நுங்கு கோடை காலத்தில் கிடைக்கும் அதிஅற்புதமான பொருள். இதன் தனிப்பட்ட இனிப்புச்சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். நுங்கு பலநூறு ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கோடையின் வெப்பத்தைப் போக்க இளநீர், தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் என பல உணவுகள் இருந்தாலும் மிகப்பெரிய பலனைத் தருவது நுங்கு என்றால் அது மிகையாகாது.
கோடையில் கிடைக்கும் உணவு வகைகளில் நுங்கு குறைந்த விலையில் தெருவோரங்களில் அதிகளவு கிடைக்கிறது.
நுங்கு கற்பகத்தரு என்றழைக்கப்படும் பனை மரத்திலிருந்து கிடைக்கிறது. விசிறி போன்ற இலைகளைக் கொண்ட பனை மரத்தின் இலைகளுக்கு இடையில் கொத்து கொத்தாக நுங்குக் காய்கள் காணப்படும். இவை நுங்குக் குலைகள் என்றழைக்கப்படும்.
இக்காய்களின் வெளிப்புறம் அடர்ந்த கருஊதா நிறத்தில் கடினமானதாக இருக்கும். இதன் தலைப்பகுதி பச்சைநிற கடினமான நார் போன்ற பகுதியைக் கொண்டு நுங்குக்குலையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இக்காய்களின் உள்ளே நுங்கானது மஞ்சள் நிறத் தோலுடன் காணப்படும். நுங்கானது மஞ்சள் நிறத் தோலுக்குள் வெள்ளைநிற வழுவழுப்பான மென்மையான சதைப்பகுதியையும், இனிப்பான தண்ணீரையும் பெற்றிருக்கும்.
பனை மரத்தின் தாயகம் இந்தியா ஆகும். இது இந்தியாவில் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. இம்மரம் வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜாவா, பாகிஸ்தான் மற்றும் தெற்காசியப் பகுதிகளிலும் காணப்படுகிறது.
கம்போடியா நாட்டின் தேசிய மரமாகவும், தமிழ்நாடு மாநில அரசின் மரமாகவும் பனை மரம் உள்ளது.
இம்மரம் வெப்பமண்டல மணற்பாங்கான இடத்தில் செழித்து வளரும். அதே நேரத்தில் அதிக அளவு வறட்சியையும் தாங்கக்கூடியது.
நுங்கில் உள்ள சத்துக்கள்
நுங்கில் விட்டமின் ஏ,சி, பி1(தயாமின்), பி2 (ரிபோஃபோளவின்), பி3(நியாசின்) போன்றவையும், தாதுஉப்புக்கான கால்சியம், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் போன்றவையும், நார்சத்துக்களையும், பைட்டோ-நியூட்ரியன்களையும், அதிக அளவு நீர்சத்தினையும் கொண்டுள்ளது.
நுங்கின் மருத்துவப் பண்புகள்
உடல் சூட்டைத் தணிக்க
நுங்கானது அதிக நீர்சத்தினைக் கொண்டுள்ளதால் கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சூட்டினைத் தடுக்கிறது. எனவே நாம் நுங்கினை உண்டு கோடைகால உடல் சூட்டிலிருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.
நீர்கடுப்பிற்கு
நுங்கில் காணப்படும் நீர்சத்தும், பொட்டாசியமும் நீர்கடுப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. எனவே கோடைகாலத்தில் நீர்பற்றாக்குறையால் ஏற்படும் நீர்கடுப்பிற்கு நுங்கினை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது சரியான தீர்வாகும்.
நல்ல செரிமானத்திற்கு
நுங்கில் உள்ள நீர்சத்தும், நார்சத்தும் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் செரிமானம் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளையும் நுங்கு சரிசெய்கிறது.
வியர்குருவினைப் போக்க
கோடைகாலத்தில் சருமத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சினை வியர்குரு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வியர்குருவினால் கோடையில் பெரும் அவதிக்குள்ளாவர். நுங்குத் தண்ணீரையும், நுங்கின் வழுவழுப்பான சதைப்பகுதியும் வியர்குருவின் மீது தடவி நிவாரணம் பெறலாம். நுங்கினை உணவாக உட்கொண்டும் பலன் பெறலாம்.
அம்மை நோய்க்கு நிவாரணம் பெற
கோடைகாலத்தில் வரும் நோய்களான அம்மைகட்டு, சின்னம்மை, தட்டம்மை உள்ளிட்ட அம்மை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நுங்கினை உட்கொள்வதால் அம்மை நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
உடல் எடை குறைக்க
நுங்கானது அதிகளவு நீர்ச்சத்தையும், குறைந்த அளவு கலோரியையும் கொண்டுள்ளது. நீர்சத்து மிகுந்த இதனை உட்கொள்ளும் போது வயிறு நிறைந்த உணர்வினை ஏற்படுத்துவதோடு குறைந்த அளவு எரிசக்தியினையும் கொடுக்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் நுங்கினை உண்டு பலன் பெறலாம்.
கோடைகால சோர்வினைப் போக்க
கோடைகாலத்தில் அதிக வியர்வையின் காரணமாக நமது உடல் நீர் சத்தினை இழப்பதோடு சோர்வும் அடைகிறது. நுங்கினை உண்ணும்போது அதில் உள்ள நீர்சத்து உடலுக்குத் தேவையான நீரினை வழங்குகிறது. அதே நேரத்தில் நுங்கில் உள்ள பொட்டாசியம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. எனவே நுங்கினை உண்டு கோடைகால சோர்வினைப் போக்கலாம்.
கல்லீரல் நன்கு செயல்பட
நுங்கில் உள்ள பொட்டாசியம் கல்லீரலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. எனவே கல்லீரல் நன்கு செயல்பட நுங்கினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புற்று நோயிலிருந்து பாதுகாப்புப் பெற
நுங்கில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள் மூளை மற்றும் மார்பகம் போன்றவற்றில் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடைசெய்கிறது. நுங்கினை அடிக்கடி உணவில் சேர்த்து புற்று நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
குமட்டலிருந்து பாதுகாப்பு பெற
குமட்டல் ஏற்படும்போது எலுமிச்சையும் பலன் அளிக்காத சமயத்தில் நுங்கு நமக்கு கைமேல் பலன் தரும். நுங்கினை உண்டு குமட்டலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு
கர்ப்பிணி பெண்கள் நுங்கினை உண்பதால் செரிமானம் நன்கு நடைபெறும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பாடா வண்ணம் நுங்கு பாதுகாக்கும்.
ஆற்றலைப் பெற
நுங்கினை உண்ணும்போது குளுக்கோசின் அளவானது அதிகரிக்கப்படுவதோடு உடலுக்குத் தேவையான தாதுப்பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் ஆகியவற்றை வழங்கி உடலானது சமநிலையில் வைக்கப்பட்டு ஆற்றலும் கிடைக்கிறது.
நுங்கினைப் பயன்படுத்தும் முறை
நுங்கினைப் பயன்படுத்தும்போது தோலோடு கடித்து உண்ண வேண்டும். நுங்கினை நறுக்கும்போது அதிலுள்ள நீர் வீணாகி விடும். எனவே அதனை கடித்து உண்பதே சிறந்தது. இளநீருடனும், பதனீருடனும் சேர்த்து நுங்கு உண்ணப்படுகிறது.
நுங்கினைப் பற்றிய எச்சரிக்கை
சதைப்பகுதி கடினமாக உள்ள நுங்கினை அதிக அளவு ஒரே நேரத்தில் உட்கொள்ளும்போது வயிற்று வலியை ஏற்படுத்தி விடும். எனவே மெல்லிய சதைப்பகுதி உடைய நுங்கினை உண்பது நல்லது.
கோடைக்கு ஏற்ற அற்புத உணவான நுங்கினை உண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்