பெற்றோர் நெஞ்சம் பெரிதுவக்க
பைந்தமிழ் சாத்திரம் பலவும்
கற்றோர் வாழென வாழ்த்துரைக்க
குறளும் ஔவையும் துணையிருக்க
சுற்றம் யாவும் சூழ்ந்திருக்க – வாழ்வில்
சுவைகள் என்றும் நிறைந்திருக்க
குற்றம் குறைகள் எவையுமிலாது
குத்து விளக்காய் ஒளிர்பவளே
நாட்டிற்கோர் கண்மணி – நமது
தமிழ்ப் பெண்மணி
பள்ளி கல்லூரி சென்றிடுவாள் – பல்துறை
பட்டமும் அறிவும் பெற்றிடுவாள்
துள்ளி விளையாடி மகிழ்ந்திடுவாள் – தன்
தோழியர் யாவரையும் சேர்த்திடுவாள்
தெள்ளு தமிழில் பாடிடுவாள் – நம்
தென்னவர் பெருமை பேசிடுவாள், அவளே
நாட்டிற்கோர் கண்மணி – நமது
தமிழ்ப் பெண்மணி
உழவுத் தொழிலைப் புரிந்தாலும் – அரசின்
உயர் நிலையை அடைந்தாலும்
அழகுக் கலையில் தேர்ந்தாலும் – மண்ணில்
அரிதான மருத்துவராய் மலர்ந்தாலும்
வழக்கு அறிஞர் என்றாலும் – கணினி
வங்கிப் பணியும் ஆனாலும்
பழகும் பாங்கில் பணிவும்
பாசமும் படைத்தவளே
நாட்டிற்கோர் கண்மணி – நமது
தமிழ்ப் பெண்மணி
உடையைக் கண்டு ஆடாமல் – பித்த
உரையைக் கேட்டும் ஓடாமல்
நடையை நாடியும் மயங்காமல் – வாகனம்
வசதியை கண்டும் வியக்காமல்
படையைப் பார்த்தும் கலங்காமல் – தன்
பாதையைப் பார்த்து நடப்பவளே
நாட்டிற்கோர் கண்மணி–நமது
தமிழ்ப் பெண்மணி
பிறந்த வீட்டின் கண்ணாக – பின்னர்
புகுந்த வீட்டின் பொன்னாக
உறவினர் யாவரும் போற்றும்
உயர்விற் சிறந்த பெண்ணாக
கறந்த பாலின் குணத்தோடு – இந்தக்
கடல்சூழ் உலகில் நிலைப்பவளே
நாட்டிற்கோர் கண்மணி – நமது
தமிழ்ப் பெண்மணி
-த. சுப்பிரமணி, சென்னை
9841150759, 9499909657
tsubramani_iit@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!