பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் என்ற இப்பாடல், திருவெம்பாவையின் இரண்டாவது பாடல் ஆகும்.
திருவெம்பாவை உலகில் ஒளிவடிவாக விளங்கும் இறைவனான சிவபெருமானின் மீது, திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரால் பாடப்பெற்றது.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருந்த போது திருவெம்பாவையைப் பாடினார்.
திருவெம்பாவை இரண்டாவது பாடலானது, பாவை நோன்பிற்காக கூட்டமாகச் செல்லும் பெண்கள், தூங்கிக் கொண்டிருக்கும் தங்களின் தோழியை எழுப்பும் போது, அவர்களிடையே நடைபெற்ற உரையாடலாக அமைந்துள்ளது.
இதில் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கும் தங்களின் தோழியை, இறைவனை மறந்து தூங்குவதாக கேலி செய்கின்றனர்.
தூங்கி விழித்தவளோ, கேலி செய்வதற்கு உரிய இடம் மற்றும் காலம் இதுவல்ல என்று மறுமொழி கூறுகிறாள்.
முழுமையான அர்ப்பணிப்புடன் இறைவனான சிவபெருமானிடத்து அன்பு கொண்டவர்களுக்கு, பரம்பொருள் திருவருளைத் தர விரைந்து அருகில் வந்து ஆட்கொள்வார் என்று பெண்கள் கூறுகின்றனர்.
நாம் இறைவனிடம் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை, திருவெம்பாவை இரண்டாம் பாடல் உணர்த்துகிறது.
இனி திருவெம்பாவை இரண்டாம் பாடலைக் காண்போம்.
திருவெம்பாவை பாடல் 2
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போதுஇப் போதுஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்
சீசீ இவையுஞ் சிலவோ? விளையாடி
ஏசும் இடமும் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்புஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய்
விளக்கம்
பாவை நோன்பிற்காக பெண்கள் கூட்டமாக செல்கின்றனர். தங்களின் தோழி ஒருத்தி பாவை நோன்பிற்கு வாராது, வீட்டிற்குள் தூக்கிக் கொண்டிருக்கிறாள்.
அவளை பெண்கள் “சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே (நேரிழையாய்), இரவும் பகலும் என்று எப்போதும் பேசி கொண்டிருக்கையில், பெரிய ஒளி வடிவினை உடையவனாகிய பரஞ்சோதியான இறைவனிடமே நான் எப்போதும் அன்பு செலுத்துவேன்’ என்று கூறுவாய்.
ஆனால் இப்போது நீ மலர்ப்படுக்கையின் மீது அன்பு செலுத்தி (இறைவனை மறந்து), இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்” என்று கேலியாகக் கூறி எழுப்புகின்றனர்.
உடனே உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தவள், சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணிந்திருக்கவில்லை.
நீங்களும்தான் அணிந்துள்ளீர்கள் என்பதைக் குறிக்கும் விதமாக “சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்களே (நேரிழையீர்), சீசீ இதென்ன விளையாட்டு?
என்னை கேலி செய்வதற்கான இடமும், நேரமும் இதுவல்ல.” என்று மறுமொழி கூறுகிறாள்.
இதனைக் கேட்ட பெண்கள் மனம் அமைதி பெற்று அவளிடம், “முழுமையான அர்ப்பணி உணர்வில்லாமல் சுயநலத்தோடு தேவர்கள் வணங்கியதால், அவர்களுக்கு இறைவனின் திருவடி அரிதானது.
உள்ளன்போடு முழுமையான அர்பணிப்பு உணர்வோடு இறைவனை நினைப்பவர்களுக்கு, திருவருள் புரிந்து ஆட்கொள்ள பரம்பொருள் விரைந்து அருகில் வருவார்.
இறைவன் ஞான ஒளியினை உடையவராக, எங்கும் நிறைந்தவராக, சிவலோகத்தின் தலைவராக, தில்லையில் சிற்றம்பலத்தினுள் ஆனந்தக் கூத்தராக எழுந்தருளி இருக்கிறார்.
நாம் யார்? எளியோரின் அன்புக்கு திருவருள் புரியும் இறைவனான சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். அப்பெருமானை வழிபட வா, என் தோழியே” என்கின்றனர்.
முழுஅர்ப்பணிப்பு உணர்வோடு உள்ளத்தில் அன்பு கொண்டு இறைவனை வழிபடுவதே இலட்சியம் என்ற மனமானது, சிலநேரங்களில் அதனை மறந்து மயங்கி மாயையில் சிக்குகிறது.
மாயையில் இருந்து விடுபட்டு மீண்டும் உள்ளன்போடு இறைவனை அடைய வேண்டும் என்பதையே, பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் என்ற இப்பாடல் உணர்த்துகிறது.