நிலா சோறு

நிலா சோறு – கிராமத்து சிறுகதை

“நிலா சோறு, அப்படினா என்னம்மா?” என்றாள் மூன்று வயது மகள் வாணி, தன் தாய் ரமாவிடம்.

“என்ன, திடீருன்னு நிலா சோறு பத்தி கேட்க?”

“இல்லம்மா பக்கத்து வீட்டு பரணி, சித்ரா பௌர்ணமிக்கு நிலா சோறு சாப்பிடப் போறதா எங்ககிட்ட சொன்னான். அதான் பாப்பா அதப்பத்தி கேட்கா.” என்றான் ஐந்து வயது ரமணி.

“சித்திரை மாசம் பௌர்ணமி அன்னைக்கு இரவு, எல்லோரும் வீட்ல வட பாயசத்தோட விருந்து சமைச்சு மொட்ட மாடியில, ஆத்தங்கரையில, வீட்டு முத்தத்துலன்னு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதத்தான் நிலா சோறுன்னு சொல்லுவாங்க.

வர்ற சித்திரா பௌர்ணமிக்கு, நம்ம வீட்ல எல்லாரும் மொட்ட மாடியில நிலா சோறு சாப்பிடுவோம் சரியா?” என்றாள் ரமா.

ரமா கூறியதைக் கேட்டதும் குழந்தைகள் இருவரும் “ஹே ஜாலி, ஜாலி” என்று குதித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின்பு கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்து, பின்னர் அங்கேயே வேலை வாங்கி, கல்யாணத்திற்குப் பின்பும் சென்னையிலேயே செட்டிலாகி விட்டவள் ரமா.

நிலா சோறு என்ற வார்த்தையைக் கேட்டதும், அவளுக்கு ஊரில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சாப்பிட்ட நிலா சோறு நினைவிற்கு வந்தது. வித்தியசமான நிகழ்வு அது.

சென்னையில் யாருக்கும் அப்படியொரு நிலா சோறு சாப்பிட்ட அனுபவம் இருக்காது என்ற பெருமிதத்தோடு, பழைய நினைவுகளில் மூழ்கினாள் ரமா.

 

 

அப்போது ரமா முத்தூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அது ஜனவரி மாதம் ஆகையால் முதல் திருப்புதல் தேர்வு தொடங்க இருந்தது.

முத்தூரில் ஒரு வழக்கம் இருந்தது.

தை மாதம் இரண்டாவது ஞாயிறு காலையில், ஊருக்கு வெளிப்புறத்தில் 10 கிமீ தொலைவில் காட்டிற்குள் இருக்கும் வனக்காளியம்மன் கோவிலில், வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். அதில் முத்தூரின் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.

அதற்காக‌ ஆண்கள் மற்றும் குழந்தைகள் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு, முத்தூரிலிருந்து கிளம்பி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு அன்னதானம் முடிந்ததும், ஞாயிறு பகல் 12 மணிக்கு திரும்பி விடுவர்.

அந்த சமயத்தில் பெண்கள் முத்தூரிலேயே இருப்பர். அவரவருக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடுவர்; ஆடுவர்; பாடுவர்; ஊரினைச் சுற்றி வருவர்.

வயதில் மூத்த பெண்கள் ஊரின் எல்லைகளில் அமர்ந்து, ஊருக்குள் ஆண்கள் யாரும் வராமலும், ஊருக்குள் உள்ள பெண்கள் வெளியே செல்லாமலும் கண்காணிப்பர்.

வனக்காளியம்மன் வழிபாட்டின் போது சனிக் கிழமை பகல் 12 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை பகல் 12 மணி வரை, ஆண்கள் யாரும் ஊருக்குள் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு, அவ்வூரில் வழி வழியாகப் பின்பற்றப்படும் விதிமுறைகளில் ஒன்று.

இவ்விதிக்கு சாதி மத வேறுபாடு கிடையாது. விதிமுறையை மீறினால் கடுமையான தண்டனை உண்டு.

வழிபாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அந்த ஆண்டு வழிபாடு, முதல் திருப்புதல் தேர்வு தொடங்க இருந்த வாரத்தில் வந்தது.

ரமாவிற்கோ பத்தாம் வகுப்புத் தேர்வில் எப்படியும் பள்ளி முதல் மாணவியாக வரவேண்டும் என்ற குறிகோள் இருந்தது.

ஆகையால் இந்த வருட வழிபாட்டின் இரவில் கேளிக்கைகளில் மனதைச் செலுத்தாமல் கவனமாக படித்து, முதல் திருப்புதல் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று எண்ணினாள்.

வனக்காளியம்மன் வழிபாட்டிற்காக, சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து ஆண்கள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு செல்லத் துவங்கினர்.

காலை 11மணிக்கு பக்கத்து வீட்டு மயிலு வேகமாக வந்து “ரமா, எங்க அண்ணன் அப்பா எல்லாரும் கோயிலுக்கு கிளம்பி போயிட்டாங்க. உங்க அப்பா தம்பி கோயிலுக்கு போயாச்சா?”

“ம்… அவங்க கிளம்பி அரைமணி நேரம் ஆச்சு”

“எங்க வீட்ல லெமன் சாதம், தக்காளி சாதம். உங்க வீட்ல என்ன சாப்பாடு?”

“எங்க வீட்ல புளியோதரை, கத்தரிக்காய் புளிக்கூட்டு, புதினா துவையல், தயிர் சாதம்”

“இன்னும் ஒருமணி நேரத்தில ஊருல ஆம்பிளைங்க யாரும் இருக்க மாட்டாங்க. அப்ப நாம மூக்கன் டீக்கடைக்கு பக்கத்துல இருக்குற கொடிக் கம்பத்துல போய் உட்காருவோமா?” என்றாள் மயிலு.

கொடிக் கம்பம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவில் அசோக மரத்தை ஒட்டி இருக்கும். அதில் உட்கார்ந்து பார்த்தால் ஊரின் மூன்று தெருக்களும் நன்றாகத் தெரியும்.

அதனைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் சதுர மேடையில் எப்போதுமே ஆண்கள் மூக்கன் டீக்கடையின் வடை, சிந்தாமணி, பன், டீ என்று வகை வகையாய் வாங்கி தின்று கொண்டு கொய்யென்று மொய்த்துக் கொண்டிருப்பர்.

பள்ளி செல்லும் போதும், நல்லதண்ணீர் கிணற்றுக்குச் செல்லும் போதும்  கொடிக் கம்பத்தை கடந்து செல்வாள் ரமா.

அப்போதெல்லாம் ஜாலியாக கொடிக் கம்பத்தில் உட்கார்ந்து, பண்டங்களைத் தின்று கொண்டு அரட்டையடிக்கும் ஆண்களைக் கண்டதும், நாமும் கொடிக் கம்பத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுவாள்.

‘வளர்ந்த பெண்ணால் ஊருக்கு நடுவே கொடிக் கம்பத்தில் அமர முடியுமா?

வீட்டில்தான் அதற்கு அனுமதிப்பார்களா?’

என்பது நினைவில் படவே கொடிக் கம்பத்தில் அமர்ந்திருக்கும் ஆண்களின் மீது பொறாமை வரும்.

நான் எப்படியும் இந்தக் கொடிக் கம்பத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன் என்ற சபதத்தை உடன் பயிலும் மயிலுவிடம் ரமா செய்திருந்தாள்.

அதனால்தான் மயிலு ரமாவிடம் கொடிக்கம்பத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து, சபதத்தை நிறைவேற்ற ரமாவை அழைத்தாள்.

“இல்ல மயிலு, பரீட்சைக்கு படிக்கணும். அதனால நான் அங்க வரல”

“ஆமா, உனக்கு மட்டும்தான் பரீட்சை இருக்கா? எனக்குந் தான் இருக்கு. இன்னைக்கு விட்டா, இன்னும் மூணு வருசம் கழிச்சு தான் வாய்ப்பு கிடைக்கும் கொடிக் கம்பத்த பத்தி நினைக்க.

அப்ப நாம,‌ எங்க என்ன செய்ஞ்சுட்டு இருப்போமுன்னு தெரியாது. அதனால இப்ப வா போவோம் ரமா.”

“ம்… ம்… கொஞ்சம் இரு. நான் யோசிச்சு சொல்றேன்.”

“சரி, நல்லா யோசிச்சு சொல்லு. நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.”

மயிலு சென்றதும், கொடிக் கம்பத்துக்கு போவோமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் “ரமா, போய் நல்ல தண்ணீ ரெண்டு குடம் மட்டும் கிணத்துல இறச்சிட்டு வந்திடேன்.” என்றாள் அம்மா.

“இல்ல, நான் படிக்கப் போறேன். வெளியே போனா ஆட்டத்துல மனசு போகும். அதனால நான் போகல.”

“ச்சு, போயிட்டு வாயேன் ரமா. நீ வர்றதுக்குள்ள அம்மா மத்த வேலயெல்லாம் முடிச்சுடுறேன். அப்புறம் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்றாள் கெஞ்சலாக.

“சரி” என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு குடங்களை எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுக்கச் சென்றாள்.

 

 

போகும் வழியில் ஊரில் பெரும்பாலான ஆண்கள் தென்படவில்லை. ஓரிருவர் மட்டும் கோவிலுக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

கொடிக்கம்பத்தில் இரண்டு ஆண்கள் மட்டும் அமர்ந்திருந்தனர்.

அப்போது அன்னாத்தாள் பாட்டி “யய்யா, நீங்க இன்னும் கோயிலுக்கு போகலையா? இன்னும் சித்த நேரத்தல பொம்பளைங்க உங்கள விரட்ட ஆரம்பிச்சுருவாக. சீக்கிரம் கிளம்புங்க.” என்று விரட்டிக் கொண்டிருந்தார்.

ரமா கிணற்றில் நீர் இறைத்துவிட்டு, குடங்களை இடுப்பிலும், தலையிலும் வைத்துக் கொண்டு, வருகையில் கொடிக் கம்பம் வெறிச்சோடிக் கிடந்தது.

அவள் வயதையொத்த பெண்கள் ஆங்காங்கே தெருவில் கும்பல் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“ஏய், அங்க பாரு கொடிக் கம்பம் நமக்காக காத்திட்டிருக்கு. வாங்க அங்க போய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்” என்று இளம்பெண்கள் கும்பலில் இருந்து குரல் வந்தது.

அதனைக் கேட்டதும் ரமாவின் ஏக்கம் அதிகமானது. அதனை விட படிக்க வேண்டும் என்ற ஆவல் முந்தவே வேகமாக நடையைக் கட்டினாள்.

இரவு ஏழு மணி.

“யம்மா, சோறு போடு தாயி” குரல் கேட்டு ரமா படிப்பதை நிறுத்தினாள்.

இந்த குரல் தனக்கு மிகவும் பரிச்சயமானது என்றெண்ணியவாறு வெளியே எட்டிப் பார்த்தாள்.

அன்னாத்தாள் பாட்டி ஒரு பெரிய குண்டானை இடுப்பில் வைத்து நின்று கொண்டிருந்தார்.

அன்னாத்தாள் பாட்டி பள்ளியில் சத்துணவு சமைத்துப்போடும் வேலை பார்ப்பவர். பள்ளியில் ரமா வரிசையில் நின்று சத்துணவு வாங்கும் போது சினேகத்துடன் பேசுவார்.

“என்ன தாயி, உன்ன வெளியிலே காணும். என்ன பண்ணுகிட்டு இருக்கற உள்ளே?”

“பாட்டி கவர்மண்டு பரீட்சை வரப்போகுதுல; அதுதான் படிச்சிட்டுருக்கேன்.”

“நல்லா படிச்ச போ. பொழுதுக்கும் படிச்சா களைப்பாயிரும். வா எங்கூட.”

“பாட்டி… அது வந்து…”

“சும்மா வா தாயி” என்று உரிமையுடன் அழைத்தார் அன்னாத்தாள்.

கொஞ்சம் வெளிய போயி வேடிக்கை பார்த்தா நல்லாத்தான் இருக்கும் என்று எண்ணினாள் ரமா.

வீட்டில் அம்மா பொங்கி வைத்திருந்த புளியோதரை, தயிர்சாதம், கத்தரிக்காய் புளிக்கூட்டு, புதினா துவையல் என எல்லாவற்றையும் தனித் தனிப் பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு வந்தாள்.

“சரிம்மா, எல்லாத்தையும் இந்தக் குண்டானுல போடு”

“பாட்டி எல்லாத்தையும் ஒன்னாவா”

“ஆமாம்”

ரமா எல்லாவற்றையும் குண்டானில் போடுகையில் தான், பாதிக் குண்டானில் ஏற்கனவே புளியோதரை, எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், சாம்பார், மல்லித் துவையல் உள்ளிட்டவை ஒன்றாக கலந்திருந்ததைக் கவனித்தாள்.

“சரி வாம்மா போவோம்” என்றபடி ரமாவையும் அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றார் பாட்டி. அங்கேயும் உணவு வகைகளைப் பெற்றதும் அடுத்த வீட்டிற்குச் சென்றார்.

குண்டான் நிரம்பியதும் தெருமுனையில் வைத்திருந்த அண்டாவில் உணவுகளைக் கொட்டினார்.

தெருவில் இருந்த எல்லா வீடுகளிலும் உணவுகளைப் பெற்று அண்டாவை நிரப்பிய பாட்டி பெரிய கரண்டியைக் கொண்டு அண்டாவைக் கிளறினார்.

 

ஒருதட்டினை கையில் வைத்து கரண்டியால் தட்டினை அடித்து ஒலி எழுப்பினார்.

தெருவில் பேசிக்கொண்டிருந்தவர்கள், விளையாடிக் கொண்டிருந்தவர்கள், ஆடிக்கொண்டிருந்தவர்கள், பாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.

“எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு முன்னாடி தட்ட எடுத்துக்கிட்டு வரிசையா தெருவில உட்காருங்க.

நிலா சோறு சாப்பிடுவோம்.

இன்னைக்கு தை மாத பௌர்ணமி” என்றார்.

என்ன ஆச்சர்யம். பாட்டி சொன்ன மாதிரியே எல்லோரும் வரிசையாக தட்டினை எடுத்துக் கொண்டு அவரவர் வாசலில் அமர்ந்தனர்.

அன்னம்மாள் பாட்டி எல்லோர் வீட்டிலிருந்தும் பெறப்பட்டு, அண்டாவில் வைத்திருந்த சாதத்தினை கிளறி குண்டானில் எடுத்து தட்டுகளில் பரிமாறினார்.

உப்பு தண்ணீர் குழாயில் சண்டையிட்ட அடுத்தடுத்த வீட்டு ராணி அத்தையும், வேணி அத்தையும் அருகருகே அமர்ந்து பாட்டி இட்ட நிலா சோற்றினை உண்டனர்.

நீண்ட நாட்கள் பேசாதிருந்த மயிலுவின் அம்மாவும், சித்தியும் (சித்தப்பாவின் மனைவி) சாடை மாடையாகப் பேசிக் கொண்டனர்.

அன்னாம்மாள் பாட்டி திரும்பவும் உணவு கேட்டவர்களுக்கு அண்டாவில் இருந்து பரிமாறினார்.

மயிலு ரமாவிடம் “நிலா சோறு நல்ல இருக்குல. நாம சாப்பிட்டுட்டு கொடி கம்பத்துக்குப் போவோமா?” என்றாள் ஏக்கத்துடன்.

“சரி” என்றாள் ரமா.

“கொடிக் கம்பத்திற்கு போவதுக்கு முன்னாடி நாம ஊர ஒரு ரவுண்டு அடிப்போமா?”

“ம்… ம்… சரி போவோம்” என்றாள் ரமா.

 

 

இருவரும் மாரியம்மன் கோவில் தெருவிற்குச் சென்றனர். அங்கு அம்மன் கோவில் முன்பு இருந்த சதுரவெளியில், பெண்கள் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஊரின் வரவு, செலவு பார்க்கும் அலுவலகமான மக‌மைக் கடையின் முன்பு பெரும் கூட்டம் இருந்தது.

ஊரின் தலைவர் தோரணையில் பெண் ஒருவர் அமர்ந்து, வழக்கு ஒன்றினை விசாரிப்பது போன்று ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. (சாதாரண நாட்களில் ஊரில் நடக்கும் வழக்குகள் ஊர் தலைவரால் அங்கு தான் விசாரிக்கப்படும்.)

அதனைவிட்டு கோவில் முன்பு வந்ததும் பெண்கள் சிலர் கும்மியடித்துக் கொண்டிருந்தனர்.

ஊருக்கு மேற்கே உள்ள கலையரங்கத்தில் இளம்பெண்கள் பாட்டி ஒருவருடன் டேப்ரிக்காடரில் பாடல்களைப் போட்டு ஆடிக் கொண்டிருந்தனர்.

அவர்களை வேடிக்கை பார்த்து பெண்கள் சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர். திருவிழா சமயத்தில் கலையரங்கத்தில்தான் ஆடல் பாடல், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

வடக்குத் தெருவில் கோகோ வெகுஜோராக நடந்து கொண்டிருந்தது. ரமாவின் தோழியர் சிலர் கோகோ ஆடிக்கொண்டிருந்தனர்.

கீழத்தெருவுக்கு வந்த போது தெருக் கடைசியில் சத்தம் அதிகமாகக் கேட்டதும் அங்கே ரமாவும், மயிலும் ஓடினர்.

அங்கே 20வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனின்மீது வயதான பெண்கள் மாட்டுச் சாணத்தைக் கரைத்து ஊற்றி, குச்சி துடைப்பை கட்டையால் அடித்துக் கொண்டிருந்தனர்.

விசாரித்தபோது அவ்விளைஞன் சைக்கிளில் ஊருக்குள் வர முயற்சித்திருக்கிறான். பெண்கள் தடுத்தும் கேளாமல் நுழைய முயற்சித்த போது தான் சாணக் குளியலும், துடைப்பக் கட்டை பூஜையும் பரிசாகப் பெற்றிருக்கிறான்.

பெண்கள் அவனின் சைக்கிளைப் பிடுங்கி விட்டு அவனை விரட்டி அடித்தனர். சைக்கிளை மகமைக் கடைக்குக் கொண்டு சென்றனர்.

 

 

கீழத் தெருவிலிருந்து தெற்குத் தெருவிற்குள் நுழைந்து, கொடிக் கம்பத்திற்கு ரமாவும் மயிலும் போனபோது, அவர்களின் வகுப்புத் தோழியர் பலர் அங்கு அமர்ந்திருந்தனர்.

ரமாவையும் மயிலுவையும் கண்டதும் நகர்ந்து உட்கார இடம் அளித்தனர். சிறிது நேரம் தோழியருடன் கொடிக் கம்பத்தில் அமர்ந்து அரட்டையடித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அன்னாத்தாள் பாட்டி தூரத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்தவர்களை அழைத்து கொடிக் கம்பத்தின் அருகே இருந்தவர்களுடன் சேர்ந்து விளையாடுமாறு கூறினார்.

அங்கிருந்தவர்களை இருஅணிகளாக பிரித்து விளையாடச் செய்தார். ரமாவிற்கு கொடிக் கம்பத்திலிருந்து இறங்க விருப்பமில்லாததால் அவளைத் தவிர மற்றவர்கள் கபடி விளையாடத் தொடங்கினர்.

ரமாவும், பாட்டியும் விளையாட்டினை கொடிக் கம்பத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரமா “பாட்டி, நிலா சோறு சூப்பர்.” என்றாள்.

இது தான் நமது ஊரின் சிறப்பு என்றாள் பாட்டி.

“சண்ட போட்டுகிட்டவங்க சாப்பாட்ட நான் சாப்பிட மாட்டேன் அப்படின்னு யாரும் இந்த நிலா சோறுல சொல்ல முடியாதுல.

பேசாதவங்க பேசிக்கிட்டாங்க. சண்ட போட்டவங்க ஒன்னாயிட்டாங்க. எல்லாரும் ஒத்துமையா இருக்கனும்முனு தான் நான் இப்படி செஞ்சேன்.

அது சரி. அங்க பாரு கண்மணியையும் அவ அத்தை பார்வதியையும்” என்று கபடி விளையாடிக் கொண்டிருந்த பெண்களைக் காண்பித்தார் பாட்டி.

பார்வதி கபடி பாடி எதிர்அணியில் இருந்த கண்மணியை தொட்டு அவுட்டாக்கி விட்டார். கண்மணியின் அக்கா பார்வதியை அவுட்டாக்கி வெளியே உட்கார வைத்துவிட்டார்.

கண்மணி வீட்டிற்கும், பார்வதி வீட்டிற்கும் இடையே பேச்சு வார்த்தை கிடையாது. ஆனாலும் கண்மணியும், பார்வதியும் அவுட்டாகி வெளியே உட்கார்ந்து பகையை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“உங்க அம்மா சொன்னாங்க; கொடிக் கம்பத்துல உட்காரனும்முனு சொல்லிட்டே இருந்தா ரமா; ஆனா வாய்ப்புள்ள இன்னிக்கு பன்னென்டு மணியில இருந்து வெளியே வராம படிச்சிட்டு இருக்கான்னு வருத்தப்பட்டாங்க.

எப்பயும் ஒரே வேலைய செஞ்சிட்டு இருக்கக் கூடாது. இடை இடையே நம்மள ஆசுவாச படுத்திக்கனும். வாய்ப்புகளை சரியா பயன்படுத்தி செயல்படுபவனே புத்திசாலி.

நீ எங்க நிலாச்சோறு சாப்பிட்டுட்டு திரும்பவும் வீட்டுக்குள்ள போயிருவியோன்னு பாத்தேன். நல்லவேளை இன்னிக்கான வாய்ப்ப பயன்படுத்தி கொடிக் கம்பத்துல உட்கார்ந்து வேடிக்கை பார்க்க.

இப்ப உன்னோட ஆசை நிறைவேறிருச்சு. நாளைக்கு மத்தியானத்திலிருந்து நிம்மதியா படி.’ என்றார்.

அன்றைக்கு அன்னாத்தாள் பாட்டி தனக்கு கிடைத்த நிலா சோறு வாய்ப்பினைப் பயன்படுத்தி சின்ன சண்டைகள், குடும்பச் சண்டைகள், தண்ணீர் சண்டைகள் என பல்வேறு மனக் கசப்புகளிடையே வாழ்ந்த பெண்களை ஒற்றுமைப் படுத்தினார்.

வழிபாடு முடித்து திரும்பிய ஆண்களுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. பெண்கள் எல்லோரும் சண்டையை மறந்து ஒருவருடன் ஒருவர் பேசிச் சிரித்து சகஜமாகப் பழகினர் என்பதே அது.

அதற்குபின் வந்த நாட்களிலும், சிறு சண்டைகள் அவ்வப்போது வந்தாலும் பெண்கள் அவர்களுக்குள் சஜசமாகப் பழகினர்.

வனக்காளியம்மன் வழிபாட்டில் நிலா சோறு வழங்கிய அன்னாத்தாள் பாட்டி, எல்லாருக்கும் பொதுவாக ஒளி கொடுக்கும் நிலாவாக ரமாவின் கண்களுக்குத் தெரிந்தார். உங்களுக்கும் தானே?

வ.முனீஸ்வரன்

 


Comments

“நிலா சோறு – கிராமத்து சிறுகதை” மீது ஒரு மறுமொழி

  1. அருமை சகோதரா…ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் முத்துசாமியா புரம் என்ற ஊரில் இன்னும் குறிப்பிட்ட நாளில் ஆண்கள் காட்டுக்குள் இருக்கும் கோவிலுக்குச் செல்வார்கள். பெண்கள் மட்டுமே ஊரில் இருப்பார்கள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.