பரதேசம் – சிறுகதை

பரதேசம் போவதுதான் ஒரே வழியென்றால் செய்து விட வேண்டியதுதான். ஒரு சில நாட்களாக அதே சிந்தனை. 

மாடுகள், உழவு நிலம், கிணறு, மனைவி, மகன், கண்ணுக்குட்டி, அந்த ஒற்றை பனை மரம், 12-ம் நம்பர் பஸ், கருப்பன் நாய், பால்காரம்மா, அய்யனார் எல்லாமே அவ்வபோது நினைவுக்கு வந்தது.

முக்கியமாக மகன், பதினெட்டு வயது. அவன்தான் சொன்னான்.

“எங்கேயாவது போயிரு..”

“சம்பத்து, உம் பேச்சே சரியில்லை.. “

“நான்தான் சொன்னேனே, எங்கேயாவது போய்டு..”

“நான் உங்கப்பன்டா..”

“அப்பனா இருக்கறதுக்கு தகுதியில்லாத ஆளு..”

“என்னடா ஆளு.. கீளுன்னிட்டு..”

“அவ்வளவு ரோஷம் இருந்தா கெளம்பிரு..”

“எங்கப் போறது?”

“எங்கேயாவது போ, எங்களைத் தொந்தரவு பண்ணாம..”

அவர் மனைவி இரவு பிடித்துக் கொண்டாள். “உன்னையெல்லாம் யாரு இங்க இருக்கச் சொன்னா. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு. அந்த பழக்கடைக்காரு காணாம போன மாதிரி நீங்களும் போய்டுங்க.”

அப்போதுக் கூட அவருக்கு ஏதும் தோணவில்லை. திரும்பி படுத்துக்கொண்டார். பக்கத்து வீட்டிலிருந்து கேட்கும் டி.எம்.எஸ் கேட்கவில்லை. மாட்டுக் கொட்டாயிலிருந்து கண்ணுக்குட்டியின் குரல் கேட்டது.

“ம்ம்ம்… மா… மா…”

அந்த சிறிய அறையில் ஒரு பக்கம் இரண்டு அரிசி மூட்டைகள். பழைய சேமிப்பு பானை. மேலே பலகையில் இரண்டு பைகளில் புண்ணாக்கு. கதவோரம் பழைய இரும்புப் பெட்டி. சுவரில் ஆங்காங்கு வெறும் ஆணிகள்.

ஒரு இடத்தில் அகல் விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது. கால்மாட்டில் சுற்றி வைக்கப்பட்டிருந்த சாக்குப் பைகள். தலைமாட்டில் அப்பா, அம்மா புகைப்படம். என்னவோ ஒரு வாசனை.

பலகைக்கு மேலே மூங்கில் கீற்றுகளுக்கு மேலே சீமை ஒடுகள் வழியாக வழியும் வெப்பம். இடதுப்பக்கம் எப்போதும் ஒரு சொம்பு மூடியபடி.

எழுந்து தண்ணீர் குடித்தார். சட்டையில்லாத தன்னுடைய உடம்பை பார்த்துக் கொண்டார். வயிற்றுக்கு கீழே இடதுப்பக்கம் சொரிந்துக்கொண்டார். வெளியிலிருந்த வந்த வெளிச்சத்தில் நிழல்கள் வந்து போயின.

தலையில் வெள்ளை முடிகளை தடவிக்கொண்டார். மீண்டும் தண்ணீர் குடித்தார். கண்களில் ஆவி பறந்தது. அவருடைய பார்வை பெட்டியின் மீது தூசியுடன் இருந்த பையின் மீது விழுந்தது.

“என்னா நேரமிருக்கும்?”

அவர் அந்த பெட்டியை நோக்கி நகர்ந்தார். அதில்தான் அவருடைய உடைகள் இருந்தன.

அவள் காலையில் எழுந்திருந்து மாட்டுக்கொட்டாயில் சாணியை பெருக்கி வாரி, முன்புறமும் சுத்தம் செய்து பால் கறந்து, பொன்னாங்கன்னி கீரையை ஆய்ந்து பருப்பு ஊற வைத்து, இரண்டு குடம் தண்ணீரை பிடித்து வைத்து இந்த அறையை திறந்தபோது மணி எட்டிருக்கும். 

வெயில் தாழ்வாரத்தில் விழுந்து “அப்பப்பா.. என்ன வெயில்” என்றாள்.

உள்ளே காலியான அறை. வழக்கம்போல அந்த வாசனை. ஒரு பல்லி சுவரில் ஓடியது. அந்த சின்ன சன்னல் மூடப்பட்டிருந்தது. கீழே விழுந்திருந்த துண்டு. அந்த கதவு ஒரு பக்கம் சாய்ந்து இவளை பரிதாபமாக பார்த்தது.

“சம்பத்து.. சம்பத்து..” என்றாள்.

அவன் வெளிப்புறம் மாடிக்கு கீழே கட்டிலில் படுத்திருந்தான். சத்தம் வரவில்லை. அவள் “அடடா, பால் ஊத்தனுமே.” என்று வேகமாக கதவை சாத்தியபோது, “என்னம்மா..?” என்றான் அவன்..

“எழுந்திரு, பால் ஊத்தனும். டீக்கடைக்காரன் கத்துவான்.”

“அந்தாளை அனுப்பு..”

“அது காணோம். வெளிய பாரு சத்தம் கேக்குது. தண்ணி நிக்கற மாதிரி தெரியுது. இன்னும் நாலு கொடம் புடிக்கனும். பத்தாது. எழுந்திரு. கம்பெனிக்காரன்கிட்டேயிருந்து தகவல் ஏதாவது வந்ததா..?”

“இல்லம்மா. தொண தொணக்காதே. வேல வரும்போது வரும்.”

“வரும், வரும்.”

“எப்ப வர்றது? பேசாம அந்த முட்ட கம்பெனியிலேயே இருந்திருக்கலாம். மாசம் பத்தாயிரம் கொடுத்தான். அஞ்சு மாசமாச்சு. அஞ்சு மாச சம்பளம் போச்சு.”

அவன் போர்வையை உதறி தலையை வெளியே நீட்டினான். வெயில், கண்கள் கூசியது. கட்டிலை தள்ளிப் போட்டு மீண்டும் படுக்க முயன்றபோது “பாலை கொண்டுப் போடா வந்து” என்றாள்.

அவன் சலிப்புடன் “அதுக்கிட்டே கொடுத்தனுப்பு.”

“அது இல்லைடா.”

“எங்க அது.?”

“அது எங்கேயோ? கருமாந்தரம். காலைலேயே எங்கேயோ பொறுக்கதறுக்கு போயிடுச்சு. நீ வா.”

அவனிடமிருந்து பதில் இல்லை. மீண்டும் போர்வையை இழுத்து மூடி கண்களை மூடிக்கொண்டான்.

“அவரு நடு ராத்திரில நடந்து போனாரு. நான் பாத்தேன்.” என்கிற குரல் வெளியில் கேட்டது.

ஏறக்குறைய ஐநூறு கிலோ மீட்டர் தள்ளி இருக்கலாமென்று அவர் நினைத்துக்கொண்டார். கால்நடைதான் அதிகம்.

எந்த சந்தர்பத்திலேயும் அவர் அழவில்லை. ஆனால் அழுகையை அவர் ஏறக்குறைய கட்டுப்படுத்திக் கொண்டார்.

அவருக்கு அருகிலிருந்த அந்த ஐஸ் வண்டிக்காரன் இவரையே பார்த்தான்.

கையில் அந்த அழுக்குப்பை. உதடுகளில் வறட்சி. வெள்ளை சட்டையில் ஆங்காங்கே கீறல் கீறலாக கருப்பாக இருந்தது.

தலைமுடியில் எண்ணெய் தடவி வாரப்பட்டிருந்தது. வேட்டியில் மஞ்சள் பார்டர் நிறம். புதிய செருப்பு. வரிவரியாக கைகளில் ரோமங்கள். பேசியபோது பற்களில் இடைவெளி தெரிந்தது.

“பணம் எவ்வளவு வச்சிருக்கீங்க?”

“ஏன்?”

“பத்தரம். அதில்லைன்னா கஷ்டம்.”

“அதில்லை.”

“என்னது.?”

“அதில்லை.”

“அன்னக்காவடியா?”

“ஆமா”

“இப்புடியே போனீங்கன்னா ரண்டு கிலோமீட்டர்ல போகிப்பட்டின்னு ஒரு ஊரு வரும். மாரியம்மன் கோயிலு எங்க இருக்குதுன்னு கேளுங்க. அதுக்குப் பக்கத்துல ஒரு பெரிய தோட்டம் வரும். அந்தாப்ல ஒர வெறகுக் கடை. அந்தாப்ல மறுபடியும் தோட்டம். அந்தாப்ல ஒரு ஸ்கூல் வரும். அந்தாப்ல ஒரு டீக்கடை இருக்குது. அங்க உங்கள மாதிரி ஒரு பெருசு இருக்கும். போய்ப்பாருங்க.”

“எதுக்கு?”

“அவரும் உங்கள மாதிரிதான்.”

“டீக்கட வச்சுருக்காரா?”

“இல்ல, ஆளு நெட்டையா செவப்பா இருப்பாரு. ராமலிங்கமோ, ராமமூர்த்தியோ என்னவோ பேரு. அங்க விசாரிச்சா சொல்லுவாங்க… பணம் இல்லாம எப்புடி ஐநூறு கிலோமீட்டரு?”

“பைக்கு, காரு, நடக்கறது, டிராக்டர்ல கூட வந்திருக்கேன். அப்புறம் மாட்டு வண்டில கூட.”

“சாப்பாடு?”

“பிச்சதான். அஞ்சு, பத்து சேரும். பெரும்பாலும் சோளக்கதுருதான் சாப்பாடு.”

“புடிக்குமா?

“ஆமா. ஒன்னை ரண்டு வேலைக்கு கூட சாப்புடுவேன்..”

“சரி. போங்க, போங்க. நான் சொன்ன ஆளப் பாருங்க.”

“நான் பாக்கமாட்டேன். நான் எதுக்கு பாக்கனும். ஒரு ஐஸ் தர்றியா?”

“அஞ்சு ரூவா கொடு.”

“அஞ்சு ரூபாக்கு ரண்டு சோளம் கெடைக்கும். சும்மா கேட்டேன்.”

ஐஸ்காரன் சிரித்து பெட்டிக்குள் கையை விட இவர் “வேணாம்..” என்று சொல்லிவிட்டு அவன் சொன்ன திசைக்கு எதிர் திசையில் நடந்தார்..

“யோவ்.. இந்தப் பக்கம்யா..”

அவர் காதில் விழாத மாதிரி நடந்தார். வெயிலில் உடல் வியர்வையில் உலர்ந்து சட்டை காற்றுக்கு கூட அசைய மறுத்தது.

அசை போட்டுக் கொண்டிருந்த இரண்டு எருமைகள். ஏரிக்கரை ஓர ஒற்றையடிப் பாதை. வரிசையாக தென்னை மரங்கள். ஏரிக்கு மேலே பறக்கும் நீர்கோழி பறவைகள். காகங்கள்.

கரையோரம் செத்து ஒதுங்கயிருக்கும் ஒரு சில மீன்கள். லேசான நாற்றம். தூரத்தில் மிதந்து கொண்டிருந்த வலை.

எதிர்புறம் ஒரு குட்டையில் நான்கு பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அவரும் உங்கள மாதிரிதான்.”

சட்டென்று திரும்பி நடந்தார். ஐஸ்காரன் அந்த இடத்தில் இல்லை. அவன் சொன்ன வழி நேரெதிரில் இடதுபுறம் பிரிந்தது.

“ரண்டு கிலோமீட்டர்ல போகிப்பட்டின்னு ஒரு ஊரு வரும்.”

நடந்தார்.

“அவுரா, அவுரு செத்துப் போய்ட்டாருங்க. பத்து நாள் ஆகுது.”

இவர் விழித்தார். டீக்கடைக்காரர். “அவுரை தேடி யாரும் வந்ததில்லையே. நீங்க நாகப்பட்டணமா.?”

“இல்லீங்க, கிருஷ்ணகிரி.”

“அவுரு திடீருன்னு போய்ட்டாருங்க. வெறகு ஒடைக்கற அம்மாதான் மொதல்ல பாத்தது. யாராலேயும் நம்பமுடியல. எந்த வியாதியும் இல்ல. இங்கதாங்க உக்காந்து பேப்பர் படிப்பாரு. டீ, வடையெல்லாம் சாப்புடமாட்டாரு. செத்துப் போனதுக்கு முன்னாடி நாள் கூட, நைட்டு ஏழு மணி வரைக்கும் இருந்தாரு. நீங்க அவருக்கு சொந்தமா? அவருக்கு சொந்த பந்தமெல்லாம் கெடையாதே.”

“ஒரு டீ கொடுங்க.”

“நீங்க ஏதும் சொல்லலையே?”

“வழியில ஒரு நா பாத்தேன்”

“எங்க?”

“இங்கதான். சந்த பக்கம்.”

“சந்தையா? அவுரு அங்கெல்லாம் போகமாட்டாரே”

“இல்ல, பாத்தேன். என்னவோ சைகை பண்ணாரு. அப்ப நெத்தியில பட்ட வச்சு காவி வேட்டியோட இருந்தாரு. கூட ஒரு பையன் இருந்தான். என்னவோ அவனை திட்டிக்கிட்டு இருந்தாரு. ஓரமா போய் நின்னு அவரசரமா எதையோ சாப்புட்டுகிட்டு இருந்தாரு. நான் அந்தாப்ல போகும்போது என்னைய திரும்பிப் பார்த்து சிரிச்சாரு.”

“அவரு சிரிப்பழகங்க. சிரிச்சுக்கிட்டேதான் வாழ்ந்தாரு. எதுக்கும் அர்த்தமில்லைன்னு. அப்பபோ, சொல்லுவாரு.”

“இந்தாங்க டீ.”

டீக்கடையிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தது. கையில் நிறைய பாத்திரங்களுடன் ஓரமாக ஒழுகுகிற பைப் அருகே உட்கார்ந்தது. பெரிய உடம்பு. டீக்கடைக்காரர் வயதிருக்கும். அநேகமாக அவருடைய மனைவியாக இருக்கலாம்.

கால்களில் சேலை நழுவியபோது வழவழப்பும் மஞ்சளும் தெரிந்தது. அடர்த்தியாக இருந்த தலைமுடி. கைகளில் ரவிக்கையை மீறிய சதை. சேலையில் தப்பிய இடுப்பில் இரண்டு மடிப்புகள். முதுகில் அகலமான வி. பாத்திரத்தை கழுவியபோது கூடவே சேர்ந்த வளையல் சத்தம்.

“டீ எப்புடி இருக்குதுங்கோ?”

“இதா?” குடித்தார்.

பார்வை அவள் இடுப்பின் மீது படிந்து கால்களில் தாவி கூந்தலுக்கு பாய்ந்து முதுகில் வந்து நின்றது..

“அருமை”

“எல்லாம் எம்பொண்டாட்டி கத்துக் கொடுத்ததுங்கோ. வர்றவங்க அவளத்தான் போடச் சொல்லுவாங்க. அவுரு கூட.”

“அவுருதான் டீ குடிக்கமாட்டாருன்னு சொன்னீங்களே?”

“இவ போட்டா குடிப்பாரு. தேயிலை வாசனை வருதுன்னு சொல்லுவாரு. அவளுக்கு மட்டும் என்னதான் கைப்பக்குவமோ.”.

“உக்கும்..” என்று முகத்தை முட்டியில் இடித்துக்கொண்டாள் அவள். இடித்த இடத்தில் கன்னம் சிவந்து தேங்கி மறைய ஆரம்பித்தது. கால் விரல்களில் மருதாணி சிவப்பு. காதோரம் பூனை முடிகள்.

கூந்தல் முடியும் இடத்தில் இரண்டே இரண்டு செம்பருத்தி பூக்கள்.

உட்காருமிடத்தில் அகலமான வளைவில் தோன்றிய இன்னொரு மடிப்பு. லேசான கோடுகளுடன் உதடுகள். இரண்டு உதடுகளும் பெரிதாக, அலட்சியமாக.

“ஏனுங்க, நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே?”

“அச்சா… அச்சா.. அதான் சொன்னேனில்ல.. என்னைய பாத்து சிரிச்சாருன்னு..”

அவள் திரும்பிப் பார்த்து புன்னகைத்து திரும்பிக் கொண்ட மாதிரியிருந்தது. இடுப்பு ஒரு பக்கம் சரிந்து உள்வாங்கிக் காட்ட, எழுந்தபோது பின்னாடி சேலை மடிப்பில் விழுந்த மேடு பள்ளம். திரும்ப கடைக்குள் அவள் நடக்கும்போது இவரைப் பார்த்து புன்னகைத்த மாதிரித்தான் இருந்தது.

“அப்புறம்?”

“மக்காச்சோளம் சாப்புடுறியான்னு கேட்டாரு. எனக்கு ஆச்சரியம். அவருக்கு எப்படித் தெரியுமுன்னு?”

“உங்களுக்கு புடிச்சதா?”

“ஆமா, ஆனா வேணாமுன்னு சொல்லிட்டேன். ஊர்ப்பக்கம் வாங்க. விவசாயிங்கள பத்தி பேசலாமுன்னு சொன்னாரு.”

அதுக்கு அந்தப் பைய சிரிச்சான். ஏன் சிரிச்சான்னு தெரியல. அவரு மறுபடியும் திட்டினாரு. அவன் சிரிச்சுக்கிட்டே இருந்தான்.

“அந்தப் பைய அப்புடிதாங்க. அவன்தான் அவரை சாகடிச்சுட்டதா சொல்லறாங்க.”

“ஊரே அப்படிதாங்க பேசிக்குது” என்றான் அவன்.

முப்பது வயதிருக்கலாம். மீசையை வளைத்து விட்டிருந்தான். வேட்டி, சட்டை, பாக்கெட்டில் சிவப்பு நோட்டு. காதோரம் வளைத்து விட்டிருந்து முடி.

நீளமான இடது கைவிரல் நகங்கள். புன்னகைத்தபோது தோன்றிய பெண்மை. கொஞ்சம் இவரை விட உயரம். நெற்றியில் சிவப்பு பொட்டு. வலது காதில் ஒரு கடுக்கன். கீழ் உதடு அவ்வளவு மென்மையாக இருந்தது. .

“அது சரி. நீங்க யாரு?”

“ஒரு புதிரு போட்டிருந்தேன். சந்தை, பையன், அப்புறம் சாமியாருன்னு.”

“சாமியாரு இல்லீங்க. ஊர்சுத்தி. அதாவது நாடோடி. இங்கெல்லாம் அவர பரதேசின்னும் கூப்புடுவாங்க. அந்த கற்பனை பையன் நானில்லையா?”

“இல்லீயே, ஆனா ஒரு பதட்டம் இருந்தது. ஆறாவது அறிவு தாண்டி. ஏதோ அமானுஷ்யமா நடக்குமோன்னு.”

“அது சரி. நீங்க யாரு?”

“நானும் ஒரு பரதேசி மாதிரிதான். வழி காட்டுனாங்க. அவரைப் போய் பாருங்கன்னு. டீக்கடை, ஒத்தையடி பாதை, நெல்லு வயல், கெணறுங்க, மாடுங்க, அப்புறம் நீங்க. இதைத்தான் பாத்தேன். ஆனா உள்ளுக்குள்ள என்னவோ ஓடுது. ஒரு அரிப்பு மாதிரி. அவரு இருந்த எடத்தை காட்டறீங்களா?”

“அதெல்லாம் அவரைப் பாக்கறதுக்கு வரத்தான் செய்வாங்க. சாமியாருன்னு நெனைச்சுக்கிட்டு. சிரிச்சுக்கிட்டே வேறப் பக்கம் போய்டுவாரு. அவரு உக்காந்திருந்த எடத்தை, செருப்பை, துணிங்களை, கும்பிட்டுப் போவாங்க.

ஒரு கட்டத்துல செருப்பு போடறத வுட்டுட்டாரு. எல்லாம் ஆட்டு மந்தைங்கன்னு திட்டுவாரு. விவசாயம் பத்தி நெறைய பேசுவாரு. நம்மாழ்வார சிலாகிச்சு பேசுவாரு. பொம்பளைங்கல ஏமாத்தாதேன்னு சொல்லுவாரு. மரங்களை தேடிப்போய் கெடைக்கறத சாப்பிடுவாரு. இங்க யாரும் கண்டுக்கமாட்டாங்க.

ஒரு விச‌யம் தெரியுமுங்களா. வர்றவங்களான்ட மரத்தைக் கும்புடுங்கடான்னு சொல்லுவாரு. என்ன யோசிக்கறீங்க?”

“இல்ல, அந்த விவசாயம்? நான் போட்ட புதிர்ல அதுவும் வருது”

“வரும், வரும். அதெல்லாம் ஒரு தற்செயலா நடக்கறதுதான்.”

“இல்லீங்க. எனக்கும் அவருக்கும் ஏதோ ஒன்னு இருக்குது.”

“பந்தம்..?”

“இருக்கலாம்..”

“சந்தை, பையன், அவரு, விவசாயம். பையனோட உருவம் வேற. ஆனா பையன்னு ஒருத்தன் இருக்கான். அவன் சிரிச்சுக்கிட்டே இருப்பான். அவரு திட்டுப்போதும் சிரிப்பான். நீங்க அப்படித்தான் இருக்கறீங்க. சிரிச்சுக்கிட்டே. அப்புறம் அந்த விவசாயம்.. எனக்கு எதுவும் தற்செயல் மாதிரி தெரியல. ஏதோ வுட்டுட்டு போயிருக்காரு.”

“ரண்டு ஜோடி வேட்டி, சட்ட, ஜட்டி, பனியன், ஒரு போர்வை, கருப்பு கண்ணாடி, அப்புறம் ஒரு குல்லா, ஒரு செண்டு பாட்டலு. அப்புறம், வேற எதுவும் இருக்கற மாதிரி தெரியல. ஆனா அவரு நாகப்பட்டணத்துலயிருந்து வரும்போது கூட ஒரு நாயோட வந்தாரு. அது நாலு மாசம் கழிச்சு செத்து போச்சுது. ஆச்சரியம் பாருங்க. அவரு இருந்தாருல்ல. சுண்ணாம்பு பாற. அதுக்கு பக்கத்துலேயே நாய பொதைச்சு வாரத்துக்கு ஒரு நாளு கும்புடு போடுவாரு.”

“அப்படியா? நாயோட நெறம்?”

“கருப்புங்க. கருப்பன்னுதான் பேரு வச்சிருந்தாரு.”

இவர் துடிப்புடன் “பாத்தீங்களா, எங்க தெரு நாயி பேரும் கருப்பன்தான். பின்னாடியே வரும், போகும். ஆனா தெரு நாய் பாருங்க. வீட்டுக்கள்ள சேத்த முடியுமுங்களா?. பொற, பிஸ்கட்டுன்னு வூட்டுக்காரிக்கு தெரியாம வாங்கிப் போடுவேன்.”

அவன் நிதானித்து அவரைப் பார்த்து “வூட்டுக்காரிக்கு ரொம்ப பயப்படுவீங்களா?”

“அப்படியில்லீங்க. அவளுக்கு என்ன புடிக்காது.”

“நாயி இருக்குதா? போயிடுச்சா..?”

“இருக்குதுங்க.. எம் பையன் ஒரு நா அத கல்லால அடிச்சுட்டான். பின்னாடி கால்ல சரியான அடி. கதறிட்டே ஓடிடுச்சு. பாவம், அய்யனார வுட்டு நான்தாங்க கட்டு போட வச்சேன்”

“எதுக்கு அடிக்கனும்?”

“நாய்க்கு என்னைய புடிக்கும்.”

“சரி..”

“ஆனா.. பையனுக்கு என்னைய புடிக்காது.”

“ஓ.. எங்கேயோ ஒதைக்குதே.”

“நான்தான் சொன்னேனே. ஐஸ்காரன் சாதாரண ஆளு இல்லீங்க. அடுத்த மொற பாக்கும்போது ஜோஸியம் பாப்பியான்னு கேக்கனும்.”

“எனக்கு அதிலெல்லாம் நம்பிக்க இல்லீங்க.”

“அவருக்கு?”

“அது தெரியாதுங்க. அவருக்கு கடவுள் நம்பிக்க கெடையாது. ஆனா மரங்களை கும்பிடுவாரு. பூமியல எல்லாமே அழிஞ்ச பெறகும் மிச்சமிருக்கறது மரங்களாத்தான் இருக்குமுன்னு சொல்லுவாரு. இலைங்களை பத்தி அப்பப்போ பேசுவாரு. இலைங்களோட நிறத்தை வச்சு அந்த இடத்துல இருக்கற மண்ணு.. தண்ணியப் பத்தி சொல்லிட முடியுமுன்னு சொல்லுவாரு.”

“அப்ப சாமியாருதான்.”

“அட இல்லீங்க. மனுசன்தான். ஆனா உங்கள தப்பு சொல்ல முடியாது. சாமியாரு செத்துட்டாருன்னுதான் சொல்லறாங்க.”

“இல்லியே, உங்களத்தான் சொல்லறாங்க. சாகடிச்சுட்டீங்கன்னு.”

“அதுவா.”

கொஞ்ச நேரம் கழிந்து. “அவரோட கடைசி காலத்துல நானு அவரோட இல்லீங்க” என்றான்.

அந்தப் பாறை கூடை வடிவில் தலைகீழாக இருந்தது. பாறைக்கு கீழே இடதுபுறம் சின்ன பொந்து. அதன் அருகில் ஓரமாக வழிந்து கொண்டிருந்த தண்ணீர். நடுவில் லேசான பள்ளம். வலதுபுறம் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பை.

ஒரு நோட்டு புத்தகம். சற்று தள்ளி தனியே இருந்த ஒரு செருப்பு, ஆங்காங்கே கரித்துண்டால் இழுக்கப்பட்டிருந்த கோடுகள். குளிர்ச்சியாக சுமார் பத்தடி அகலம். கீழே தெரிந்த ஊர். விவசாய நிலங்கள். மரங்கள், ஆலயம்.

ஊருக்கு பிரியும் பாதையில் ஒற்றையாக நகரும் மனித உருவம். அந்த வேப்ப மரத்தடியில் மேயும் நான்கைந்து மாடுகள், மனித குரல்கள், சின்னதும் பெரிதுமாக.

“அந்தப் பள்ளத்துலதான் அவரு படுத்துக்குவாரு.”

“இதுதான் அவரோட எடமா?”

“ஆமா.. அந்தப் பைதான் அவரோட சொத்து.”

“இங்கேயே இருக்குது.”

“அதுவா அழிஞ்சுப் போகட்டுமுன்னு எழுதி வச்சிருக்கார்.”

“எழுதி வச்சிருக்காரா?”

“ஆமா.. நான் செத்திருவேன்னு சொல்லிட்டுதான் செத்துப் போயிருக்கார்.”

“இந்தக் கோடுங்க?”

“அவரா கிறுக்கனது. எல்லாம் மரங்களாம். இந்த ஊருக்கே அழகு மரங்கள்தான்னு சொல்லுவாரு. அதனாலதான் இங்கே தங்கினதா சொல்லுவாரு. இந்த பாற பேரு மூக்குத்தி பாறன்னு சொல்லுவாங்க. மூக்குத்தி பாறைல சாமியாரு ஒருத்தரு வந்திருக்காருன்னு கூட்டம் வர ஆரம்பிச்சிருச்சி.

கூட்டம் அவருக்கு புடிக்காது. அப்பத்தான் என்னைய புடிச்சாரு. பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி. அப்போ எனக்கு பன்னண்டு, பதிமூனு வயசு இருக்கலாம். கூட்டத்தோட இருந்த என்னைய கைகாட்டி கூப்புட்டாரு. போனேன்.

நான் சாமியாரு இல்லை. கெளம்புன்னு சொன்னாரு. அவரு யாருகிட்டயும் பேச மாட்டாரு. எங்கிட்டே பேசினாரு. கூட்டம் என்னைய ஆச்சரியமா பாத்தது. அப்புறம் அப்பப்போ இங்க வர ஆரம்பிச்சேன்.

தண்ணி, பழம், பிஸ்கட், இட்லி, தோசைன்னு எடுத்தாந்து கொடுத்தேன். பழங்களை மட்டும்தான் எடுத்துக்கிட்டார். ஒரு நாள் இருப்பாரு. இருபது நாள் இருக்க மாட்டாரு. நடுவுல அவரை கொஞ்சம் மறந்துட்டேன்.

திடீருன்னு ஒரு நாளு எம்முன்னாடி நின்னாரு. ஆச்சரியமா போச்சு. அப்புறம் திரும்பி போய்ட்டாரு. எதுவும் பேசலை. மறுநாளு இங்க வந்தேன். அப்பதான் அந்த நோட்டுப்புத்தகத்தை கொடுத்தாரு.” அவன் அந்த நோட்டை கைகாட்டினான்..

“எதுக்கு?”

“எடுத்துப் பாருங்க.”

பெரியவர் எடுத்து பிரித்தார். பைக்கு அடியில் இருந்தது. உள்ளே ஆங்காங்கே அதே கோடுகள். அதே கரித்துண்டு.

“ஒரு எழுத்தும் இருக்காது. எனக்கு புரியலை. எனக்கு புரியலைன்னு சொன்னேன். சிரிச்சாரு. என்னைய மட்டும்தான் பாத்து சிரிப்பாரு. ஊர்காரங்க என்னைய அவருக்கு சிஷ்யனா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவரு அதை விரும்பலை. ஒரு நாளு இனிமே வராதேன்னு சொன்னாரு.” அவன் நிறுத்திக் கொண்டான். கோடுகளை கவனித்தான்.

தூரத்தே தோப்புக்குள் கடந்துப் போகும் ஒரு பஸ். மேற்குப் பக்கம் ஊருக்கு வெளியே வரும் ஆடுகள். சைக்கிளில் போகும் இரண்டுப் பேர். சரிவில் பாறைகளின் மீது விழுந்திருக்கும் வெயில். ஒரு நெல் வயலில் இறங்க காத்திருக்கும் நான்கைந்து பெண்கள்.

“ஏன்?”

“தெரியல.. அன்னைக்கு ஒரு கனவு வந்தது. கடல் தண்ணி. யாரோ என்னைய கைய புடிச்சுட்டு கூட்டிக்கிட்டு போறாங்க. நான் கொழந்தையா இருக்கேன். மணல், தண்ணி அலை சத்தம். நீலக்கலரு. பட்டை பட்டையா, எனக்கு முகம் பிடிபடலை. நான் முகத்தை பாக்க விரும்பறேன். அம்மாவா இருக்குமோன்னு. நீல நீலமா தெரியுது. குரல் மட்டும் வருது. அந்தக் குரல் அவரோடதுதான்.”

“என்ன சொன்னாரு?”

“நான் மூளியா இருக்கேன்னாரு. குரல்தான் அவரோடது. ஆனா என் கைய புடிச்சுருந்தது ஒரு பொம்பளை. வளையல் இருந்தது. அந்த செண்ட் வாசனை. அவரு பயன்படுத்துவாரே, அதே மாதிரி.

எம் பையனையும் இழந்துட்டேன். அவளையும் இழந்துட்டேன். வெறும் உடல் மட்டும்தான் இருக்குதுன்னு சொன்னாரு. நான் அழ ஆரம்பிச்சேன். பயமா இருந்தது. அது எங்கம்மா இல்லை. அவருதான். நல்லாத் தெரியுது.

பொடவை கட்டிக்கிட்டு, நீளமான முடி. முகம் தெரியலை, நாகப்பட்டணத்துல எல்லாமே கெடைக்கும். வெயிலும் இங்க அழகா இருக்கும். வியர்வை ஆவியாகற வாசனைய உணர முடியும். வியர்வைதான் இங்க அதிகம். வியர்வையும், கடல் தண்ணியும் ஒன்னா சேரும்போது சொகமா இருக்கும். நான் ஏன் செண்டை பயன்படுத்தறேன்னு சொல்லுன்னு” கேட்டாரு.

“தெரியலைப்பான்னு சொன்னேன்”

“அப்பாவா?”

“ஆமா.. அப்படித்தான் சொன்னேன். சில மனுஷங்க கெட்ட வாசனைய தருவாங்க. அதுக்குதான் அப்படின்னாரு.”

“உடல் நாத்தம்?”

“இல்ல… புரியாத வாசனைன்னாரு. எனக்கும் புரியலை. நீ பெரியவன் ஆனா புரியுமுன்னு சொன்னாரு. பின்னாடி அதே வாசனைய அவருக்கட்ட உணர்ந்தேன்.” அவன் நிறுத்திக் கொண்டான்.

அந்த பையை பார்த்தான். ஓரமாக இறங்கும் தண்ணீரின் பாசி வாசனை. எங்கிருந்தோ கல் தவளையின் குரல். வேப்பம்பூ வாசனை. முன்புறம் பாறைகளின் மீது ஆங்காங்கே தலை நீட்டியிருக்கும் கோரை புற்கள். ஜோடியாக பறந்து செல்லும் இரண்டு கொக்குகள்.

“எப்போ..?”

“சுமார் மூனு வருசத்துக்கு முன்னாடி”

“ஏன் அப்படி தோணிச்சு?”

“தெரியல, ஆனா தோணிச்சு”

“என்ன சொன்னாரு?”

“எனக்குள்ள அவ இருக்கான்னாரு. இதுதான் அவரு என்கிட்ட பேசின கடைசி வார்த்தை.”

“பொண்டாடிய சொல்றாரா..?”

“இருக்கலாம்.”

“உண்மையிலேயே அவரு நாகப்பட்டணமா..?”

“இருக்கலாம். அவரு எதையும் சொன்னது கெடையாது.”

“குடும்பத்தை இழந்துட்டாரா?”

“இருக்கலாம். அதையும் சொன்னது கெடையாது.”

“ஏன் அந்த கெட்ட வாசனை?”

“தெரியலை, ஆனா வந்தது. ஏதோ ஒரு அருவருப்பு அவரு மேல. அதைதான் வாசனைன்னு அவரு சொல்றாருன்னு பின்னாடி புருஞ்சுக்கிட்டேன்.”

“காரணம் தெரியாம எப்படி?”

“இதெல்லாம் அறிவுக்கு அப்பாற்பட்டது. நமக்குள்ள ஏதோ ஒன்னு ஓடிக்கிட்டே இருக்குதுள்ள. அந்த மாதிரி. நீங்க கூட சொன்னீங்களே. ஏதோ ஒத்துப் போதுன்னு.”

“சொன்னேன். ஆனா அவரு புதுசா இருக்காரு. பொண்டாட்டி மேல பாசமா. பையன் மேல கிறுக்கா. ஆனா எது நேசம்?”

“புரியல, அவரு மட்டுமே உண்மை. அந்த வாசனைக்கப்புறம் அவரை சந்திக்கறது குறைஞ்சிடுச்சு. ஒரு கட்டத்துல அவரு யாரோ? நானு யாரோன்னு ஆயிட்டோம்.”

“அப்படியென்ன உறவு உங்களுக்குள்ள?”

“ஆரம்பத்துல குரு சிஷ்யன். பின்னாடி அப்பா, மகன்”

“அப்படீன்னு அவரு சொன்னாரா.”

“அப்படி எடுத்துக்கிட்டேன். அவரு இருக்கும்போதெல்லாம் அவரை பாக்காம இருந்ததில்லை. கனவுக்கு அப்புறம் அவரு மேல மரியாதையை தாண்டி ஏதோ ஒரு பாசம். கடைசி மூணு வருஷத்தில எல்லாமே தலை கீழாயிடுச்சு. என்னாலேயே நம்ப முடியல.

வீட்ல கூட அம்மா கேட்டாங்க ‘ஏதாவது பிரச்சினையான்னு?’

நடுவுல ஒரு வருஷம் இல்லை. அப்புறம் திரும்பி வந்திருக்கறதா சொன்னாங்க. நான் போய் பாக்கலை. கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கறது. வேலைன்னு கவனம் மாறிடுச்சு. பெறகு மேல வெறகு வெட்டறதுக்கு போனவங்க வந்து சொன்னாங்க. சாமியாரு இறந்துட்டாருன்னு.

எங்க தோட்டத்துலதான் அவரை புதைச்சேன். அவருக்கு புடுச்ச வேப்ப மரத்துக்கு பக்கமா. ஆனா இப்பவும் அவரு சமாதிய வந்து கும்பிட்டு போறாங்க. அவரு சொன்ன மாதிரி அவரோட பொருளையெல்லாம் இங்கேயே இருக்கட்டுமுன்னு விட்டுட்டேன்.”

“எப்படி இறந்தாரு?”

“சாப்பிடாம, தண்ணி குடிக்காம, தனக்குக்தானே வருத்திக்கிட்டு, மரணத்தை அவரு வரவழைச்சுக்கிட்டாரு. அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே.”

“என்ன?”

“சாகும்போது கைல வளையல் இருந்தது. எனக்கு கனவுல வந்ததே. அதே மாதிரி.”

“ஏன் அப்படி?”

“அது அவரோட மனைவியோட வளையலா இருக்கலாம்.”

“ஓகோ.”

“நான்தான் அவ. அவதான் நான். அப்படித்தான் நான் எடுத்துக்கிட்டேன்.”

இவர் உதடுகளை தேய்த்துக்கொண்டு “உண்மையிலேயே அவரு வேற. நெஞ்சு கூட்டுக்குள்ள மனைவியை வச்சுக்கிட்டு வாழ்ந்திருக்கார்.”

“உங்களுக்கும் அவருக்கும் ஏதும் ஒத்து வரலையா?”

“எப்படி வரும்? தொறத்தி விடப்பட்டவன் நான். எங்கேயும் ஒத்து வரலை.”

“ஏன்?”

“எல்லாம் பொம்பள தோஷம். அய்யனாரு சொன்னான். பால்கார பொம்பளைக்கிட்ட வச்சுக்காதேன்னு. அவ பேசறத வச்சு தப்புக்கணக்கு போட்டுக்கிட்டு அவ வீட்டுப் பக்கம் போயி. அவ சத்தம் போட்டு, பஞ்சாயத்து தகறாருன்னு ஆகிப் போச்சுது.

எங்க நெலத்துல ஒத்தையா ஒரு பனமரம் நிக்கும். அங்கேதான் என்னைய ஒரு நா பூரா உக்கார வச்சாங்க. வெயில், வெயில். சுத்திலும் கூட்டம். மரங்களுக்கு அடியில. என்னைய வேடிக்க பாத்தே சாகடிச்சாங்க. இப்பதான் புரியுது. என்னைய விட எம் பொண்டாட்டி. பையனுக்கு எவ்வளவு அவமானமுன்னு.”

“அது சரி. திரும்ப போற ஐடியா இல்லையா?”

“இல்ல. அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும். நாலஞ்சு வருசத்துக்கு அப்புறம் வீட்ல போட்டா மாட்டிடுவாங்க. அதுதான் சரி.”

அவன் சட்டென்று திரும்பி இறங்க ஆரம்பித்தான். இரண்டு, மூன்று நபர்கள் முன்புறம் இருந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்று அவனுக்கு சம்பிரதாயமாக சிரித்தார்கள். அவன் வெறுமனே நடந்தான்.

வெயில் மண்டையில் விழுந்து முகத்தில் அறைந்தது. இவர் அந்த பொந்துக்கடியில் எட்டிப் பார்த்தார். சற்று தள்ளி இருள். அதை தாண்டி குட்டை. எங்கேயோ தண்ணீர் ஒழுகும் சத்தம்.

மீண்டும் தவளையின் “கர்ர்ர்ர்ர்ர்…….ர்ர்ர்…… ர்ர்..ர்..ர்..”

பின்னால் திரும்பிப் பார்த்தார். அந்த மூன்று நபர்களும் அவனுக்கு இடைவெளி விட்டு பின்தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள். இவர் அந்த ஒற்றை செருப்பை கவனித்தார். அருகில் சற்று உட்புறம் ஒரு வாழைப்பழத் தோல். இரண்டு குச்சிகள். பழைய மடித்த வாழையிலை. நான்கைந்து கரித்துண்டுகள். ஏதோ காகித பொட்டலம். அதை எடுத்து பிரித்தார்.

இரண்டு வாடிய செம்பருத்தி பூக்கள்.

“தம்பி.. தம்பி.. நில்லு.. “

அவன் நின்றான். அதற்குள் கன்னத்தில் வியர்வை இறங்கியிருந்தது. வெள்ளை சட்டைக்கு வெளியே தெரிந்த பனியன்.

உலர்ந்த உதடுகள் வழியாக “என்னாங்க..?”

“இதப் பாருங்க.”

“செம்பருத்தி பூ..”

“ரண்டே.. ரண்டு..”

“ஆமா”

“ஏதும் ஞாபகத்துக்கு வரலையா?”

“இல்லையே..”

“கெட்ட வாசனை.. அருவருப்பு.. செம்பருத்தி பூ.?. “

யோசித்து.. “புரியல.. “

“அந்த டீக்கடை.. அவம் பொண்டாட்டி.. “

“புரியல”

“அந்த பொம்பளை இப்படித்தான் ரண்டு செம்பருத்தி பூவ தலைல வச்சிருந்தாங்க. ஆனா நெறம் வேற. ஒரு மாதிரி மஞ்சளும் ஊதாவும் கலந்த நெறம். அது இயற்கையானது இல்லை. வளர்ப்பு செடி அது. அது மாதிரி உங்க வீட்டுக்கு முன்னாடி உங்களை பாக்க வர்றதுக்கு வந்தப்போ பாத்தேன்.”

அவன் அவரை உற்றுப் பார்த்தான்.

அவர் “எனக்கு பால்காரி.. உனக்கு டீக்கடைக்காரி.. ஆனா நான் ருசியெல்லாம் பாக்கல” என்றார்.

“தப்பு தப்பா பேசாதீங்க..” வேகவேகமாக நடக்க முயன்றான்..

“இரு தம்பி. வாசனைய பத்தி மாத்தி சொல்லியிருக்கீங்க. வாசனையை உணர்ந்தது அவருதான். உங்க மேலதான் கெட்ட வாசனை. நீங்க அவரை விட்டு விலகினதுக்கு காரணம் அவரு மேல வந்த வெறுப்பு. அந்த வெறுப்பைதான் நீங்க வாசனைன்னு தப்பா சொல்லறீங்க. வாசனைக்கு காரணமெல்லாம் கெடையாது.”

“நான் ஏன் வெறுக்கனும்?”

“என்ன தம்பி .. கொழந்த மாதிரி.. அவரு அந்த வாசனைக்கு காரணம் தேடியிருக்கலாம்.”

“அதனால..?”

“அதை நீங்க புரிஞ்சிருக்கலாம். அந்தரங்கத்துல தலையிடறாருன்னு வெறுப்பு வந்திருக்கலாம்.”

“அவரு இதப்பத்தி எங்கிட்ட பேசினதில்லை”

“அவரு எப்பவும் பேசினதில்லையே. குறிப்புல சொல்லியிருக்கலாம். உதாரணமா ஊருக்குள்ள எங்கேயும் போகாத மனுசன் டீக்கடைக்கு போனது. அது ஒரு சைகை. எச்சரிக்கை. ரண்டுப் பேருக்குமே. அதனாலதான் அவரு பேரை சொன்னப்ப அந்த பொம்பளை கோவப்பட்டது. அப்புறம் இந்த சாதாரணமா கெடைக்கிற செம்பருத்தி பூக்கள சாகறதுக்கு முன்னாடி பொட்டலமா மடிச்சு வச்சிருந்தது. அதுவும் ரண்டே ரண்டு பூக்களை. நீங்கதான் சரியா படிக்கலை. அவரை உங்க தோட்டத்துல பொதைச்சு உறுத்தலுக்கு புண்ணியம் தேடிக்கிட்டீங்க.”

“இருக்கலாம்.. நீங்க சொல்றது எல்லாமே சரி..” அவன் விடுவிடுவென்று நடந்தான். இவர் மூச்சு முட்ட பின்தொடர்ந்தார்.

“என் கூட வராதீங்க”

“அவருக்கு என்ன பதில்?”

“அது என்னோட அந்தரங்கம்.”

“இதுதான் பதிலா..?”

“ஆமா..”

“அவரோட ஆத்மா சாந்தியடையாது.”

“யாருக்கு வேணும் சாந்தி. அதெல்லாம் சும்மா. நம்மளை நாமளே ஏமாத்திக்கறது. தள்ளி வச்சவங்களுக்கு காரியம் செஞ்சு எலும்பு துண்டு படையல் செய்யற மாதிரி. அவரு வேற. நான் வேற…” அவன் நிறுத்தினான்.

உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டே தொடர்ந்தான்.

“ஆனா நீங்க வச்சிருக்கற செம்பருத்தி பூக்கள் நான் சம்பந்தப்பட்டதான்னு தெரியலை.”

“பின்ன?”

“ஒரு கனவு வந்ததுன்னு சொன்னேன் இல்லையா..?”

“ஆமா..”

“வளையல்.. செண்டு.. கடல் தண்ணின்னு..”

“ஆமா..”

“முகம் தெரியலைன்னு கூட சொன்னேனே..?”

“ஆமா..”

“ஒரு பெண்ணோட கை.. ஆனா அவரோட குரல்னு..”

“ஆமா.. அவரோட பொண்டாட்டியா இருக்கலாமுன்னு சொன்னீங்க”

“அப்ப அந்த பூக்களை பாத்தேன். கருகருன்னு நீள கூந்தல்ல அந்த ரண்டு செம்பருத்தி பூக்களை. கனவு அத்தோட முடிஞ்சது.” அவன் அதே வேகத்தில் நடந்துப் போனான்.

சட்டென்று திரும்பிப் பார்த்து கத்தினான். “அதனாலதான் சொல்றேன். அவரு வேற. நான் வேற. இல்ல.. நாம வேற.. அவரு நிஜ உலகத்துல இல்ல. பொண்டாட்டி நினைவுலயே வாழ்ந்துட்டாரு. அதனாலதான் மௌனியாயிட்டாரு. நான் அவரோட சமாதிக்கு பக்கத்துல வெறும் குழிய நோண்டி அந்தம்மாவுக்கும், புள்ளைக்கும் ஒன்னா சேத்தி சமாதி கட்டுவேன். ஏதோ, என்னால முடிஞ்சது.”

இவர் அந்த பூக்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

வேல்விழிமோகன்
9442304307
velvizhiimohan@gmail.com
கிருஷ்ணகிரி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.