அண்மையில் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த ஓர் ஆய்வுக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அது எளிதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்களைக் கண்டறியும் முறையைப் பற்றிய கட்டுரை.
அப்பொழுது சில கரிமச் சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாடுகளை ஒரு தாளில் வரைந்து கொண்டிருந்தேன்.
″சார், சார்…″ – குரல் உரக்கக் கேட்டது.
‘தண்ணீர் குடுவையில் இருக்கும் நீரின் குரல் தான் அது’ என்பதை நான் உணர்ந்தேன்.
″ஆம்… சொல்லு. நல்லா இருக்கியா?″
″நான் நல்லாதான் இருக்கேன். நீங்க?″
″இம்..ம்.. நல்லா இருக்கேன்.″
″ஏதோ வரைஞ்சிக்கிட்டு இருக்கீங்களே. என்னது?″
″இதுவா…? கரிமச் சேர்மத்தோட மூலக்கூறு வாய்பாடு.″
″ஓ! ஓ…. என்னோட வாய்பாடு H-H-O தானே?
″என்னது H-H-O வா?″
″ஆமாம். H2O வத்தான் H-H-O –ன்னு சொன்னேன்.″
″ஐயோ! தப்பு″
″தப்பா?″
″ஆமாம். H2O-ல ரெண்டு H-O தொகுதிகள் இருக்கு. அதனால் நீரின் மூலக்கூறு வாய்பாட்ட H−O−H-ன்னு தான் எழுதணும். நான் ஏற்கனவே சொன்னேன்னு நினைக்கிறேன். நீ மறந்திட்டுயா?″.
″சார், எனக்கு நியாபகம் இல்ல. அதோட, இந்த தகவல சொன்னீங்களான்னு உங்களுக்கே சந்தேகம் இருக்கு.″
″சரி சரி. இப்ப சொன்னேன்ல. இனி மறக்காத.″
″சரி சார். என்னோட வாய்பாட்ட H−O−H-ன்னு சொன்னீங்க. அப்ப என்னோட வடிவம் நேரியல் வடிவமா?″
″இல்ல இல்ல. எழுதும் போது H−O−H –ன்னு எழுதினாலும், உண்மையில இரண்டு H−O பிணைப்புகளும் 104.4° கோணத்துல தான் இருக்கும். அதனால, தனித்த நீர் மூலக்கூறு வளைந்த வடிவத்துல இருக்கும். கிட்டத்தட்ட V-வடிவம்ணு சொல்லலாம். இதோ பாரு,″ என்று தாளில் நீர் மூலக்கூற்றின் வடிவத்தை வரைந்து காண்பித்தேன்.
நீர் மூலக்கூறின் வளைந்த வடிவம்
அதை பார்த்ததும், ″இப்ப புரியுது சார்″ என்றது நீர்.
″உடனே, இம்..ம்.. இன்னும் துல்லியமா சொல்லணும்னா, அதாவது, ஆக்ஸிஜன் அணுவுல இருக்கும் இரண்டு இணை எலக்ட்ரான்களையும் சேர்த்து பார்த்தா, நீரின் வடிவம் நான்முகி வடிவம்ணு சொல்றாங்க.″
″இது சுத்தமா புரியல சார்.″
″சரி, இந்த வடிவத்த வரைஞ்சு காட்டுறேன்″ என்றுக் கூறி, நீரின் நான்முகி வடிவத்தை ஒரு தாளில் வரைந்து காட்டினேன்.
நீரின் நான்முகி வடிவம்
″சரி சார். இப்ப புரியுது. ஆனா, திட, திரவ, வாயுன்னு எல்லா நிலைமையிலும் இந்த வடிவத்துல தான் நான் இருப்பேனா?″
″வாயு நிலையில நீ கிட்டத்தட்ட தனித்து தான் இருப்பே. ஆனா, திரவ நிலையில கொஞ்ச மாற்றம் இருக்கும். திட நிலையில நிறைய மாற்றம் இருக்கு.″
″நீங்க சொல்றத பார்த்தா, ஒவ்வொரு நிலைமையிலும் வெவ்வேறு வடிவில இருக்கேனா?″
″ஆமாம். திடநிலையா இருந்தாலும், திரவநிலையா இருந்தாலும், ஒரு நீர் மூலக்கூறு மற்ற நான்கு நீர் மூலக்கூறுகளோட ஹைட்ரஜன் பிணைப்பை ஏற்படுத்திக்கும்.
அதாவது, ஆக்ஸிஜனை சுற்றி இருக்கும் இரண்டு ஹைட்ரஜன் மற்றும் இரண்டு இணை எலக்ட்ரான்கள், நான்கு நீர் மூலக்கூறுகளோடு நான்கு ஹைட்ரஜன் பிணைப்புக்கள ஏற்படுத்திக்கிட்டு சேர்ந்து இருக்கும்.
இதே மாதிரி நீர் மூலக்கூறுகள் எல்லாம் பிணைஞ்சு இருக்கும். அப்ப பார்த்தாலும், திரவ நீருக்கு நான்முகி வடிவம் தான் இருக்கு. இதுல புதிய தகவல் என்னன்ன, சில திரவ நீர் மூலக்கூறுகள் நான்முகி-அல்லாத வடிவத்தில்லையும் இருக்காம்.″
″நான்முகி-அல்லாத வடிவமா? இத எப்ப கண்டுபிடிச்சாங்க?″
″சமீபத்துல தான். டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிரத்யேக கணக்கீட்டு முறை, மற்றும் ஆய்வகச் சோதனையின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில தான் இதைக் கண்டுபிடிச்சிருக்காங்க.″
″நல்லது சார். திட நிலையில என்னோட வடிவம் நல்லா மாறுதுன்ணு சொன்னீங்களே″
″ஆமாம். நீர் திட நிலையில, அதாவது பனித்துகளா இருக்கும்போது குறைந்தது பதினெட்டு வடிவங்கள்ல இருப்பதா சொல்றாங்க.″
″என்னது பதினெட்டு வடிவங்கள்லையா?″
″ஆமாம். அறுகோண தகடு, நட்சத்திர டென்ட்ரைட்டு, தூண், ஊசி, பிரமிடு, கோளம், கனசதுரம் போன்ற பல வடிவங்கள்ல பனிச் செதில்கள் இருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து பனிச் செதில்களின் (snowflakes) வடிவம் மாறும்.″
″ஆம். இந்த வடிவங்கள்ல என்னைப் பார்ப்பதற்கு ரொம்ப நல்லா இருக்குமில்லே?″
″ஆமாம். ரொம்பவே நல்லா இருக்கும். ஆனா….″
″ஆனா, என்ன சார்?. ஏதாவது பிரச்சினையா?″
″உம்ம். அண்டார்டிகாவில இருண்ட குளிர்காலத்துல, துருவ அடுக்கு மண்டல மேகங்கள்ல பனிக்கட்டி படிகங்கள் உருவாகுது. இந்த பனித்துகள்களே, சில ஒளி வேதியியல் வினைகளுக்கு சரியான தளமாக செயல்படுது.
பிறகு, இந்த வினைமூலமா காற்றில் இருக்கும் குளோரினிலிருந்து தனியுருப்புகளாக உருவாகி வெளியேறுது. இந்த தனியுருப்புகளே அண்டார்டிகா பகுதியில ஓசோன் துளை ஏற்படுவதற்கு காரணமா இருக்குது.
ஆனா, இதுல உன்னோட தப்பு ஒன்னும் இல்ல.″
″சார். அப்ப என்னோட வடிவத்தால எந்த பயனும் இல்லையா?″
நீரின் வடிவம் தரும் பயன்கள்
″என்ன இப்படி கேட்டுட்டே. பனியின் வடிவமைப்பு காரணமாகத்தான், அதன் அடர்த்தி திரவ நீரை விட குறைவாக இருக்கு. அத்தோடு நீரின் உருகுநிலை, பூஜ்ஜியம் டிகிரி செல்சியசும் கொதிநிலை, நூறு டிகிரி செல்சியசும் இருக்கு.
இதெல்லாம், நீரை ஒத்த சேர்மமான ஹைட்ரஜன் சல்பைடு, அதாவது ″H2S″-உடன் ஒப்பிடும்போது ரொம்ப அதிகம். அதனாலத்தான் நீ எல்லா உயிருக்கும் பயன்படுற மாதிரி இருக்க.
இதுமட்டுமில்லே, நீரின் பாகுத்தன்மை மற்றும் மேற்பரப்பு இழுவிசை போன்ற பிற பண்புகளுக்கும் காரணமா இருப்பது நீரின் வடிவம் தான்.″
″மகிழ்ச்சி சார்.″
″இன்னொன்றும் சொல்லணும். திரவ நீருக்கு நான்முகி-அல்லாத வடிவமும் இருக்குன்ணு கண்டுபிடிச்சிருக்காங்கன்ணு சொன்னல்ல, இது உயிரியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தலாமுன்னும் விஞ்ஞானிகள் நம்புறாங்க.″
″வாழ்த்துகள் சார்.″
″நன்றி. நாம பிறகு சந்திக்கலாமா? இப்ப எனக்கு அவசரமா முடிக்க வேண்டிய வேல இருக்கு″ என்றேன்.
″சரி சார். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் அப்புறம் வர்றேன்″ என்றுக் கூறி நீர் புறப்பட்டது.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
நீர் நுண்துளி – நீருடன் ஓர் உரையாடல் 36