறையும் நிச்சயம் ஏற்படும்.
குஜராத் மாநிலம் பவ்நகரில் வயதான விதவைப் பெண் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார்.
மகன்கள் மூவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். அவர்களின் தாயும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தாள்.
திடீரென அந்த வயதான தாய் உடல்நலம்குன்றி படுத்த படுக்கையானாள்.
மகன்கள் மூன்று பேர்கள் இருந்தும், எவரும் வந்து கவனிக்கவில்லை. அக்கம் பக்கத்தினரே அந்த தாய்க்கு உணவளித்து கவனித்து வந்தனர்.
ஒரு சிலர் மகன்களைச் சந்தித்து விவரங்களைக் கூறினார்கள். அவர்களது தாயை உடனே அழைத்துச் சென்று அவர்களுடனேயே வைத்துக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.
ஒருவன் அவனது குழந்தைகள் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த நேரத்தில் தனது தாயைக் கூட்டி வந்து கவனிக்க முடியாதென்றும் சொன்னான்.
இன்னொரு மகன் அவசரமாக வெளியூர் செல்வதாகவும், அதனால் இயலாத காரியம் என்றும் தட்டிக் கழித்தான்.
மற்றொரு மகனோ அவனது வீட்டில் எந்த ஒரு வசதியுமில்லை என மறுத்து விட்டான்.
மகன்கள் மூவரும் கை விரித்ததும் அக்கம் பக்கத்தினர் அவ்வூரில் வசித்து வந்த ‘மன்பாய் பட்’ என்பவரிடம் சென்று விஷயத்தைக் கூறினார்கள்.
அவர் அனாதை ஆசிரமம் நடத்துபவர். சமூகத் தொண்டாற்றுபவர். ஆதரவற்றோர்களுக்குத் துணை புரிபவர்.
ஊரார் சொன்னதைக் கேட்டவுடன் அந்த வயதான உடல்நலம் குன்றிய தாயை வந்து பார்த்தார்.
மறுநாள் காய்கறி வியாபாரிகள் பயன்படுத்தும் தள்ளு வண்டியுடன் வந்து அந்த தாயை வண்டியின் நடுவே அமர வைத்தார்.
அவருடன் அவரது ஆசிரம சிறுவர்கள் சிலரும் வந்திருக்க, எல்லோருமாகச் சேர்ந்து வண்டியைத் தள்ளியவாறே, “தாய் வாங்கலியோ, தாய்” எனக் கூவினர்.
தெருவில் இவர்களைப் பார்த்த சிலர் “என்ன மன்பாய்ஜி ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என வினவ, அவரோ, “மகன்கள் மூன்று பேருமே கைவிட்டு விட்ட பிறகு இந்த தாயை வேறு யாருக்காவது விற்பதைத் தவிர வேறு வழியில்லை” எனப் பதிலளித்தார்.
வண்டி ஒரு வங்கியைக் கடந்து சென்ற போது, வங்கி ஊழியர்கள் சிலர் கேள்விக்குறியுடனும், குழப்பத்துடனும் மன்பாய்ஜியின் செயலைக் கண்டு அதிசயித்தனர்.
அந்த வங்கியில் பணிபுரியும் அத்தாயின் மகன் ஒருவனிடம் போய் நிலைமையை எடுத்துரைத்தனர்.
வங்கியில் பணிபுரியும் மகன் ஓடோடி வந்து மன்பாய்ஜியின் கால்களில் விழுந்தான். “என்னை மன்னித்து, என் தாயை என்னுடன் அனுப்புங்கள்” என்று மன்பாய்ஜியிடம் கேட்டுக் கொண்டான். கெஞ்சினான்.
மன்பாய்ஜியோ, “வேண்டாம்பா. சில மாதங்களுக்குப் பிறகு நீ உன் தாயை கைவிடமாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்? வேண்டாம். உன் தாயை எவரிடமாவது ஒப்படைத்து விடுகிறேன். நீ போ” எனக் கூறினார்.
மகனோ அழுது புலம்பினான். அவனது தவறை உணர்ந்துவிட்டதாக உறுதியளித்தான்.
இப்போது மன்பாய்ஜி அவன்பால் இரக்கம் கொண்டு அவனிடம், “அப்படியானால் ஒன்று செய். உன் மற்ற இரு சகோதரர்களையும் சந்தித்து எல்லோருமாகச் சேர்ந்து பத்தாயிரம் ரூபாயை உங்கள் தாயிடம் கொடுங்கள். அத்தொகையை வங்கியில் செலுத்தி அதற்கு கிடைக்கும் வட்டியைக் கொண்டு அவள் தன் வாழ்நாளைக் கழித்து விடுவாள். எங்கள் ஆசிரமத்திலேயே உன் தாய் இருப்பாள். என்ன சம்மதமா?” எனக் கேட்டார்.
அவனும் அதற்குச் சம்மதித்து மன்பாய்ஜி கூறிய அறிவுரைப்படி நடந்து கொண்டான். மன்பாய்ஜி நடத்தும் ஆசிரமத்தில் அத்தாய் சௌக்கியமாக வாழ்ந்து வருகிறாள்.
என்ன குழந்தைகளே? கதையைப் படித்ததும் நிச்சயமாக உங்கள் மனதில் பாதிப்பு ஏற்பட்டிருக்குமே? உங்கள் பெற்றோருக்கும் இது போன்ற நிலை ஏற்படாமலிருப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!