நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 17

அன்று வியாழக்கிழமை.

அப்பா விதித்த நாலுநாள் கெடு முடிந்து இந்து கல்லூரி சென்றாகி விட்டது. அவள் வீட்டிலிருந்த அந்த நாலு நாட்களும் மற்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.ரத்தினவேலும் சுந்தரியும் மனக்கலக்கத்தை
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

செண்பகத்தாம்மாவுக்கு கதிரேசன் வீட்டில் நடந்த விபரங்கள் சொல்லப்படாததால் அவர் சாதாரணமாகவே இருந்தார்.

ஆனாலும் மகன் இந்துவை நாலுநாள் காலேஜுக்கு அனுப்பாததன் காரணம்
புரியாமல் மண்டைக் குடைச்சலோடு இருந்தார்.

மணி பத்தாகவிருந்தது. செண்பகத்தமா குளிக்கப் போயிருந்த நேரம்.

“என்னங்க” அழைத்தபடி தன்னருகில் வந்து நின்ற மனைவி சுந்தரியை ‘என்ன?’ என்பது போல் பார்த்தார் ரத்தினவேல். கவலை அப்பிக்கிடந்தது சுந்தரியின் முகத்தில்.

“என்ன சுந்தரி?”

“ஏங்க நம்ம இந்து படிச்ச வரைக்கும் போதுங்க. நல்ல பையனா பாத்து சட்டுபுட்டுனு கல்யாணத்த பண்ணிடுவங்க. அந்த குடிகாரப்பய நாகராசு குறிவெச்ச எந்த பொண்ணுக்கும் பாதுகாப்பு இல்லீங்க. எனக்கு ரொம்ப பயமாருக்குங்க.”

“சரியாச் சொன்ன சுந்தரி. பெரிய எடத்து பகை ஒரு நா இல்லாட்டி ஒரு நா பெரிய பிரச்சனையில கொண்டு விட்ரும். அதும் அந்த நாதாரிப்பய நாகராஜு எதுக்கும் அஞ்சமாட்டான். அமைதியா இருக்காப்ல போக்கு காட்டிட்டு ஆட்டங் காட்டிடுவான். நீ சொன்னாப்பலதா நானும் நெனைக்கிறேன். நல்ல எடமா பாத்து நம்ம மவள சீக்கிரமே கட்டிக் குடுத்துடலாமுன்னு தோணுது. கல்யாண தரகர் வீராசாமிட்ட இந்துக்கு ஏத்த படிச்ச பையனா நல்ல வரனா இருக்கானு கேட்டுகிட்டு வரேன்.”

“என்ன வரனு கல்யாணமுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க? யாருக்கு கல்யாணம்?” குளித்து முடித்து விட்டுக் கட்டிய புடவையைச் சரி செய்து கொண்டே வந்தார் செண்பகத்தம்மா.

“எல்லாம் உன் பேத்திக்குதான். வயசு இருவத்தொன்னாயிட்டு. காலகாலத்துல கட்டிக் குடுத்துட்டோம்னா ஒரு கவல தீந்துடும்ல”

“அப்டி சொல்லு அப்டி சொல்லு. நா சொல்லும் போதெல்லாம் எவ்வாய அடைப்பீங்க. இப்ப ஒங்குளுக்கே தோணுதில்ல. போவட்டும் இப்பவாச்சும் தோணிச்சே. சந்தோஷம். இன்னிக்கு நாளு நல்லாருக்கு. வெள்ளிக் கெழம பத்தரலேந்து பன்னண்டு ராகு காலம். இப்பமணி பத்தே கால்தா ஆவுது. ராகு காலத்துக்குள்ளாற கெளம்பு. நம்ம குலசாமி கருப்புசாமிய வேண்டிக்கிட்டு கெளம்பு.” சந்தோஷம் பீறிட மகனிடம் சொன்னார் செண்பகத்தம்மா.

“சரிம்மா”என்று ரத்தினவேல் சொல்லி முடிப்பதற்குள் வாசல் கதவு தட்டப்படும் சப்தம்.

“யாரது?” என்று கேட்டபடியே கதவைத் திறந்தார் ரத்தினவேல்.

இரு கைகளையும் கூப்பியபடி வெகு பவ்யமாய் நின்றிருந்தான் தனசேகரன். தோளிலிருந்து கனமான பையொன்று தொங்கிக் கொண்டிருந்தது.

“யாரு? யார் நீங்க?

யார் வேணும் உங்களுக்கு?”

“வணக்கம்! நா தனசேகரன். நெய்வேலிலேந்து வர்றேன். இது செண்பகத்தம்மா வீடு தாங்களே?”

“ஆமா”

“உள்ளே வரலாங்களா?”

“ம்.. வாங்க” அழைத்தபடி உள்ளே நுழைந்த ரத்தினவேல். “அம்மா ஒன்னத் தேடி யாரோ வந்திருக்காரு பாரு” என்றார்.

“என்னத் தேடி யாரு வரப் போறா?”

ஆச்சரியத்தோடு வாசலைப் பார்த்தார் செண்பகத்தமா. செல்வச் சீமான்போல் ‘டிப்டாப்’பாய் இருந்த தனசேகரனை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

கொஞ்சம் நிதானமாய் உள்ளே வந்தான் தனசேகரன்.

வயதான பெண்மணிதான் செண்பகத்தம்மாவாய் இருக்குமெனத் தீர்மானித்து தோளில் தொங்கும் பையைத் தரையில் வைத்து விட்டு “அத்தை” என்று கொஞ்சமாய்க் குரலை உயர்த்திக் கத்திக் கொண்டே அப்படியே நெடுஞ்சாங் கட்டையாய் செண்பகத்தம்மாவின் காலில் விழுந்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத செண்பகத்தம்மா “என்ன.. என்னது இது? யாரு..யாரு..யாருப்பா நீங்க?” என்றபடியே கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து கொண்டார்.

“அத்தை! நீங்க என்னை யாருன்னு கேக்குறது ஞாயந்தான்! நீங்களும் என்னப் பாத்ததில்ல நானும் ஒங்கள பாத்ததில்ல”

“மொதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க”

“அத்த ஒங்க சித்தப்பா கணேசனோட மகன் சண்முகத்த ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

பளீரிட்டது செண்பகத்தம்மாவின் முகம்.

“அட! ஆமாம். கணேச சித்தப்பா மகன் சண்முகம் என் ஒன்னுவிட்ட தம்பியாச்சே. பாத்து பலவருஷம் ஆச்சு. சண்முகத்துக்கு நீங்க என்ன வேணும்?”

“ஒங்க தம்பி சண்முகத்தோட மவன் நான். தனசேகரன் எம்பேரு”

“அடடே! சம்முவத்தோட மவனா நீங்க?”

“அத்த மொதல்ல என்னை நீங்க போங்கன்னுலாம் கூப்புடாதிங்க. நீங்க என்னோட அத்தை. நான் ஒங்க மருமானு”

பவ்யமாய் செண்பகத்தம்மாவைக் கையெடுத்துக் கும்பிட்டான்.

குளிர்ந்து போனார் செண்பகத்தமா.

“ஒங்கப்பா சம்முவத்த சின்னப் புள்ளேல பாத்தது. தம்பி சம்முவம், ஒங்கம்மா எல்லோரும் சௌக்கியமா? இப்ப எந்த ஊர்ல இருக்குறீங்க? சம்முவத்தப் பாத்து எத்தினி வருஷமாச்சு”

“ஒறவே விட்டுப் போயிட்டு. நா இந்த ஊர்ல இருக்குறது எப்பிடித் தெரியும்?” வந்தவனை நிஜமென நம்பி அடுக்கடுக்காய்க் கேள்வி கேட்டார் செண்பகத்தாம்மா.

வேண்டுமென்றே கண்ணீரை வலுக்கட்டாயமாய்க் கண்களில் கொண்டு வந்து தேக்கிக் கொண்டான் தனசேகரன்.

“அத்த என்ன பெத்த தாய் நா மூணு வயசா இருந்தப்பவே போய்ச் சேந்துட்டா. ரெண்டாந்தாரங்கூட கட்டிக்காம என்னோட அப்பா அதான் ஒங்க தம்பி என்ன கஷ்டப்பட்டு வளத்து படிக்க வெச்சு ஆளாக்கினாரு.

நானும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துல அந்தஸ்தான வேல பாக்குறேன். கை நெறைய சம்பளம், வீடு, காருன்னு வசதிக்கு கொறைவில்ல. எனக்கொரு கல்யாணத்தப் பண்ணிப்பாக்கனுமின்னு ஆசப்பட்ட அப்பா அதான் ஒங்கதம்பி ரெண்டு மாசம் முன்ன காலமாயிட்டாரு.

நா பெத்தவங்க ஒத்தவங்க யாருமில்லா அனாதயாயிட்டேன். இத்தன துன்பத்துலயும் வேதனையிலும் என் நல்ல காலமோ ஆண்டவன் எம் மேல பாவப்பட்டாறோ தெரியல! சாகுறத்துக்கு பத்து நாளு முன்னாடி அப்பா அதான் ஒங்க தம்பி,

‘டேய், தனசேகரு சரவூர்ல செண்பகம்முனு ஒனக்கு ஒரு அத்த இருக்குறாங்க. அவுங்க மவன் அந்த ஊரு கணக்குப்புள்ளயா இருக்காரு. ஒறவு போவாம போச்சி. வார்த்த பேசாம போச்சின்னு சொல்லுவாங்க. போய் வந்துக்கிட்டு இல்லாம இருந்ததால எந்த ஒறவும் நம்மளோட ஒட்டல. எனக்கப்புறம் நீயாச்சும் என்னோட செண்பகம் அக்காவ போய் பாரு. இந்த ஒறவாச்சும் ஒனக்குக் கெடைக்கட்டும்னாரு’ சொல்லி பத்து நாளுக்கெல்லாம் காலமாயிட்டாரு” கரகரத்த குரலில் சொல்லி வலுக்கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் தனசேகரன்.

அவன் வடித்த முதலைக் கண்ணீர் நன்றாகவே வேலை செய்தது.

‘ஒருவனுக்கு நேரம் சரியாய் இருந்தால் அவன் நினைப்பதெல்லாம் நிறைவேறும். அதுவே நேரம் சரியில்லையென்றால் கழுதை கூட ஏமாற்றுமோ?’ தனசேகரின் நேரம் சரியாய் இருந்தது போலும்.

“மாமா” என்று ரத்தினவேலின் காலில் விழுந்தான்.

“அத்த மாமி” என்று சொல்லி சுந்தரி காலில் விழுந்தான்.

பைக்குள்ளிருந்து டஜன் கணக்கில் விதவிதமான பழங்களையும் பாஃரின் சாக்லேட்டுக்களையும் எடுத்து வைத்தான்.

மிக எச்சரிக்கையோடு புத்திசாலித்தனமான பேச்சுக்களைப் பேசினான்.ரொம்பவும் தன்னடக்கமாக நடந்து கொண்டான்.

மொத்தத்தில் நாகராஜு சொல்லிக் கொடுத்த வசனங்களை அதற்கேற்ற பாவனைகளோடு பேசி அதற்கேற்ப நடித்தான்.

கூடாரத்துக்குள் ஒட்டகம் இடம் கேட்டது போல், முதல் முயற்சியில் ரத்தினவேல் குடும்பத்தில் கொஞ்சமாய்த் தன்னை நுழைத்துக் கொண்டான்.

மகளுக்கு வரன் தேட தரகர் வீராசாமியைப் பார்க்கக் கிளம்பிய முயற்சியை ரத்தினவேல் இன்னொரு நாள் போகலாமென்று தள்ளி வைத்தார்.

மதியம் தனசேகருக்காக விருந்துக்கான ஏற்பாடு செய்ய முடிவானது.

மரச்சேர் ஒன்றில் அடக்க ஒடுக்கமாய் அமர்ந்தபடி, ரத்தினவேலிடம் புளுகு மூட்டையை வெகு ஜாக்கிரதையாய் அவிழ்த்துக் கொட்டி நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

மதியம் விருந்தை பாராட்டியபடி மிக நாசூக்காய் சாப்பிட்டான்.

சிகரெட்டுக்காக உதடுகளும் சரக்குக்காக வாயும் மனமும் ஏங்கி நமநமத்தன. பெரும் பிரயத்தனப்பட்டு அவற்றை அடக்கிக் கொண்டான்.

“எம் பேத்தி காலேசுக்குப் போயிருக்கு. இன்னிக்கு என்னமோ க்ளாஸ் இருக்கு லேட்டா வருவேன்னு சொல்லிட்டுப் போச்சு. எப்ப வருதோ?” என்று தானாகவே வாயைத் திறந்தார் செண்பகத்தம்மா.

“ஓ!” என்றான் அசிரதையாக.

என்னவோ காலேஜு படிக்கும் பெண் என்றால் ஆர்வத்துடன் பறந்தடித்துக் கொண்டு கேட்பவன் என்று நினைத்துவிடக் கூடாதென்று.

ஆனால் மனது ‘அதுக்குதானே வந்ருக்கேன். பொண்ணு லட்டுமாரில்ல இருக்கும்னு நாகராஜு சொன்னாரு. தூணுக்குப் பொடவ கட்டினாலே ஆசையா பாக்குறவன் நான். லட்டு மாதிரியான பொண்ண பாக்காம போவேனா.

அந்த பொண்ணு அப்ஸரசுன்னும் தேவதையுன்னும்னா சொன்னாரு நாகராஜு, பாக்கனும் பாக்கனும்னு நெஞ்சு அடிச்சிக்கிது. வரட்டம், வரட்டம் காலேஜுலேந்து வரட்டம். பாக்காம போவேனா?

எவ்வேலையே அந்தப் பொண்ண என் வலேல வீழ்த்தரது தானே. அந்தப் பொண்ண என் வலேல வீழ்த்தி இந்த ரத்தினவேலு குடும்பத்த சின்னா பின்னமா ஆக்க தானே நாகராஜு என்னைய கூப்டாந்துருக்காரு.

இந்தினி வசதிய எனக்கு செஞ்சுகுடுத் திருக்காரு. கேக்காமலேயே சீமசரக்க பாட்டில் பாட்டிலா கொணாந்து அடுக்குறாரு. அது ஒன்னுக்காகவே அவுரு சொல்றதெல்லாம் செய்யலாமுல்ல.’ காத்திருந்தான் இந்துவின் வரவுக்காக.

வாசலில் செருப்பு சத்தம் கேட்டது.

“இந்து வந்துட்டா” செம்பகத்தம்மா பரபரத்தார்.

நாற்காலியில் ஒண்டி ஒடுங்கி அடக்க ஒடுக்கமாய் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தான் தனசேகரன்.

உள்ளே நுழைந்தாள் இந்து.

“இந்தூ! இவரு என்னோட ஒன்னுவிட்ட தம்பி சம்முகத்தோட மவன் தனசேகரு”

சேரில் அமர்ந்திருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள் இந்து. அவள் திரும்பிப் பார்த்த வினாடி நேரத்திற்குள் தனசேகரின் செயற்கையான மனக்கட்டுப்பாடு தகர்ந்து இந்துவைப் பார்த்து மனது ‘உய்’யென்று விசிலடித்தது.

‘ஹைய்ய்ய்ய்யோ! இப்பிடி ஒரு அழகா!’ என்றது.

‘நாகராஜு சொன்னாப்ல அடேங்கப்பா இந்தப் பொண்ணுதா எத்தன அழகு. கொள்ள அழகுல்ல’ என்றது.

பார்வை கட்டுப்பாடின்றி இந்துவின் அழகு மேனியெங்கும் பரவிப் படர்ந்தது.

திரும்பி தனசேகரைப் பார்த்த இந்துவுக்கு பார்த்த மாத்திரத்தில் அவனைப் பிடிக்காமல் போனது. ‘அவன் பொய்யானவன்’ என்று மனது சொன்னது.

தன் உடலெங்கும் பரவித் திரியும் அவன் பார்வை கம்பளிப்பூச்சி ஊறுவதைப் போல் இருந்தது. ‘த்தூ’ எனக் காறித் துப்பத் தோன்றியது.

“ஹி!” தனசேகரின் வாய் தானாக இளித்தது.

ஏற்கெனவே நான்கு நாட்களாய் கல்லூரிக்குப் போகாமல் ராகவ்வை சந்திக்காமல், இன்று கல்லூரிக்குப் போயும் வழக்கமாய் அவனை சந்திக்கும் இடத்தில் காத்திருந்தும் அவன் வராததால் ஏமாற்றமும் கவலையுமாய் இருப்பவளுக்கு தனசேகரின் இளிப்பும் பார்வையும் கடும் கோவத்தையும் எரிச்சலையும் கொடுக்க அவனிடமிருந்து சட்டெனப் பார்வையை அகற்றி தனது அறைக்குள் நுழைந்து ‘படீரெ’ன்று கதவை அறைந்து சாத்தினாள் இந்து.

முகத்தில் அடித்தாற்போல் உணர்ந்தான் தனசேகரன்.

‘ஏய்’ உறுமியது மனது.

‘தான் அழகுங்கிற திமிருடி ஒனக்கு. ஒனக்காகத் தானே இந்த வீட்டுக்குள்ள நொழஞ்சிருக்கேன். ஒன்னவிட்ருவேனா. மொகத்துல அடிக்கிறாப்புல கதவ படீர்னு சாத்துற. அத்தன அலட்சியமா. ஏய், நாந்தாண்டி ஒனக்கு எமன். விடமாட்டேண்டி ஒன்ன’ கறுவியது மனது.

ஆனாலும் முகத்தில் எந்த பிரதிபலிப்பையும் காட்டாது மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றான் தனசேகரன்.

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பது போல் சனியோ விதியோ எதுவோ நுழைந்து விட்ட வீடு, இனி என்ன பாடுபடப் போகிறதோ? யாரறிவார்?

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.