இன்று அதிகம் பேசப்படுவது பருவநிலை மாற்றம்.
பருவநிலை மாற்றத்திற்கு காரணம் மக்களே.
அன்றைய கிராமங்களில் பசு, எருதுகளின் சாணத்தை வைக்கோலுடன் கலந்து வரட்டி தட்டுவார்கள். அதனைக் கொண்டு அடுப்பு எரிப்பார்கள். வரட்டி எரிந்து சாம்பலாகும் அவற்றைக் கொண்டு பாத்திரங்களை துலக்குவார்கள்.
மாடு, சாணம், உரம், வரட்டி, சாம்பல் என ஒன்றை ஒன்று சார்ந்திருந்தது. இன்று எல்லாம் இரசாயனப் பொருட்களால் பாத்திரங்களைத் துலக்குகின்றோம்.
ஆலம் விழுதுகள், வேலமரக் குச்சிக்களைக் கொண்டு பல்துலக்கி வந்தோம், இன்று இரசாயனக் கலவைகளைக் கையாளுகின்றோம். ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி‘ என்பது மறக்கடிக்கப்பட்டது.
மக்கள் கிராமங்களில் அடுப்பெரிக்க தங்களுக்கு சொந்தமான மரங்களில் இருந்து காய்ந்த விறகுகளை எடுப்பார்கள்; மெல்ல மரங்களை இழந்தனர்; கால மாற்றத்தினால் பொது வெளியில் உள்ள மரங்களை அழித்தனர்; மெல்ல மெல்ல சுய சார்பினை இழந்தனர்.
சுற்றுச்சூழல் மாறியது. மின்சாரம் அதிகமாக உபயோகிப்பதால் நிலக்கரி கொண்டு மின்சாரம் தயாரிக்கின்றோம். அதனால் சாம்பல் காற்றில் கலந்து மாசு உண்டாகின்றது. அணுப்பிளவைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதால் அணுக்கழிவுகள் உண்டாகின்றன.
குளிர்சாதனங்கள் உபயோகிப்பதால் வெப்பம் அதிகரிக்கின்றது. இவையெல்லம் தெரிந்தும் இவைகளை நாம் சற்று தவிர்ப்போம் என்று விடுவோமா?
வாகனங்கள் வெளியேற்றும் மாசு கொஞ்ச நஞ்சமா?
சற்றேனும் தவிர்க்க முடியுமா?
இவ்வாறு நாமே செய்யும் காரியங்கள் நமக்கே தீங்காய் வருகின்றது.
இவை ஆடம்பரமா, அத்யாவசியமா?
இரண்டும் கலந்துவிட்டன.
இவற்றை உணர்ந்து ஆடம்பரமென்று இவைகளைத் தவிர்க்க முடியுமா?
மின்சாதனக் கழிவுகள் கட்டுக்குள் இல்லை. அவற்றால் வரும் சூழ்நிலைக்கேடு அதிகம்.
நமக்கு மட்டும் சொந்தமா?
நாம் வாழ்வதற்கு மட்டும் இவ்வுலகம் சொந்தமன்று, இவ்வுலகில் இருக்கும் மற்ற எல்லா பெரிய, சிறிய உயிரினங்களுக்கும் உரிமையுண்டு.
ஆனால் மனிதன் தன்னைத்தவிர மற்றவை எல்லாம் தனக்காகப் படைக்கப்பட்டவை என்ற எண்ணம் கொண்டதால், தனக்குத்தான் வலி தெரியும் மற்றவைக்கு இல்லை என்ற மனோபாவம் வந்துவிட்டது.
இதனால் மக்கள் விலங்குகளை வேட்டையாடுவதில் ஆசை கொண்டனர். வீரத்தைக் காட்டவும் உண்பதிற்காகவும் விலங்குகளை அழித்தனர்.
இருப்பிட விரிவாக்கத்திற்காக காடுகளை அழித்தனர். மழை பெய்வது குறைந்தது. பசுமை வளம் குன்றியது.
மனிதத் தவறால் எண்ணற்ற உயிர்கள் இல்லாமல் போய் விட்டன. இன்றைய தலைமுறையினருக்கு எத்தனையோ உயிரினங்கள் தெரியாமல் போய் விட்டன. இந்நிலையை உணர்ந்தே பெரியோர்கள் கொல்லாமையை வலியுறுத்தி வந்தனர்.
திருவள்ளுவர் கொல்லாமையை உணர்த்தி
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று.
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.
என்று வலியுறுத்துகின்றார்.
திருமூலர் கொல்லாமையை வலியுறுத்தி
பொல்லா புலாலை நுகரும் புலையரை
எல்லாருங்காண வியமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின்
மல்லாக்கத் தள்ளிமறித்து வைப்பாரே
என்று விவரிக்கின்றார்.
வள்ளலாரும் தாவரங்கள் வாடினாலும் பொறுக்க மாட்டாதவராக இருந்தார்.
இவற்றினும் வேறுபட்டு தாம் நிலையானவன் என்ற நினைவில் சிலர் மனித வேட்டையிலும் ஈடுபட்டனர்.
தன் உயிர்ப் போன்றதே மற்றைய உயிரும் என்று மனிதன் எண்ணினால், வாழ்வியல் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எண்ணிப் பார்க்கவும்.
அவையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா?
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர் – 602024
கைபேசி: 9444410450