நிதர்சனம் – சிறுகதை

நிதர்சனம் - சிறுகதை

அன்று ஞாயிற்றுக் கிழமை.

புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான் அகில். எழுந்திருக்க பிடிக்காமல் அப்படியே கிடந்தான் கட்டிலில்.

இருவாரங்களாய் தொடர்ந்த குழப்பமும், அதனால் விளைந்த கோபமும் ஒருசேர, எரிச்சல் மண்டுவதாய் உணர்ந்தான்.

வெளியே அப்பாவின் குரல் கேட்டது.

“இன்னும் எழுந்திரிக்கலையா, அவன்? பொண்ணு வீட்ல கேட்டுட்டே இருக்காங்க. எப்ப வரீங்கன்னு?

அவங்களுக்கு என்ன பதில் சொல்ல? இவன் எதுவுமே வாய திறக்க மாட்டேன்றான்.”

அப்பாவின் கேள்விக்கு அம்மா சமாதானமாக ஏதோ கூற, அகிலுக்கு மேலும் எரிச்சல் அதிகமாகியது.

மனம் பின்னோக்கி நகர்ந்தது,

இருவாரங்களுக்கு முன் ஒருநாள், அப்பாவின் நண்பர் சுந்தரம் வீட்டிற்கு வந்திருந்தார்.

அகிலுக்கு தோதாய் இருவரன்கள் வந்திருப்பதாய் தகவல் கூறினார்,

“இங்க பாரு,நடேசா, இரு பெண் குடும்பத்தையும் தரோவா விசாரிச்சுட்டேன். ஒரு குறையும் இல்லை,

இந்த இரண்டு வரன்கள்ல உங்களுக்கு எது தோதுபடும்னு சொல்லு ,அதையே முடிச்சிடலாம்.

ஒரு பொண்ணு வீடு உங்களைவிட வசதி குறைவுதான். அப்பா கிளார்க்கா இருந்து ரிடையர் ஆனவர்.

ரெண்டு பொண்குழந்தைங்க, இவதான் மூத்தவ. படிச்சி முடிச்சி சம்பாதிக்கிறா. பொண்ணு பேரு அருணா.

இன்னொரு பொண்ணு வீடு வசதியான இடம். கார் பங்களான்னு உங்களை விட வசதி.

இவளும் படிச்சிட்டு வேலை பார்க்கிறா.ஒரே பொண்ணு,பேரு ராகவி.

ஆனா வசதியிலதான் இரண்டு பொண்ணுகளுக்கும் வேறுபாடே தவிர. அழகில யாரும் யாருக்கும் சளைக்கல, இந்தா நீயே போட்டோ பாரு.”

அகிலின் கண்கள் போட்டோவைத் துழாவின, அவர் சொல்வது உண்மைதான். இருவருமே அழகுதான்.

அப்பாவின் நண்பர் சுந்தரம் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

“இதுல என்னான்னா வசதியான வீட்டுப் பொண்ணு வேணும்னு நினைச்சீங்கன்னா, சில விஷயத்தை நீங்க அவங்களுக்கு தெளிவு பண்ணிடனும்”

அவரை இடை மறித்து பேசினார் நடேசன், “என்ன விஷயத்தை தெளிவுபடுத்தணும்?”

” அது ஒண்ணுமில்லடா, இப்ப நீங்க இருக்கறது வாடகை வீடு, அதை ஒண்ணும் மறைக்க வேணாம். ஆனா சொந்த வீடு பார்த்துகிட்டு இருக்கோம், இன்னும் செட் ஆகல.

கூடிய விரைவில் வாங்கிடுவோம்னு சொல்லுங்க. அவங்க வசதிக்கேத்த மாதிரி எதிர்பார்க்கறது ஒண்ணும்தப்பில்லையே.”

“அவங்க எதிர்பார்க்கிறதுல எந்த தப்பும் இல்லை. அதே நேரத்துல நாம பொய் சொல்லி கல்யாணம் பண்ண வேண்டாம்.

ஏன்னா எங்க வீட்டு நிதி நிலைமை இப்ப சரியில்லை, அதனால வசதி கம்மியா இருந்தாலும் போதும், அந்தப் பெண் அருணாவையே பேசி முடிச்சிடலாம்.”

அப்பாவின் பதிலால் அப்போது ஏற்பட்ட அதே எரிச்சல் இன்னும் குறையாமல் இருந்தது அகிலுக்கு.

‘அக்காவிற்கு பார்க்கும்போது மட்டும் எங்களை விட வசதி ஒரு படி மேல இருக்கிற இடமா பாருன்னு சொன்ன அப்பா, தன் விஷயத்துல மட்டும் இப்படி முரண்டு பண்றது என்ன நியாயம்?’

கதவு திறக்கும் சத்தம் கேட்டு நினைவினின்று மீண்டான் அகில்,

அப்பாவும் அம்மாவும் ஒருசேர உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தனர். ‘ ப்ச் ‘ என்று சலித்தபடி எழுந்து உட்கார்ந்தான் அகில்.

“ஏம்பா உடம்புக்கு ஏதும் முடியலயா? ” கேட்ட அப்பாவை பார்த்து ‘இல்லை’ என தலையாட்டினான் அகில்.

“அப்பறம் என்ன, குளிச்சிட்டு வா. சாப்பிட்டு கிளம்பலாம்.”

“எங்க?” ஒற்றை வார்த்தையில் கோபத்தை வெளிப்படுத்தினான் அகில்.

அதை புரிந்துகொண்ட நடேசன், “தெரியாத மாதிரி கேட்கிறாயே. அருணாவை பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கு போகத்தான்.”

“இல்லப்பா, எனக்கு ராகவியத்தான் பிடிச்சிருக்கு, அவங்க வீட்டுக்கு போறதுனா வரேன், இல்லாட்டா வேண்டாம்” நிமிர்ந்து கூட பார்க்காமல் பதில் அளித்த அகிலை யோசனையாக பார்த்தார் நடேசன்.

“அகில், இப்படி விட்டேத்தியா பேசாதப்பா. வசதிக்காக வேண்டி ராகவிய பிடிச்சிருக்குன்னு சொல்றியா?”

இப்போது அப்பாவை நேருக்கு நேர் பார்த்தவாறு மனக்குமுறலை கொட்டினான் அகில்.

“அப்படியே வச்சிக்கோங்கப்பா, என்ன தப்பு, ? அக்காவுக்கு மட்டும் வசதியான வீடா பார்த்து முடிச்சி வெச்சீங்க, ஆனா எனக்கு மட்டும் ஏழைப் பொண்ணா பார்க்குறீங்க, இது என்ன நியாயம்னு எனக்கு புரியல.”

கேட்டுக் கொண்டிருந்த அம்மா, “டேய், என்னடா பேசற நீ?” என அதட்ட, அவளை அமைதியாக்கினார் நடேசன்,

“நீ இரும்மா பாக்யா, அவன் பேசட்டும், நீ சொல்லுப்பா அகில், அக்காவுக்கு வசதியான இடமும், உனக்கு அந்த மாதிரி பார்க்கலேன்னுதான உன் கோபம்?” கேட்ட நடேசனுக்கு பதில் ஏதும் கூறாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான் அகில்.

“நான் சொல்றத கொஞ்சநேரம் பொறுமையா கேளு அகில், அதுல உனக்கு உடன்பாடு இல்லனா, நீ விரும்பற மாதிரி பண்ணிக்கலாம், சரியா?”

எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் அகில், நடேசன் பேச்சைத் தொடர்ந்தார்.

“அந்த காலத்துல ஒரு பழமொழி சொல்வாங்க, பொண்ணு கொடுக்கற இடம் நம்மை விட வசதியானதாவும், பொண்ணு எடுக்கற இடம் நம்மை விட வசதி குறைவாகவும் பார்க்கணும்னு. அதுல ஒரு அர்த்தம் இருக்கு.

ஒரு பொண்ணு ஒரு வீட்டுக்கு வாழ வரும்போது, அவளோட பிறந்த வீட்டையும், அம்மா, அப்பாவையும் விட்டுட்டு வர்றா.

சங்கடம், இழப்பு, கலக்கம் என இனம் புரியா உணர்வுகள் கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணிற்கும் இருக்கும்.

அந்த குறை எல்லாத்தையும் நாம காண்பிக்கிற அன்பால சரிபண்ண முடியும்தான்.

வாழ்க்கையோட அஸ்திவாரம் அன்பால மட்டும்தான் ஆரம்பிக்கணும், அதுதான் நிலைச்சிருக்கும்.

ஆனா அதே நேரத்துல நாம பிராக்டிகலாவும் கொஞ்சம் யோசிக்கணும்,

சகல வசதிகளோட பிறந்த வீட்ல வளர்ந்த பெண், அதே வசதி வாய்ப்புகளோட, புகுந்த வீட்ல இருக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு ஒண்ணும் இல்லை.

ஒரு செடிய பிடுங்கி வேற இடத்துல நடும்போது, முன்பு அதுக்கு கிடைச்ச எல்லா வாய்ப்புகளும் கிடைச்சாதான் அந்த செடி செழித்து வளரும்.

செடிக்கே அந்த நிலைமைன்னா உயிருள்ள பெண்ணை எண்ணிப் பார்,

பிறந்த வீட்ல கிடைச்ச அத்தனை வசதிகளும், இல்ல அதைவிட அதிகமா புகுந்த வீட்ல கிடைக்கும்போது, அது அவளுக்கு இலகுவாகவும், தன்னை இங்கே பொருத்திக் கொள்ள ஏதுவான சூழலாகவும் அவள் உணர்வாள். அவளும் இங்கே செழித்து நம்மையும் செழிக்க வைப்பாள்,

நம்மைவிட வசதியான வீட்டுப்பெண் எடுத்து, அவ நம்ம வீட்டுக்கு வரும்போது, அவளுக்கான வசதிகள் நம்மால கொடுக்க முடியலன்னாலும், அன்பை அள்ளித் தர நம்மால முடியும்தான்.

நான் இல்லன்னு சொல்லல, ஆனா நிதர்சனம்னு ஒண்ணு இருக்கு. சங்கடங்கள் வரும்; அதை நாம சமாளிக்கணும்.

‘நம்ம வீட்ல நல்லா இருந்தோம்; இங்க இப்படி இருக்கோமேன்னு’ அவ மனசளவுல சோர்ந்தால் அது நம்ம எல்லாரையும் பாதிக்கும்.

நிறைய லவ் மேரேஜ் ஃபெயிலர் ஆவதற்கு முக்கியமான காரணமே இதுதான்.

‘கல்யாணம் முடிஞ்சாச்சி, அந்த பெண் எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணி போகத்தான் செய்யணும், அதுதான் வாழ்க்கை,’ இப்படித்தான் எல்லாரும் சொல்வாங்க.

அந்த பெண்ணோட மனநிலையை யாரும் பொருட்படுத்துறதே இல்ல.”

இதுவரை அமைதியாக இருந்த பாக்யா கணவனைப் பார்த்து கேட்டாள்.

“கணவனுக்கும், மனைவிக்கும் நடுவுல வசதி மட்டும்தான் பார்க்கணுமா? அன்புன்றதுக்கு அங்க இடமில்லையா?”

“அப்படின்னு நான் சொல்ல வரல பாக்யா. நிதர்சனம் அப்படின்னு ஒரு விஷயம் இருக்கு, அதைப்பத்தி யாருமே எண்ண மாட்டேங்கறீங்கன்னு தான் சொல்ல வரேன்.

அன்பு முக்கியம்தான், வசதி வாய்ப்புகள் இருந்தும் அந்த வீட்ல அன்பு இல்லனா அது நரகம்தான். நான் ஒத்துக்கறேன்,

நான் என்ன சொல்ல வரேன்னா, நம்மளவிட வசதி குறைவா இருக்கிற பெண்ணுக்கு நம்ம வீட்ல எந்த குறையும் இருக்காது. அன்புக்கும் பஞ்சமில்லை,

வசதிகளும் அவளுக்கு சௌகர்யமாயிருக்கும். பிறந்த வீட்டின் தொடர்ச்சியாகத்தான் நம்ம வீடும் அவளுக்கு இருக்கும்.

ஆனா இதே சகல வசதிகளோடு வளர்ந்த பெண்ணுக்கு நம்ம வீடு ஏத்த வீடா சொல்லு?

நமக்கு மனசாட்சி இல்ல?

அந்த மாதிரி பணக்கார வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கறதே தப்புன்னு சொல்றேன், புரிஞ்சுக்காமே பேசறீங்க நீங்க ரெண்டு பேரும்.

உனக்கு அந்த பொண்ணுதான் வேணுமா, சொல்லு, அவங்ககிட்ட நம்ம நிலைமையை எல்லாம் சொல்வோம். உண்மையைச் சொல்லுவோம்.

அகிலுக்கு நல்ல வேலை இருக்கு. நல்ல சம்பளம் கிடைக்குது. இன்னும் சில வருஷங்களில் அவனோட ஸ்டேட்டஸ் மாறும்,

அப்படின்னு சொல்வோம். இதுக்கு சம்மதிச்சா பார்க்கலாம், என்ன சொல்றீங்க, இதுவே எனக்கு உடன்பாடு இல்லதான், என்ன செய்ய?”

அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அகில், அப்பாவை நோக்கி முறுவலுடன் பேசத் தொடங்கினான்.

“அப்பா, ரொம்ப நன்றிப்பா, என்னை தெளிவுபடுத்திட்டீங்க, என்னுடைய குழப்பம் தீர்ந்திடுச்சிப்பா.

‘வசதி வாய்ப்புகள் வரும் போகும், ஆனா அன்பு என்னைக்கும் நிலைக்கும்,’ இந்த வசனம் படிக்கும்போதும் கேட்கும்போதும் நல்லா இருக்கும்,

ஆனா, பிராக்டிகலாக சில விஷயங்களை யோசிக்கணும். அப்பதான் வாழ்க்கை அமைதியா இருக்கும் என்கிற நிதர்சனத்தை உங்ககிட்ட இருந்து நான் புரிஞ்சிக்கிட்டேன்.

நான் இப்ப ரெடி, அருணாவீட்டுக்கு போலாம்பா, எனக்கு ஓகே.”

அகில் சொன்னதைக்கேட்டு நடேசனும்,பாக்யாவும் முகம் முழுவதும் மலர்ச்சி பெற்றனர்.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

Visited 1 times, 1 visit(s) today