காட்டிலுள்ள பறவைகளுக்கு போட்டி ஒன்று நடந்தது
காகம் மைனா குயிலும் அதில் கலந்து கொள்ள வந்தது
நாட்டில் நடக்கும் போட்டி போல நடத்த அவை நினைத்தன
நடுவராக கழுகாரை நடுவில் இருக்க செய்தன
போட்டியதன் விதிமுறையைப் பருந்து வந்து சொன்னது
காட்டின் நடுவில் நின்றிருக்கும் கருத்த பனை மரத்திலே
பூத்திருக்கும் பூங்குருத்தில் புதுக்குழல் செய்ய வேண்டும் என்றது
ஆட்டம் ஆடி மயிலும் அங்கு அது சரிதான் என்றது
கூட்டைக்கட்டி பழக்கமுள்ள காகம் விரைந்து சென்றது
பாட்டிசைக்க பனையோலை விசில் செய்வேன் என்றது
வாட்டமுடன் மைனாவோ நான் என் செய்வேன் என்றது
விலகிடவே விருப்பம் என்று அமைதியாக நின்றது
குட்டை வாலு குயிலுமங்கு குசும்பு ஒன்று செய்தது
சிட்டுக்குருவி ஒன்றை மிரட்டி விசில் செய்துதா என்றது
வட்டமிட்டு வந்த கழுகு நடுவர் அதனைக் கண்டது
குட்டு ஒன்றை குயிலின் தலையில் கொட்டி விட்டு சென்றது
போட்டியிலே விலகினாலும் மைனாவினை அது புகழ்ந்தது
திட்டமிட்டு தவறு செய்த குயிலின் செயலை வெறுத்தது
எப்படியும் வெல்ல நினைத்து குறுக்கு வழிசெல்வது
வீரமல்ல கோழைத்தனம் என்று கழுகு சொன்னது
காட்டுக்குள்ளே நடந்த கதை நமக்கு நல்ல பாடமாம்
ஈட்டுகின்ற வெற்றியெல்லாம் நேர் வழியில் வேண்டுமாம்!
பாட்டன் பாட்டி நம் முன்னோர்கள் நடந்த நேர்பாதையில்
நாட்டமுடன் நாமும் நடக்க நேர்மை உண்மை வளருமாம்!
கைபேசி: 9865802942