தற்செயலால் தனதுழைப்பால் மாந்தன் தன்னைத்
தகவமைத்துக் கொண்டானோ என்னும் வண்ணம்
சொற்செயலும் சுகமாக வாழும் போக்கும்
சுரண்டுவதே உற்பத்தி என்னும் நோக்கும்
கற்பதெலாம் சமூகத்தின் கடவுச் சீட்டாய்க்
கைக்கொண்டான் தன்னிலையை மறந்தே போனான்
கற்கண்டாய் இனிக்கின்ற வாழ்வைக் கொன்றான்
கலையற்ற பொறியானான் கவலை கொண்டான்
தொழிற்றொடங்கித் தொகைதொகையாய்ப் பொருளைச் செய்யத்
தொல்லுலகின் கருவூலம் குடைந்தெ டுத்தான்
வழித்தொடங்கி வளமாக இன்றைப் போல
வரலாற்றில் வாழ்ந்ததில்லை எனவு ரைத்தான்
பொழிப்புரைகள் தேவையற்ற வாழ்வி னூடே
பொய்புரட்டுப் போதையெனக் கலகம் செய்தான்
அழிவதிவன் என்றுணரும் அறிவின் நீங்கி
அலமலங்கும் பேதையென உழலு கின்றான்
நோக்குகின்ற திசையெல்லாம் மனிதம் தாழ்ந்து
நோநொந்து நொய்மையுற்று நொடிந்தி ருக்க
ஆக்கமெலாம் ஒருசிலரின் வயிற்றுக் குள்ளே
அடங்குவதா நாகரிக வளர்ச்சி என்பீர்?
பூக்களெல்லாம் தண்ணறவை மறைப்ப தில்லை
புகழ்வாய்ந்த மாந்தரினம் பகிர்ந்து கொண்டால்
ஊக்கமிகும் உலகிலுள்ள உயர்வும் தாழ்வும்
ஓட்டமிடும் ஒளிமிகுத்தே உண்மை வாழும்
சந்தைவிலை அடிப்படையில் மனிதம் பார்க்கும்
சழக்குநிலை அழிந்தொழிந்து போக வேண்டும்
மந்தநிலை பொருளியலில் வந்த போதும்
மனிதவளம் துருப்பிடிக்கா திருத்தல் வேண்டும்
விந்தையினும் விந்தையென வாழும் ஏழை
விடுதலையைப் பெறல்வேண்டும் விடியல் வேண்டும்
முந்தைநிலை அடிமையெனும் தொழுநோய் நீக்க
முன்வரிசை மாந்தரெலாம் திரளல் வேண்டும்
பொருளென்னும் பெருமதத்தில் பித்தாய் ஆகிப்
பெயரனுக்கும் பெயரனுக்கு முத்தி கேட்பார்
இருளென்னும் கருந்துளையில் இறக்கப் போகும்
இவ்வுலகக் குமிழ்நிலையை அறியார் ஆனார்
அருளென்னும் நெறிவழிதான் உலகம் உய்யும்
அதன்வழியில் செல்வதற்குத் தயக்கம் வேண்டா
மருளென்னும் மனநிலையைக் கடந்து வந்தால்
மாற்றென்னும் புதுயுகத்தில் நுழைய லாமே!
பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!