நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி

அருநெல்லி என்றவுடன் எல்லோருக்கும் பொதுவாக வாயில் நீர் ஊறும். வாயில் நீர் ஊறுவதற்கு அருநெல்லிக்காயின் புளிப்பு சுவை நம் நினைவிற்கு வருவதே காரணம் ஆகும்.

பொதுவாக நாம் எல்லோரும் இக்காயினை உப்பும், மிளகாய்பொடியும் வைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். நொறுக்குத் தீனியாகப் பயன்படுத்தப்படும் இக்காய் சத்து நிறைந்ததும் கூட.

அருநெல்லியைப் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.

அருநெல்லி பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்திலும், முற்றத்திலும் வளர்க்கப்படுகிறது. அலங்காரத்திற்காகவும் இதனை வளர்ப்பது உண்டு.

அருநெல்லியானது ஃபிலந்தசியா என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் ஃபில்லந்தஸ் அசிடஸ் என்பதாகும். இவை பொதுவாக சின்ன நெல்லிக்காய், அரிநெல்லிக்காய் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

 

அருநெல்லியின் அமைப்பு மற்றும் வளரியல்பு

அருநெல்லியானது குற்றுச்செடிக்கும், மரத்திற்கும் இடைப்பட்ட குறுமரவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இம்மரமானது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் அதிகளவு காணப்படுகிறது.

இம்மரமானது 10மீ உயரம் வரை வளரக் கூடியது. இம்மரத்தின் தண்டானது கிளைத்து பழுப்புநிறத்தில் எளிதில் உடையும் தன்மையுடன் காணப்படுகிறது.

இம்மரத்தின் இலைகள் தண்டில் இருந்து கிளைத்த ஈர்க்குகளில் கூட்டிலைகளாக நீள்வட்ட வடிவில் இருக்கும். ஒவ்வொரு இலையும் 5-6 செமீ நீளமும், 2-3 செமீ அகலமும் உடையதாக இருக்கும்.

அரிநெல்லிக்காய் கூட்டிலைகள்
அரிநெல்லிக்காய் கூட்டிலைகள்

 

மலர்கள் கொத்தாக இளஞ்சிவப்பு வண்ணத்தில் காணப்படும்.
இம்மர மலர்கள் ஆண், பெண் மற்றும் இருபால் தன்மையுடனும் இருக்கின்றன.

இம்மரத்தில் பூக்கள் இலைகள் இல்லாத முக்கிய கிளைகளில் தோன்றுகின்றன. இப்பூக்களிலிருந்து 1முதல் 1.5 செமீ அளவுடைய பச்சைநிற காய்கள் கொத்தாக தோன்றுகின்றன.

 

அரிநெல்லிக்காய் பூக்கள் மற்றும் காய்கள்
அரிநெல்லிக்காய் பூக்கள் மற்றும் காய்கள்

 

இக்காயின் மையத்தில் 4 முதல் 6 விதைகள் தொகுப்பாகச் சேர்ந்து கல்போன்று காணப்படுகிறது. அருநெல்லிக்காயானது முதிரும்போது வெளிர் மஞ்சள் வண்ணத்தில் நீர்ச்சத்துடன் கூடிய சதைப்பற்று மிகுந்து இருக்கும்.

 

அருநெல்லியின் வரலாறு

அருநெல்லியின் தாயகம் மடகாஸகர் தீவுகளாகும். இங்கிருந்து கிழக்கு இந்தியப் பகுதிகளுக்கு இக்காயானது பரவியது. இங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, வியட்நாம், லாவோஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பரவியது. பின் தென் மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு பரவியது.

தென்இந்தியாவில் அருநெல்லி அதிகளவு காணப்படுகிறது. தென்இந்தியாவில் இக்காய் ஏப்ரல்-மே மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

 

அருநெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

அருநெல்லியில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்) போன்றவை உள்ளன. மேலும் இதில் கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், சாம்பல் சத்து ஆகிய தாதுஉப்புக்கள் காணப்படுகின்றன. இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, கரோடின்கள் ஆகியவை உள்ளன.

 

அருநெல்லியின் மருத்துவப் பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

அருநெல்லியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உணவினை நன்கு செரிக்க உதவுகின்றன. இக்காயில் உள்ள நார்ச்சத்தானது குடலில் உள்ள நச்சுக்கழிவுகளை ஒன்று திரட்டி எளிதாக வெளியேற்றுகிறது. மேலும் இக்காய் மலமிளக்கியாகச் செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கல், மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்கு இக்காய் தீர்வாகிறது.

நோய் எதிர்பாற்றலைப் பெற

இக்காயில் விட்டமின் சி அதிகளவு உள்ளது. விட்டமின் சி-யானது உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கக்கூடியது. இதனால் சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்றுகளிலிருந்து நம்மை இக்காய் பாதுகாக்கிறது.

சரும பாதுகாப்பிற்கு

இக்காயில் உள்ள விட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் சருமத்தினைப் பாதுகாக்கின்றன. விட்டமின் சி அதிகம் கொண்ட உணவினை உட்கொள்ளும்போது சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும், தூய்மையானதாகவும் மாறுகிறது. பருக்கள் மற்றும் உலர் சருமத்திற்கு இக்காய் நல்ல தீர்வாக அமைகிறது.

உடல் எடை குறைப்பிற்கு

அருநெல்லி இலையானது உடல் எடை குறைப்பிற்கு சிறந்த தீர்வாகும். நெல்லி இலையில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், பிளவனாய்டுகள், சபோனின், டானின்கள், பாலிபீனால்கள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

இவ்விலையில் உள்ள சபோனின் சத்தானது குடலானது அதிகமான கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதைத் தடைசெய்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

அனீமியாவை போக்க

இக்காயானது அதிகளவு இரும்புச்சத்தையும், விட்டமின் சி-யையும் கொண்டுள்ளது. இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து பெறப்பட்டு உடலால் உட்கிரக்கிக்கப்படுகிறது. எனவே இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டாகும் அனீமியாவைக் குணப்படுத்த அருநெல்லிகாயை உண்ணலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

அருநெல்லிக்காயில் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகளவு உள்ளன. எனவே இக்காயினை உண்ணும் போது எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு அவை வலுவாகவும் செய்கின்றன. எனவே வலுவான எலும்புகளைப் பெற அருநெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

அருநெல்லிக்காயினை வாங்கி உபயோகிக்கும் முறை

அருநெல்லிகாயினை வாங்கும்போது சீரான மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் புதிதாக உள்ளவற்றைத் தேர்வு செய்யவும். மேல் தோலில் வெட்டுக்காயங்கள், கீறல்கள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். இவற்றை உபயோகிக்கும்போது தண்ணீரில் அலசி துணியால் துடைத்துப் பயன்படுத்தலாம்.

அருநெல்லிக்காயானது இனிப்புகள், ஊறுகாய்கள், ஜாம்கள், கேக்குகள், குளிர்பானங்கள், சாலட்டுகள் உள்ளிட்டவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இவற்றின் மணத்திற்காகவும் சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.