நெல்லிக்காய் சாதம் கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனை எளிதான முறையில் வீட்டில் சுவையாகச் செய்யலாம்.
சிறுவர்களுக்கு மதிய உணவுக்கு நெல்லிக்காய் சாதம் தயார் செய்து கொடுக்கலாம்.
இச்சாதத்தினை உண்ணும்போது லேசான துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு சுவையினை உணரலாம்.
இனி நெல்லிக்காய் சாதம் செய்யும் முறையினை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

அரிசி – 100 கிராம்
பெரிய நெல்லிக்காய் – 10 எண்ணம் (பெரியது)
மிளகாய் வற்றல் – 5 எண்ணம்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 10 எண்ணம் (முழுமையானது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பெரிய நெல்லிக்காயை கழுவி துருவிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை கழுவி உருவிக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகினை சேர்த்து வெடிக்க விடவும்.
பின் அதனுடன் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு, அலசி உருவிய கறிவேப்பிலை சேர்க்கவும்.

பருப்புகள் பொன்னிறம் ஆனதும் அதனுடன் துருவிய நெல்லிக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.

கலவையை ஒரு சேர நன்கு கிளறவும். நெல்லிக்காய் சேர்த்து ஓரிரு நிமிடங்களில் அடுப்பிணை அணைத்து விடவும்.
பின் நெல்லிக்காய் கலவை ஆறிய பின் வடித்து வைத்துள்ள சாதத்துடன் சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.
இவ்வாறாக நெல்லிக்காய் கலவை முழுவதும் செய்யுங்கள். சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

இதனுடன் கொத்தமல்லி துவையல், புதினாத் துவையல் ஆகியவை சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
நெல்லிக்காய் துருவலானது சாதத்தின் அளவிற்கு சமமாக இருக்க நெல்லிக்காய் சாதத்தின் சுவை மிகும்.
விருப்பமுள்ளவர்கள் மஞ்சள் தூள் பயன்படுத்தி இச்சாதத்தினை தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாயைப் பயன்படுத்தி இச்சாதத்தினை தயார் செய்யலாம்.
குக்கரில் சாதம் தயார் செய்பவர்கள் தண்ணீர் அளவினை குறைவாக வைத்து சாதம் தயார் செய்யவும்.
–ஜான்சிராணி வேலாயுதம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!