நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்

பகல் ஒரு மணி இருக்கும். அது கத்திரி வெயில் காலம் வேறு.

மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. அப்பொழுது நிலவிய வெப்பத்தை தாங்க முடியவில்லை. எனது தலையிலிருந்து காதின் ஓரமாக வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

வியர்வையை கையால் துடைத்துக் கொண்டு எனது கழுத்தையும் துடைத்தேன். வியர்வை காய்ந்து, உப்பு படர்ந்திருந்தது.

எழுந்து வீட்டின் பின்புறம் சென்றேன். அங்கிருந்த குழாயை திறந்து இரண்டு கரங்களையும் நீட்டினேன். குழாயிலிருந்து ஊற்றிய நீரை பிடித்தேன்.

நீர் சுட்டது.

“என்னடா இது, வெந்நீர் மாதிரி இவ்வளவு சூடா இருக்கு. டாங்க்குல இருந்து தானே, தண்ணீர் வருது” என்று முணுமுணுத்தபடியே கையிலிருந்த வெந்நீரால் முகத்தைக் கழுவினேன்.

வெப்பம் தணியாதே. அதனால், அருகில் இருந்த வாளியை எடுத்து குழாய்க்கு கீழே வைத்தேன்.

‘ஒருவேள கொஞ்ச நேரம் கழிச்சு, தண்ணீர் கொஞ்சம் சில்லுன்னு வருமோ?’ என்ற ஆசையில்.

“சார், டாங்க்குலேயே நான் சூடாயிட்டேன். இப்பத்திக்கு நான் சூடா தான் வருவேன்.” என்றது நீர்.

“அட! நீர் தான் பேசுறியா?” என்றேன்.

“ஆமாம் சார், வெயில் அதிகமோ?”

“ஆமாம், அடிக்கிற கத்தரி வெயில்ல, டாங்க்குல இருக்கிற நீர் கூட சூடாயிடிச்சே.”

“சரிதான், ஆனா, சூரிய வெப்பத்தால மட்டுமா நான் சூடாகிறேன். இல்லையே? பூமியாலும் நான் சூடாகிறேனே.”

எனக்கு சட்டென புலப்படவில்லை. அதனால், “நீ பூமியால எப்படி சூடாவ?” என்றேன்.

“என்ன சார் உங்களுக்கு தெரியாதா? பூமியில சில பகுதிகள்ல வெந்நீரூற்றா நான் வர்றேனே” என்றது நீர்.

“ஆமா, Hot spring-ன்னு சொல்லுவாங்க. இப்பதான் நினைவிற்கு வருது.”

“ஆ..ஆ.. அப்ப உங்களுக்கு வெந்நீரூற்று பற்றி தெரியுமில்ல”

“ரொம்ப தெரியாது. ஆனா, நிலத்தடிநீர், குறிப்பிட்ட இடத்துல இருக்கும் புவிவெப்பத்தின் காரணமாக சூடேற்றப்பட்டு வெந்நீராக பூமியின் மேற்பரப்புல ஊற்றெடுக்கும் – அப்படீன்னு படிச்சிருக்கேன்.”

“ஆமா, உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்முன்னு நினைக்கிறேன். பூமியின் மையத்துல, அதீத வெப்பம் காரணமாக பாறைகள் கூட உருகிய நிலையில தான் இருக்கும்.”

“ஆமாம்.. அதுக்கு மாக்மா-ன்னு சொல்லுவாங்க.”

“சரி தான் சார். இந்த மாக்மா பூமியின் வெவ்வேறு அடுக்குகளால் சூழப்பட்டிருக்கு. இந்த அடுக்குகளில் விரிசல் இருந்தால், மாக்மாவிலிருந்து சுற்றியுள்ள பாறை அடுக்கு பகுதிக்கு வெப்பம் மாற்றப்படும்.

அடுத்து, வெப்ப ஆற்றல் அனைத்தும் பாறைகளிலிருந்து அங்குள்ள தண்ணீருக்கு மாற்றப்படும். இதனால நீரின் வெப்பநிலை அதிகரிச்சு, அதன் அடர்த்தி குறையும். இதன் விளைவாக வெந்நீர் ஊற்றாக, பூமியின் மேற்பரப்பை நோக்கி வரும்.” என்று கூறியது நீர்.

“நீ சொல்றது சரியான விளக்கும் தான். பொதுவா, பூமியிலிருந்து வெளிவந்து தரையில் பாயும் போது நீரின் வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட்டை, அதாவது 36.7 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருந்துச்சுனா, அதுக்கு வெந்நீரூற்று என்று சொல்லுவாங்க.”

“சரிங்க, இந்தியாவில் பல வெந்நீரூற்றுகள் உள்ளன. உங்களுக்கு தெரியுமா?”

“நீயே சொல்லேன்” என்றேன்.

“உம்ம்.. இமாச்சல பிரதேசத்துல, கீர் கங்கா (Kheer Ganga) எனும் வெந்நீரூற்று இருக்கு. ரேஷி (Reshi) வெந்நீரூற்று சிக்கிமில இருக்கு. பனமிக் (Panamik), மணிகரன் சாஹிப் (Manikaran Sahib) மற்றும் தட்டபாணி (Tattapani) உள்ளிட்ட ஏராளமான வெந்நீரூற்றுகள் இந்தியாவுல இருக்கின்றன.”

“நன்றி” என்றேன்.

உடனே, மற்றொரு செய்தியும் எனது நினைவிற்கு வந்தது. அப்பொழுது, “தெரியுமா? குளிர்ச்சியான மற்றும் உறைபனி இடங்கள்ல கூட வெந்நீரூற்றுகள் சுரக்கின்றன” என்றேன்.

“எனக்கும் தெரியுமே” என்றது நீர்.

“உம்ம்.. வெந்நீரூற்றுப் பகுதிகள்ல எந்த மாதிரியான உயிரினங்கள் வாழுது?” என்றேன்.

“இம்ம்.. சிலவகை நுண்ணியிரிகள். அப்புறம், சில விலங்குகள் கூட வெந்நீரூற்றுகளின் வெப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. மக்காக்குகள் (macaques) எனப்படும் ஒருவகை குரங்குகள உதாரணமா சொல்ல முடியும்” என்றது நீர்.

“நன்றி” என்றேன்.

“பரவாயில்லங்க… எனக்கு ஒரு சந்தேகம். கேட்கட்டுமா?”

“உனக்கா? கேளேன்.”

“வெந்நீரால, அதாவது வெந்நீரூற்றுகளால என்ன நன்மைகள் மனிதர்களுக்கு இருக்கின்றன?”

“நான் வாசிச்ச வரைக்கும், இயற்கை வெந்நீரூற்றுகளில் சில, குறிப்பா குளிப்பதற்கு பாதுகாப்பான வெப்பநிலை கொண்டிருக்கும் நீரூற்றுகள் இருக்கின்றன. அத்தோடு, சில வெந்நீருற்றுகள்ல, நன்மை பயக்கும் வேதிமங்கள் இயற்கையாகவே இருப்பதாக படிச்சிருக்கேன். இதுபோன்ற வெந்நீரூற்றுகள் உடல்நலன் மற்றும் சுற்றுலா சார்ந்து பயன்படுதாம்.”

“அப்படியா! நல்லது தான்.”

“ஆனா… சில பாதகங்களும் இருக்கு. சொல்லட்டுமா?” என்றேன்.

“சொல்லுங்க சார்.” என்றது நீர்.

“சில வெந்நீரூற்றுகள் மிகவும் சூடாக இருக்குதாம். அதனால அவற்றை பயன்படுத்த முடியாது. இன்னும் சில வெந்நீரூற்றுகளில் மனிதர்களுக்கு நோய்கள உண்டுபண்ணக் கூடிய நெய்க்லீரியா ஃபோலெரி (Naegleria fowleri) போன்ற நுண்ணியிரிகளும் இருக்கின்றனவாம். வேறு சில வெந்நீரூற்றுகளில் இயற்கையாகவே மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் இருக்குதாம். இதுபோன்ற வெந்நீரூற்றுகளையும் மனிதர்கள் பயன்படுத்த முடியாது.”

“அப்படியா! நீங்க ஏதாவது வெந்நீரூற்றுக்கு போயிருக்கீங்களா?”

“இல்ல. வெந்நீரூற்றுகள் பற்றி சில செய்திகள படிச்சிருக்கேன். அவ்வளவு தான்.” என்றேன்.

“சரிங்க சார். ரொம்ப நேரம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்.” என்றுக் கூறிச் சென்றது நீர்.

வாளியில் பிடித்திருந்த நீரின் வெப்பம் சற்று தணிந்ததுபோல தோன்றியது. அந்த நீரை எடுத்து எனது முகம், கை மற்றும் கால்களை கழுவிக் கொண்டு வீட்டுற்குள் நுழைந்தேன், எனது பணிகளை தொடர்வதற்காக.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11

நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.