நீர் நிறம் – நீருடன் ஓர் உரையாடல் 41

மலை, ஆறு, மரங்கள், செடிகொடிகள், பறவைகள், மேகம், சூரியன் உள்ளடங்கிய வழக்கமான இயற்கை காட்சியை ஒருவழியாக கரிக்கோலால் (pencil) வரைந்து முடித்தேன்.

பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் வரைகிறேன்.

இன்று நான் வரைந்த ஓவியம் சுமாராக இருக்கிறது.

“இதுக்கு கலர் அடிச்சா நல்லா இருக்குமே” என்று தோன்றியது.

நேற்று நான் வாங்கி வந்திருந்த நீர் நிறங்களையும், தூரிகையினையும் எடுத்து வந்து மேசையில் வைத்தேன்.

அப்பொழுது தான் தோன்றியது, நீர் வேண்டும் என்பது. உடனே, சமையலறைக்குச் சென்று ஒரு லோட்டாவில் நீரை எடுத்துக் கொண்டு வந்தேன்.

அதன்பின்னர் நீர் நிறத்தை கரைப்பதற்கு ஒரு தட்டு தேவைப்பட்டது. இதற்கென ஒரு நெகிழி தட்டு எடுத்து வந்தேன்.

முதலில் பழுப்பு நிறத்தை நீரில் கரைத்து, அதனை மலை மற்றும் மரப்பகுதிகளில் பட்டும் படாமலும் அடித்தேன்.

சிலநிமிடங்களுக்குப் பிறகு பச்சை நிறத்தை எடுத்து இலை ஓவியத்தில் அடித்தேன்.

பின்னர் மலையிலிருந்து ஓடி வருமாறு வரைந்திருந்த ஆற்று நீருக்கு வெளிர் பச்சை நிறத்தை அடித்தேன்.

“நல்லா இருக்கே…” குரல் ஒலித்தது. அது லோட்டாவில் இருந்த நீரின் குரல் தான்.

“அடடே… நீரா வா வா” என்றேன்.

“ஓவியம் நல்லா இருக்கே”

“நன்றி நன்றி”

“யாரு வரைஞ்சது?”

“நான் தான். உனக்கு என்ன சந்தேகம்?”

“நீங்களா வரைஞ்சீங்க?”

“ஆமாம். நம்ப முடியலையா?”

“நீங்க வரைஞ்சு நான் பார்த்ததே இல்ல”

“ஆமாம் ரொம்ப வருஷம் ஆயிடுச்சு. சின்ன வயசுல நிறைய வரைஞ்சிருக்கேன். அதுக்கப்புறம் நேத்து தான் திடீர்ணு தோனிச்சு. அதாம், வாட்டர்கலர்ஸ வாங்கிட்டு வந்தேன், இன்னிக்கு முதலாவதா ஒரு இயற்கை காட்சிய வரைஞ்சிக்கிட்டு இருக்கேன்.”

“நல்லது சார். ஆனா எனக்கு தான் நிறமில்லையே. பிறகு ஏன் ஓவியத்துல இருக்குற ஆற்று நீருக்கு வெளிர் பச்சை நிறத்தை அடிச்சிருக்கீங்க”

“உன் கேள்வி சரி தான். ஆனா ஆற்று நீர் பச்சை நிறத்துல தெரியலாம். காரணம் என்னன்னா, அதுல பாசிகள் அதிகமா இருக்கும். இல்லைன்னா ஆற்றுப் படிவுகள் குறைவா இருக்கும்.”

“அப்படியா!”

“இம்..ம்.. நீருல இருக்கும் காரணிகளப் பொறுத்து ஆற்று நீர் நீலம், மஞ்சள் வண்ணத்துல கூட இருக்கும்.”

“ஓ..ஓ… சரி சார். நீங்க ஏதோ வாட்டர் கலர்ஸுன்னு சொன்னீங்களே அப்படீன்னா?”

“Watercolor-ன்னா தமிழ்ல நீர் நிறம் அப்படின்னு சொல்வாங்க.”

“குழப்புறீங்களே?”

“என்ன குழப்பம்? சொல்லு”

“ஆற்று நீரின் நிறத்துக்கு காரணம் சொன்னீங்க. ஆன சாதாரணமா நீருக்கு தான் வண்ணம் இல்லையே. அப்ப ஏன் மறுபடியும் நீர் நிறமுன்ணு சொல்றீங்க?”

“சரி சரி. இப்ப சொல்றேன். நீர் நிறங்கிறது வேதிநிறமி தான். இதுல கொஞ்சமா நீர கலந்து ஓவியத்துக்கு வண்ணம் பூசப் பயன்படுறதுனால, இதுக்கு நீர் நிறம் அப்படின்னு பேரு.”

“ஓ…ஓ… இப்ப புரியுது.”

“நல்லது.”

“பாத்தீங்களா!எனக்கு வண்ணம் இல்லைனாலும், என்னால ஓவியத்துக்கு வண்ணம் கொடுக்கு முடியுது.”

“ஆமாம்… உன்னால மட்டும் தான் இதெல்லாம் முடியும்”

“ஆஹா…. சரி நீர் நிறத்துல நிறமி மட்டும் தான் இருக்கா?”

“இல்ல இல்ல. நிறமியோட பசையும் இருக்கும்.”

“பசையா?”

“ஆமாம். நிறத்த கொடுக்கும் நிறமி தொங்கல் (suspension)கரைசல்ல நிலைத்திருக்கவும், அப்புறம் காகிதத்துல நிறத்த பூசிய பிறகு, நிறமி அந்த காகிதத்தோட ஒட்டிக்கவும் இந்த பசை உதவி செய்யுது.”

“இம்…”

“சில நூற்றாண்டுகளுக்கு முன்னாடி, நீர் நிறங்கள்ல சர்க்கரைய பசையாக பயன்படுத்தியிருக்காங்க. இப்பெல்லாம் அரேபியப் பசைய (gum arabic) பயன்படுத்துறாங்க.”

“ஓ…ஓ…”

“நிறமி, பசை, இவைதான் நீர் நிறத்துல இருக்கும் முக்கிய பொருட்கள். இது தவிர, கூடுதலாக wetting agent எனப்படும் நனைப்பானும் சேர்க்கப்படுது.”

“எதுக்கு சார்?”

“பசையோட நெகிழ்வு தன்மை மற்றும் கரைதிறனை மேம்படுத்த தான்.”

“சரி சார். நான் புறப்படனும் பிறகு வர்றேன்.”

“சரி அப்புறம் பார்க்கலாம்” என்று கூறி, எனது ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவதை தொடர்ந்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் உலகம் – நீருடன் ஓர் உரையாடல் 42

நீர்த் தாரை இயந்திரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் 40

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.