பாரத ரத்னா விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.
பாரத ரத்னா என்றால் பாரதத்தின் ரத்தினம் என்று பொருள். கலை, இலக்கியம், அறிவியல் மேம்பாட்டிற்காக பணியாற்றியவர்கள், பொதுமக்கள் மேம்பாட்டிற்கு சீரிய பணியாற்றியவர்கள், பிற துறைகளில் திறம்பட செயலாற்றியவர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதினை பெறுபவர்களுக்கு பணபலன் ஏதும் வழங்கப்படுவதில்லை.விதி எண் 18 (1)-ன்படி இவ்விருதினைப் பெற்றோர் தங்கள் பெயருக்கு முன்பும், பின்பும் பாரத ரத்னா அடைமொழியை பயன்படுக்கூடாது.
இதுவரை நான்கு பெண்கள் உட்பட மொத்தம் 45 நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னாவின் வரலாறு
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களால் இவ்விருது ஜனவரி 2, 1954 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக தேசிய சேவை செய்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும் என கொள்கை வகுக்கப்பட்டது.
ஒரு ஆண்டில் மூன்றுபேருக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டது.
இந்தியப் பிரதமரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய குடியரசுத் தலைவர் இவ்விருதினை பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு வழங்குவார்.
அமரர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக கொள்கை வகுக்கப்படவில்லை. பின் 1966-ல் அமர்களுக்கும் இவ்விருது வழங்கலாம் என விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
திருத்திய விதியின்படி முதன்முதலில் 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு அவரின் மறைவுக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
இது வரையிலும் மொத்தம் 12 அமரர் பெருமக்கள் பல்வேறு துறைகளில் தேசிய சேவை ஆற்றியதற்காக பாரத ரத்னாவைப் பெற்றுள்ளனர்.
1992-ல் சுபாஷ் சந்திர போசுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. பின் அவரின் இறப்பு தன்மை குறித்த சர்ச்சையால் விலக்கப்பட்டது.
இந்தியர்களுக்காக மட்டுமான விருது என குறிப்பிடப்படாத போதிலும் இவ்விருதினை 1980-ல் இந்திய குடியுரிமை பெற்ற அன்னை தெரசாவுக்கும், 1987-ல் பாகிஸ்தானைச் சார்ந்த கான் அப்துல் காபர் கான் மற்றும் 1990-ல் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த நெல்சன் மண்டேலா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2011-ல் நவம்பரில் பிற துறைகளில் தேசிய சாதனை ஆற்றியவர்களும் இவ்விருதினைப் பெறலாம் என விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன் பின் 2014-ல் இந்திய துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை பெற்ற முதல் விளையாட்டு வீரர் மற்றும் இளவயதினர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
பாரத ரத்னாவிற்கான விதிமுறைகள்
இவ்விருதானது இனம், மதம், பாலினம், பதவி என வேறுபாடின்றி மிகச்சிறந்த தேசிய சேவை செய்தவர்களைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
இவ்விருதினைப் பெறுபவர்கள் இந்திய குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினைப் பெறுவர்.
இவ்விருதினைப் பெறுபவர் தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும் பாரத ரத்னா என்ற அடைமொழியைப் பயன்படுத்தக்கூடாது.
குடியரசுத்தலைவரால் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் அல்லது பாரத ரத்னா விருது பெற்றவர் என்று குறிப்பிடலாம். இவ்விருதினைப் பெறுபவர்கள் இந்தியாவில் மதிப்பு மிக்கவர்களின் பட்டியலில் 7வது மதிப்பு மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இவ்விருதானது முதலில் அறிவிக்கப்பட்டு, பின் இந்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அரசாங்க உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் அரசிதழில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.
அவ்வாறு அரசிதழில் வெளியிடப்படவில்லை எனில் அதிகாரப்பூர்வமாக விருதானது அங்கரீக்கப்படவில்லை எனக் கருதப்படும்.
இவ்விருதானது திரும்பப் பெற வேண்டும் எனில் அரசிதழில் பதிவு செய்யப்பட்ட குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். விருதினை திருப்பி அளிப்பவர்கள் தங்கள் பதக்கத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்.
மேலும் அரசிதழில் இருந்து திரும்ப அளிப்பவரின் பெயர் நீக்கப்பட வேண்டும். 1977 ஜூலை முதல் 1980 ஜனவரி வரையிலும் 1992-1995 வரையிலும் இவ்விருது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
விருதின் அமைப்பு
இவ்விருதிற்கான முதல் வரையறையில் பதக்கத்தின் முன் பக்கத்தில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச்சின்னமும் பாரத ரத்னா என தேவ நாகரிக மொழியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும்.
பதக்கத்தின் பின்பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
தற்போதைய உள்ள பதக்கம் பிளாட்டினம் விளிம்பிட்ட அரசமர இலை வடிவில் 59 மி.மீ உயரத்திலும், 48 மி.மீ அகலத்திலும், 3.2 மி.மீ தடிமனிலும் உள்ளது.
இதனுள் பிளாட்டினத்தினால் செய்யப்பட்ட சூரியனின் படைப்புருவம் காணப்படுகிறது. அதன் கீழே தேவ நாகரிக மொழியில் பாரத ரத்னா என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
பின்பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் இருக்க வேண்டும் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. 2 அங்குல அகலமுடைய வெள்ளை ரிப்பனில் இப்பதக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
வெள்ளி முலாம் அலங்காரம் துலக்கப்பட்ட வெண்கலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இப்பதக்கமானது கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் மின்டில் தயார் செய்யப்படுகிறது.
முதன் முதலில் இவ்விருது சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், இராஜகோபாலச்சாரியார், சர்.சி.வி. ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதினைப் பெற்ற மிக இளவயதினர் சச்சின் டெண்டுல்கர் (40) ஆவார். மிக அதிக வயதினர் டி.கே. கார்வே (100 வயது) ஆவார்.
இவ்விருதினைப் பெற்ற அமரர்களில் இள வயதினர் ராஜூவ் காந்தி (47) ஆவார். மிக அதிக வயதினர் வல்லபாய் படேல் (116) ஆவார்.
பாரத ரத்னா தமிழர்கள்
சி. ராஜகோபாலாச்சாரி
சி. வி. இராமன்
சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்
காமராசர்
எம். ஜி. இராமச்சந்திரன்
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி
சி. சுப்பிரமணியம்
ஆகியோர் பாரத ரத்னா பெற்ற தமிழர்களாகும்.
– வ.முனீஸ்வரன்
Comments
“பாரத ரத்னா விருது” அதற்கு 7 மறுமொழிகள்