அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீக்கிப் பிறத்தல் என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறுகிறார்.
தமிழ் மொழியின் தலைசிறந்த பெண்பாற் புலவர் ஒளவையார் என்பது தமிழ் இலக்கிய வரலாறு கூறும் உண்மை ஆகும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளவற்ற ஆற்றல்கள் பொதிந்து உள்ளன. அதை வெளிக்கொணர்வதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
அற்புதமான பிறப்பு மனிதப் பிறப்புதான். அதில் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியும் சென்றுள்ளனர்.
மனித வாழ்க்கைக்கும், நவகிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று விஞ்ஞானமும், மெய்ஞானமும் நமக்குக் கூறுகிறது.
விஞ்ஞானம் நிரூபிக்கும்; மெய்ஞானம் நம்பிக்கை தரும். நவக்கிரகங்கள் ஒன்பது பெயர்களை உடையவை. அவர்களுக்குரிய குணம், நிறம், செயல்பாடுகள் பற்றி பல ஜோதிட வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு, கேது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
சைவ சமயக் குரவர்கள் நான்கு பேரில் திருஞானசம்பந்தர் இயற்றிய கோளாறு பதிகம் என்ற பக்தி இலக்கியம் மனித வாழ்க்கைக்கும், நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்புகளை அருமையாகக் கூறுகிறது.
திறைமறைக்காடு என்னும் திருத்தலத்திலிருந்து சைவ சமயத்தின் பெருமைகளைப் பறைசாற்றுவதற்காக திருஞானசம்பந்தர் மதுரைக்கு புறப்படுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் மதுரையம்பதியை ஆண்ட கூன்பாண்டியன் என்ற மன்னன் சைவத்தின் சிறப்புகள் தெரியாமல், சமணர்களோடு இணைந்து சைவசமயத்துக்கு தீங்கு விளைவித்ததாக வரலாறு கூறுகிறது.
அப்பொழுது கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்கரசியார் வேண்டுகோளுக்கு இணங்கி, திருஞானசம்பந்தர் மதுரை வந்ததாக சமயச்சொற்பொழிவாளர்கள் கூறுகிறார்கள்.
அவ்வாறு திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டை விட்டுக் கிளம்பும் போது, நாளும் கோளும் சரி இல்லை; இப்பொழுது மதுரைப் பயணம் வேண்டாம்; கொஞ்சம் தள்ளிப் போடுங்கள் என்று திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் தடுத்தார்.
கோளறு பதிகத்தைப் பாடிவிட்டு, திருமறைக்காட்டை விட்டு மதுரை கிளம்பினாராம் திருஞானசம்பந்தர். பலதடைகள் ஏற்பட்டபோதும் அவை திருஞானசம்பந்தரை ஒன்றும் செய்யவில்லை.
மதுரை வந்து கூன்பாண்டியனுக்கு நல்ல அறிவுரை கூறி சைவத்தை திருஞானசம்பந்தர் வளர்த்ததாகவும், பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகவும் சைவ சமய ஏடுகள் கூறுகின்றன.
திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டில் பாடிய கோளறு பதிகம் இதோ
வேயுறு தோளி பங்கன்
விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை
முடிமேல் அணிந்து என்
உள்ளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியார் அவருக்கு மிகவே
மேற்கண்ட பாடலைப் போல பத்து பாடல்களை கோளறு பதிகத்தில் திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
ஒவ்வொரு பாடலையும் அதன் விளக்கங்களுடன் வரும் வாரங்களில் காணலாம்.
மேற்கண்ட பாடலின் விளக்கம்
பெண்மைக்குச் சரிபாதி தந்த எம்பெருமான் சிவபெருமான், ஆலகால நஞ்சை உண்டவர். கங்கையையும் பிறைச்சந்திரனையும் தன் தலையில் சூடியவர். உலக நலன் காக்கும் உமையவள் தலைவனை வணங்கும் போது நமக்கு நவகிரங்களால் எவ்வித பாதிப்பும் வராது; நல்லதே நடக்கும் என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார்.
தற்காலத்துக்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டுமானால் ஆண்மை பெண்மையை மதிக்க வேண்டும். பெண்மை ஆண்மையைக் கொண்டாட வேண்டும். அன்போடும், பாசத்தோடும் இருந்தால் எந்த கிரகமும் நம்மை ஒன்றும் செய்யாது.
சிறு தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்று கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் நமக்கு ஞாபகத்துக்கு வரும்.
நம்பிக்கை வைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராசபாளையம்
கைபேசி: 9486027221