பசி - சிறுகதை

பசி – ‍சிறுகதை

“எலே நாராயணா, நேத்து ஆட்ட மேய்ச்சலுக்கு எங்கல ஓட்டிட்டு போயிருந்த?” என்று கேட்டவாறு புஞ்சை பயிர்களுக்கு நடுவே வரப்பில் நடந்து வந்து நின்றார் சுப்பராயலு பண்ணையார்.

மேய்ச்சல் காடும் வயல் காடும் சேரும் இடத்தில் நின்று கொண்டு, பயிர்க‌ளுக்குள் ஆடுகளை வரவிடாமல் தடுத்தவாறு நின்று கொண்டிருந்த நாராயணன் சத்தம் கேட்டு, தோளில் கிடந்த துண்டை அவசர அவசரமாக எடுத்து கையில் வைத்துக்கொண்டு வணங்கியவாறு,

“சாமி, நேத்து கீழ காட்டுக்கு ஓட்டிட்டு போயிருந்தேனுங்க.”

“பொய் சொல்லாதல.”

“நெசமாதான், சொல்றேன் சாமி.”

“எலே, எல்லா விஷயமும் என் காதுக்கு வந்துருச்சு. திரும்ப திரும்ப பொய் பேசிட்டு இருந்தேன்னு வையி, செவுல அடிச்சி பேத்துப் புடுவேன்.”

“சாமி, ஊருக்கே படி அளக்குற கடவுளே. நான் போயி, உங்க பயித்துல ஆட்டவிட்டு மேய்ப்பேனா? எவனோ, என்னை ஆகாத பய சொன்னத கேட்டுகிட்டு என்னை மிரட்டுறீங்களே சாமி.”

“எனக்குன்னு சுய புத்தியில்லையால? சொல்லுவார் பேச்சயெல்லாம் கேட்கறதுக்கு.”

“சாமிக்கு என் பேச்சிலே நம்பிக்கையில்லைன்னா, ஒரு விஷயம் சொல்றேன். சாமி கோவிச்சிக்கபிடாது. நேத்து, கீழ காட்டுல நம்ம பாப்பையன் குளம் சுரைக்காய் கோனார் ஆட்டோடதான் என் ஆடுகளும் மேய்ஞ்சது. அவர ஒரு எட்டு ஆளவிட்டு விசாரிச்சீங்கன்னா, நான் சொல்றது உண்மைன்னு பட்டுரும்.”

“எலே, கிறுக்கு பயல. சொல்றத கேளுடா. அறுவடை முடிந்ததும் ரெண்டாம் பருவத்துக்கு குளத்துல கெடக்குற தண்ணீ பத்தாது. வயல சும்மா போட்டா கருவ முள்ளும் நீர் முள்ளும் முளைச்சி போகும்ன்னு உளுந்த விதைச்சி போட்டுருந்தேன்ல. நல்ல பூத்து காய் பிடிக்கற பருவத்துல இருந்தது. நேத்து எவனோ ஆட்டவிட்டு மேய்ச்சிட்டு போயிட்டாம்ல. உனக்கு தெரிஞ்சா சொல்லுவேன்னுதான் உன் மேல பழிய தூக்கி போடுற மாதிரி சும்மா போட்டு பார்த்தேன்ல.”

“ஒரு நிமிஷத்துல கொல‌ நடுங்க வச்சிட்டிங்களே சாமி.”

“சும்மா பயந்தமாதிரி நடிக்காதல.”

“…..”

“ஆமா, உன்ன பத்தி ஆள விட்டு விசாரிக்க சொல்ற. நீ அவ்வளவு பெரிய ஆளால. நான் நினைச்சேன்னா, உன் செவுலுலயே நாலு போட்டு உண்மைய வர வைக்க முடியாதால.”

“சாமி, ஊருல நாற்பது குடும்பம் என் சாதிக்கார பயலுக இருக்கானுக. அதுல, நான் மட்டும் ஆடு வளர்க்கறது எல்லா பயலுக கண்ணையும் உறுத்ததான் செய்யுது.  ஊர்ல இரு நூறு குடும்பத்துக்கு மேல இருக்கற இடையனுங்க அத்தனை பேரும் செம்மறி ஆடு வளர்க்கறப்ப, நான் மட்டும் வெள்ளாடு வளர்க்கறது அவங்க கண்ணையும் உறுத்ததான் செய்யுது. ஊரே உங்க ஊரு. நீங்க போட்டும் வாங்கலாம் செவுலயும் போடலாம்.”

“நீ ஆடு வளர்கிறது என் கண்ணையும் உறுத்துன்னு சொல்றயால?”

“என் நெஞ்சு குழியில அப்படி ஒரு நினைப்பு வந்தா நான் விளங்காம போயிடுவேன். சாமி என் பாட்டனும் பூட்டனும் காடு கரை வாங்கி வைக்கல. என் தாத்தனும் அய்யனும் கூட தம்மா துண்டு இடம் வாங்கி வைக்கல. காலம் காலமாக உங்க காடு கரைய நம்பிதான், இந்த ஆடுகள மேச்சி தான் நானும் என் குடும்பமும் வயித்த கழுவிட்டு இருக்கறோம். நாங்க மட்டுமா ஊரு மொத்தமும் உங்க காடு கரைய நம்பி தான் பொழப்பு நடத்திட்டு கெடக்குது. அப்படி சொல்லுவேனா?”

“எலே, நீ என்னமோ இதுவரை எவன் பயித்துலயும் ஆட்டை விட்டது இல்லைங்கறது போல நல்லவன் மாதிரி பேசுற? மயிரு. தள்ளி ஓட்டிட்டு போலே.”

“போயிடுறேன் சாமி, போயிடுறேன். கோவிச்சிக்காதீங்க சாமி. போயிடுறேன்.” என்று அங்கிருந்து ஆட்டை ஓட்டிக்கொண்டு குளத்துக்குள் சென்றான்.

குளத்துக்குள் தண்ணீர் வற்றிய இடங்களில் கோரை புற்கள் வளர்ந்து செழித்து இருந்தது. குளத்தில் தண்ணீரை பருகிய ஆடுகள் அந்த புற்களை மேய்ந்தன.

அந்த சமயத்தில் அங்கே ஆனைக்கால் கோனார் தனது ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார்.

மத்தியானம் மணி ரெண்டை கடந்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக, நாராயணன் காலையில் சாப்பிடவில்லை.

நாராயணன் உடன் பிறந்தது நாலு ஆண்களும் மூன்று பெண்களும். நாராயணன் மூன்றாவது.

மூத்தவன் ரெண்டு பேரும் திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் போயிட்டானுங்க. மூணு பொண்ணுங்கள கட்டி குடுக்க வேண்டிய பொறுப்பு நாராயணனின் தலையில விழுந்தது.

அப்பா பொறுப்பற்ற குடிகாரன். பெரிய குடும்பம். அதனால, காலை உணவை பற்றி நினைத்துகூட முடியாது.

பழைய கஞ்சி தண்ணீ, முந்தைய நாள் கஞ்சி காய்ச்சின பானையில கெடந்தா குடிப்பான். இல்லையென்றாலும், அது பற்றி கவலைப்படாமல் ஆட்டை ஓட்டிக்கொண்டு சென்று விடுவான்.

அன்று நாராயணனின் அம்மா “மத்தியானத்துக்கு மீன் குழம்பு ஆக்கி வைக்கிறேன். ஆடுகளை யாரையாவது பார்க்க சொல்லிவிட்டுட்டு ஒரு எட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு போ” என்று சொல்லியிருந்தாள்.

பசி வயிற்றை கிள்ள, ஆனைக்கால் கோனாரை பார்த்ததும் நாராயணன் தனது ஆடுகளை அவரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு சாப்பிடுவதற்கு சென்றான்.

வீட்டில் நாராயணனின் அம்மா அவனிடம் சொன்னது போல நல்ல திருக்கை மீன் வாங்கி சமைத்து  வைத்திருந்தாள்.

சமையலை ஆக்கி முடித்தவள் ஆடுகளுக்கு இரவு தீவனம் போடுவதற்காக புல் அறுப்பதற்காக அவசரத்தில் வீட்டை பூட்ட மறந்து சென்று விட்டாள்.

மீன் குழம்பு வாசனை தெருவெங்கும் வீச, அது தெருவில் தூங்கிக்கொண்டிருந்த நாயின் தூக்கத்தை கெடுத்தது.

வீட்டிற்கு சென்றால் மீன் குழம்பு கிடைக்கா விட்டாலும் சாப்பிட்டு போட்ட மீன் முள்ளாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த நாய்க்கு, அது எதிர்பார்த்து வந்ததுக்கும் மேல ஆள் இல்லாமல் வீடு திறந்து கிடக்க, வீட்டுக்குள் புகுந்து தயவு தாட்சண்யம் இன்றி மொத்த குழம்பையும் தின்று தீர்த்து விட்டது.

பயங்கர பசி வருத்தியதால் வீட்டிற்கு வந்த நாராயணன் சமையலறைக்கு சென்று பார்த்தான்.

சோற்று பானையும் குழம்பு சட்டியும் கீழே கவுந்து கிடந்தது.

பார்த்தவனுக்கு கோபம் ‘சுர்’ என்று தலைக்கு ஏறியது.

அதே கோபத்தில் கையில் ஆடுகளுக்கு இலை, தளை வெட்டி போடுவதற்காக கையில் வைத்திருந்த பாளை அரிவாளோடு வீட்டிலிருந்து தெருவிற்குள் வந்தான்.

தெருவில் சோற்றை தின்ற நாய் வயிறு புடைத்த நிலையில் ஆழ்ந்த‌ தூக்கத்தில் இருந்தது.

நாயை பார்த்ததும் பூமியில் பாதம் படாதவாறு மெல்ல அடி எடுத்து வைத்து நாயின் அருகில் வந்தவன், பாளை அரிவாளால் நாயின் கழுத்தில் ஒரு போடு போட்டான்.

நாயின் கழுத்து துண்டாகி, உடலும் தலையும் தரையில் தனி தனியே கிடந்து துடித்தது. அதோடு நில்லாமல் உடலை துண்டு துண்டாக முட்டைக்கோஸ் நறுக்குவதை போல நறுக்கினான்.

துண்டு துண்டாக கிடந்த கறியை அள்ளி கொண்டு சென்று ஊருக்கு நடுவே இருந்த பாழடைந்த பழைய குடிதண்ணீர் கிணற்றில் போட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி சென்றான்.

நிறைகுடத்திலிருந்து தண்ணீரை சொம்பில் மொண்டு ‘கட கட’வென்று மொத்தத்தையும் குடித்துவிட்டு பசி உடன் கோபத்தையும் தற்காலிகமாக தணித்து விட்டு மீண்டும் ஆடு மேய்க்க கிளம்பி சென்றான்.

ரக்சன் கிருத்திக்
8122404791