பனங்கற்கண்டு பால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால் ஆகும்.
ஜலதோசம், சளி தொந்தரவு உள்ள நாட்களில் இதனை தயார் செய்து அருந்தி நிவாரணம் பெறலாம்.
இப்பாலின் மணம் புத்துணர்ச்சியை தருவதுடன் இதனை உடனே சுவைக்க தூண்டும்.
லேசான கார்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய இப்பாலினை அருந்துவதற்கு தொடர்ந்து கீழே படியுங்கள்.
இனி எளிய முறையில் சுவையான பனகற்கண்டு பால் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – 1 டம்ளர்
தண்ணீர் – 1/4 டம்ளர்
பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகுப் பொடி – 1/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாலுடன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாலினை வைத்து பொங்கும் வரைக் காய்ச்சவும்.
பால் நுரைத்துப் பொங்கியதும் அடுப்பினை சிம்மில் வைத்து அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும்.
அதனுடன் 2 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் 1/4 ஸ்பூன் மிளகுப் பொடி சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பனங்கற்கண்டு முழுவதும் கரைந்ததும் பாலை இறக்கி விடவும்.
சுவையான பனங்கற்கண்டு பால் தயார். பாலினை ஆற்றி சூடாகப் பறிமாறவும்.
மற்றொரு முறையில் பாலினைக் காய்ச்சி அதனுடன் பனங்கற்கண்டு, மிளகுப் பொடி, ஏலக்காய் தூள் சேர்த்து தயார் செய்யலாம்.
குறிப்பு
இனிப்பு சுவைக்கு ஏற்ப பனங்கற்கண்டின் அளவினைக் கூட்டிக் கொள்ளலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!