நீர் ஆற்றல் – நீருடன் ஓர் உரையாடல் 45

′அந்த பூங்காவிற்குச் செல்ல வேண்டும்′ என்று கடந்த சில நாட்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்.

காரணம், புதிதாக திறக்கப்பட்ட அந்தப் பூங்காவில் அனைவரையும் கவரும் பல அம்சங்கள் இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். அத்தோடு பூங்கா, வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது.

பள்ளிப் பருவ காலத்தில் நண்பர்களுடன் பூங்காவிற்கு சென்றிருக்கிறேன். பல வருடங்கள் உருண்டோடி விட்டன. தற்போது தான், ′புதிய பூங்காவிற்குச் செல்ல வேண்டும்′ என்ற எண்ணம் என்னுள் தோன்றியிருக்கிறது.

அன்று சனிக்கிழமை. மாலை 5.30க்கு மேல் இருக்கும்.

′பூங்காவிற்கு செல்லலாம்′ என்று முடிவு செய்தேன். வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கினேன். இருபது நிமிடங்களில் பூங்கா வந்தடைந்தேன்.

பூங்கா வாயில் பெரிதாக இருந்தது. மக்கள் நடமாட்டம் இருந்தது. சில முதியோர்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிலர் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

நான் அந்த பூங்காவை சுற்றி வரத் தொடங்கினேன்.

விதவிதமான செடிகள் இருந்தன. ஆங்காங்கே பெரிய சிற்பங்கள் வைக்கப்படிருந்தன. சில கான்கிரீட் கலவையால் செய்யப்பட்டவை.

ஒரு சில சிற்பங்கள் உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன. சிலைகள் அனைத்தும் தத்ரூபமாக இருந்தன. அவற்றை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். பிரமிப்போடு சுற்றி வந்தேன்.

ஒரு இடத்தில் சிறிய அளவில் அருவி போன்ற அமைப்பு பாறைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. சற்று உயரத்திலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருந்தது.

அங்கு வண்ண மின்விளக்குகள் மிளிர்ந்து கொண்டிருந்தன. அருகில் சென்று நீர் மேலிருந்து கீழே பாய்வதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

″என்ன சார்? இந்தப் பக்கம்?″

‘யார்?’ எனத் தெரியவில்லை. சுற்றி சுற்றிப் பார்த்தேன். மனிதர்கள் இருந்தார்கள் ஆனால் யாரும் என்னிடம் பேசவில்லை.

′யாரா இருக்கும்?′ என்று எண்ணிக் கொண்டிருக்க, ″சார் நான் தான். நீர் பேசுறேன். தெரியலையா?″ என்று அந்தக் குரல் கேட்டது.

சட்டென உணர்ந்தேன்.

″ஓ.. நீ தானா? வேற யாரோன்ணு நெனச்சேன்″ என்றேன்.

″நானே தான். என்ன திடீர்னு இந்தப் பக்கம்?″

″பூங்காவ சுத்திப் பார்க்கலாம்னு தான்.″

″எப்படி இருக்கு?″

″சிறப்பா இருக்கு.″

″நான் அருவியா ஓடுவது எப்படி இருக்கு?″

″அருமையா இருக்கு. அதான் இங்க நிக்குறேன்.″

″இம்ம்… என்னைப் பார்ப்பதாலக் கூட மகிழ்ச்சி கிடைக்குதா?″.

″ஆமாம். அத்தோட நீர், மேட்டிலிருந்து பள்ளத்த நோக்கி ஓடுவதால நன்மைகளும் இருக்கு. உனக்கு தெரியுமா?”

″என்ன சார் சொல்றீங்க? நான் ஓடுவதால நன்மைகளா?″

″ஆமா. மேட்டிலிருந்து கீழே பாயுற, அல்லது விரைந்து ஓடுகிற நீருக்கு ஆற்றல் இருக்கும். இத நீர் ஆற்றல் அப்படின்னு சொல்றாங்க. இந்த நீர் ஆற்றல பலவிதங்கள்ல பயன்படுத்த முடியும்.″

″நீர் ஆற்றலா?″

″ஆமாம். நீர் உயரத்துல இருக்கும் போது அதுக்கு நிலையாற்றல் இருக்கும். அதுவே ஓடும் போது இயக்க ஆற்றலா மாறுது. இந்த இயக்க ஆற்றல பிற ஆற்றல் வடிவங்களா மாற்றி பயன்படுத்துறாங்க.″

″அப்படியா… எங்கெங்க என்னோட ஆற்றல் பயன்படுது சார்?″

″உன்னோட ஆற்றல, தகுந்த வடிவமைப்புக் கொண்ட இயந்திரங்களப் பயன்படுத்தி இயந்திர ஆற்றலா மாற்றுறாங்க. உதாரணத்துக் சொல்லனும்னா, பண்டைய காலத்துலேயே, மாவு அரவை இயந்திரங்கள இயக்குவதற்கு நீரின் இயக்க ஆற்றல பயன்படுத்தி இருக்காங்க. தற்காலத்துல பல தொழிற்சாலைகளில் நீர் ஆற்றலை பயன்படுத்தி இயங்கும் இயந்திரங்கள் இருக்குது.″

″சிறப்பு சார்.″

″இது மட்டுமா. நீர் ஆற்றலில் இருந்து மின்னாற்றல், அதாவது மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுது.″

″எப்படி சார்?″

″அதே தான். நீரின் இயக்க ஆற்றல மின்னாற்றலா மாத்துறாங்க.″

″அது தான் எப்படி மாத்துறாங்கன்ணு கேக்குறேன்.″

″சொல்றேன். பாயும் நீர் விசையாழியின் மீது மோதும் போது, நீரின் இயக்க ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்படுது. அதுக்கப்புறம், மின்னாக்கி மூலமா இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுது.″

″சிறப்பு சார். நீர் மின்சாரத்த எங்க உற்பத்தி செய்யுறாங்க?″

″அணைகள், நீர்மின்நிலையங்களா பயன்படுத்தப்படுது. இதுதவிர, கடல் அலைகள், ஓதங்கள் மூலமாகவும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.″

″சரி சார்.″

″உம்ம். மற்ற முறைய ஒப்பிடும் போது, நீர் மின்சாரத்தால சிறப்பு நன்மைகள் இருக்குது.″

″அப்படியா?″

″ஆமாம். நீர் மின்சார உற்பத்தி முறையால காற்று மாசு பெருமளவு ஏற்படுவதில்ல. மற்ற முறைகளோட ஒப்பிட, இதற்கான செலவு குறைவுதானாம். அத்தோட, நீர் மின்னாற்றல் மிகுந்துள்ள இடங்கள்ல தொழிற்துறை செயல்பாடுகளும் அதிகரிக்கும்லே. இதனால வேலை வாய்ப்புகள் பெருகும்.″

″நல்லது சார்.″

″இம்ம். இன்னொரு செய்தியும் இருக்கு.″

″என்னது?″

″மழை பெய்யும் போதும், பல பில்லியன் லிட்டர் நீர், பூமியில விழுது. இத சரியான முறையில பயன்படுத்தினா பெருமளவு மின்சாரம் தயாரிக்க முடியும்னு சொல்றாங்க. இது சார்ந்த ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருது.″

″நல்லது சார். விஞ்ஞானிகளோட முயற்சி வெற்றி பெறட்டும்.″

″நல்லது. சரி நாம் பிறகு சந்திக்கலாமா?″

″உம்ம் சரி சார்″ என்றுக் கூறி நீர் சென்றது.

பூங்காவின் பிற பகுதிகளை கண்டு மகிழ நான் அங்கிருந்து நகர்ந்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் தீயணைப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 44

நீரும் நாகரிகமும் – நீருடன் ஓர் உரையாடல் 46

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.