நீயும் கற்கலாம் தமிழை என்று கலியன் சவுரி ராஜப் பெருமாளை அழைக்கிறார்.
கலியன் என்பது திருமங்கை ஆழ்வாரின் பெயராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரி ராஜப் பெருமாளை நீயும் கற்கலாம் தமிழை என்று அழைக்கிறார்.
பெரும்புறக் கடலை, கடல் வண்ணனை, ஆலிலைப் பள்ளி கொண்டானை, யாவர்க்கும் அருள் செய்யும் ஈசனை, தெள்ளியார் வணங்கும் தேவனை, ஏற்றினை இமயத்துள் எம்மீசனை, திசை நான்முகன் தந்தையை, விளங்கு சுடர் சோதியை, திருமங்கை மணாளனை திருக்கண்ணபுரத்தில் கண்ணாரக் கண்டு உகந்தார் திருமங்கை ஆழ்வார்.
பெருமானே இங்கு இன்தமிழால் அருளிச்செய்த அருட்பாக்களை பக்தியுடன் படிப்பவர் மேலுலகில் இன்பம் எய்துவர். மேலும் பெருமானே உனக்கும் விருப்பமாகில் இத்தமிழ்ப் பாசுரங்களின் பொருளை என்னிடம் கற்கலாம் என்று பரவசத்துடன் பாடி மகிழ்ந்தழைத்தார் கலியன்.
பக்தியுடன் உணர்ந்த அடியாரிடம் கற்பது என்பது பெருமானுக்கு மிகவும் பிடிக்கும்.
வசிட்டரிடம் இராமனாயும், சாந்தீப முனிவரிடம் கண்ணனாயும் கற்றவன்.
பீஷ்மரிடம் நாமமாயிரத்தையும் கேட்டவன்.
ஆகவே கலியன் தன் இன்தமிழையும் கற்க அழைக்கின்றார்.
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று
காதலால் கலிகன்றி உரைசெய்த
வண்ணவொண் தமிழ் ஒன்பதோடு ஒன்றிவை
வல்லராய் உரைப்பார், மதியம் தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ எய்துவர்
மெய்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றேந்திய
கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம்
கவியின் பொருள் தானே!
-திருமங்கை ஆழ்வார்
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450
இறைவனிடம் உரிமையோடு தோழமை உணர்வு கொண்டு பாடும் மங்கை வேந்தனின் இன்றமிழ் கவிதை இதயத்தை நெகிழ வைக்கிறது. தங்கள் அருமையான விளக்கத்தால் கண்ண பெருமானோடு நாங்களும் இந்தத் தமிழ்க் கவிதையைக் கற்றோம். நன்றி! வாழ்த்துகள்!