பன்றிக் காய்ச்சல் என்ற ஆட்கொல்லி நோய் இன்றைக்கு நம்மை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
பன்றிக் காய்ச்சல் மழைக் காலத்தில் உண்டாகும் உயிர்க்கொல்லி நோயாகும். இது ஹெச்1என்1 இன்ஃப்ளுயென்சா என்ற வைரஸால் உண்டாகிறது.
இந்நோய் ஆரம்ப காலத்தில் நோயால் பாதிப்படைந்த பன்றியிடமிருந்து மனிதனுக்கு பரவியது. அதனால் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் தற்போது நோய் பாதிப்படைந்த மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.
இந்நோயானது மழை மற்றும் குளிர்காலங்களில் மனிதர்களை அதிகளவு தாக்குகிறது.
காரணம் குளிர்காலத்தில் இந்நோய்க்கு காரணமான வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்து வீரியத்துடன் செயல்படுவதே ஆகும்.
இந்நோயின் அறிகுறிகள் சாதாரண சளிக்காய்ச்சல் போன்றே இருக்கும். இந்நோய் தொற்று நோய் வகையைச் சார்ந்தது.
2009 ஆம் ஆண்டு இந்நோயானது உலகில் வேகமாகப் பரவி அதிக உயிர்களைப் பலிகொண்டதால் உலக சுகாதார நிறுவனம் அப்போது இதனைக் கொள்ளை நோய் என்று அறிவிப்பு செய்தது.
பன்றிக் காய்ச்சல் பரவும் முறை
பன்றிக்காய்ச்சலால் பாதிப்படைந்தவர் தும்மும் போதும், இருமும் போதும் கிருமிகள் திரவ வடிவில் (எச்சில், சளி) வெளியேறுகின்றன.
இக்கிருமிகள் படிந்துள்ள இடங்களை நாம் தொடும்போது அவை நம் கைகளில் ஒட்டிக் கொள்கின்றன.
நோய்க்கிருமிகள் ஒட்டியுள்ள கைகளால் நம்முடைய வாய், மூக்கு, கண்களைத் தொடும்போது நம் உடலினை நோய்க்கிருமிகள் அடைந்து நம்மிடம் நோயினைத் தோற்றுவிக்கின்றன.
பொதுவாக இக்கிருமிகள் உடலைவிட்டு வெளியேறிய பின்பும் சிலமணி நேரம் உயிருடன் இருக்கும். குளிர்ந்த இடங்களில் இக்கிருமியானது இரண்டு நாட்கள் உயிருடன் இருக்கும்.
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் சாதாரண ப்ளு காய்ச்சலைப் போன்றே இருக்கும். அதாவது காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், உடல் வலி, தலைவலி உள்ளிட்டவை இருக்கும்.
பன்றி காய்ச்சல் ஏற்படும்போது முதல் நிலையில் மிதமான காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும்.
இரண்டாம் நிலையில் மேற்கூறிய அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் தொடர்ந்து இருக்கும்.
மூன்றாவது நிலையில் மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி, சளியில் இரத்தம், நகங்கள் நீலநிறத்திற்கு மாறுதல், சாப்பிட முடியாமல் போதல், மயக்கம் உள்ளிடவைகள் ஏற்படும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகள் அபாயகரமானவை. எனவே இந்நோயினை முதல் நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள்
இந்நோய் வாராமல் தடுக்க நாம் வெளியிடங்களுக்கு சென்று வந்த பின்னர் நம்முடைய கைகளை நன்கு சோப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கைகளைக் கழுவும்போது முழங்கையிலிருந்து சோப்புப் போட்டு விரல் இடுக்குகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை கழுவுதல் சிறந்தது.
வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பினைச் சேர்த்து கொப்பளிக்க வேண்டும்.
பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களைக் காணச் செல்லும்போது அவர்களைவிட்டு ஒரு மீட்டர் தூரத்தில் இருப்பது சிறந்தது. அவர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்ப்பது சிறந்தது.
நம்முடைய வசிப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வெளியிடங்களுக்குச் செல்லும்போது மூக்கிற்கும், வாயுக்கும் சேர்த்து கவசம் அணிந்து கொண்டு செல்லலாம்.
பன்றிக் காய்ச்சாலால் அதிகம் பாதிக்கப்படுவோர்
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 60 வயதுக்கும் மேற்பட்ட வயதானவர்கள், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், நுரையீரல், இதயம், சிறுநீரக நோய்களால் பாதிப்படைந்தவர்கள்.
மேற்கூறியவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும். ஆதலால் இந்நோயால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.
மேலும் பன்றிக்காய்ச்சலால் அதிகம் பாதிப்படைந்தவர்களுடன் அதிகம் பழகுபவர்களையும் இந்நோய் வெகுவாகப் பாதிக்கும்.
பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முறைகள்
பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைந்தவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.
பாதிப்படைந்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, துணிகளை நன்கு அலசி வெயிலில் காய வைக்கவேண்டும்.
இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
பொது இடங்களில் சளியை துப்புவதும், மூக்கைச் சிந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைந்தவர்கள் செய்ய வேண்டியவை
சாதாரண காய்ச்சல் என்று எண்ணி நாமாக மருந்துகளை உட்கொள்வதை தவிர்த்து முறையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் உணவுகளை உண்ண வேண்டும்.
நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். சூப்புகள், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்.
சீரான ஓய்வு மிகவும் அவசியமானது.
கைகளை அடிக்கடி கழுவி, வசிப்பிடங்களை சுத்தமாக வைத்திருந்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு ஆட்கொல்லி நோய் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்போம். வளமான வாழ்வு வாழ்வோம்.