பொழுதுகாட்டும் கருவியும் பழுதாகலாம்
பொழுது ஒருபோதும் பழுதாவதில்லை
இயற்கையின் திருவிளையாடலில் இறப்பும் பிறப்பும்
எப்படி எவருக்காகவும் காத்திருப்பதில்லையோ
அப்படியே காலமும் காத்திருப்பதில்லை
கிழக்கில் தெரியும் கதிரவன்
மேற்கில் காணாமல் போகும் வரை
காலத்தை கணக்கிட்டு உழைப்பவனே
இங்கு வாகைச்சூடுகிறான்
காலத்தை கணக்கிடும் கணியனின்
வாக்கினில் உறுதி கொண்டாலும்
நேரத்தை திட்டமிடவில்லையெனில்
நேர்த்திக்கடனே செய்தாலும் இழந்ததை
மீட்டெடுக்க இயலாது
நாட்களுக்குள் அடங்கும் நாழிகையை
நாட்டமுடன் கணக்கிட்டு நகர்த்தினால்
நாளைய காலம் நம் வசப்படும்
கடிகாரம் காட்டும் நேரத்தை
எவரும் மாற்றிவிடலாம்
மாற்ற வியலாது காலம் காட்டும் நேரத்தை
உழைக்கும் நேரத்தை உன்னிப்பாக நாம்
நோக்கினால் நிசமாவது நாளை
மட்டுமல்ல ஒவ்வொரு நாழிகையுமே
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353