பாரிஜாதம் – கதை

கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.

இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன.

கடல் அலைகளின் வேகம் கட்டு மரங்களையும் படகுகளையும் அள்ளிக் கொண்டு வந்து குடியிருப்பு பகுதிகளில் வீசியது.

தரமற்ற கட்டிடங்களின் சுவர்கள் சரிந்தன. இரவெல்லாம் கோரத்தாண்டவம் ஆடிய புயல் ஒரு வழியாக அதிகாலை நாலரை மணிக்கு எல்லாம் வெற்றி கண்ட களைப்பில் ஓய்ந்து போனது.

பொழுது விடிந்ததும் ஊரெல்லாம் ஒரே கூக்குரல்; சலசலப்பு. உறவினர் உற்றார் நண்பர்கள் அனைவரும் ஊருக்குள் பாதிப்படைந்தவர்களையும் ஈடுபாடுகளில் சிக்கியவர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தனர்.

விஷயம் அறிந்து சமூகத் தொண்டு ஆர்வலர்களும் வந்து சேர்ந்து தங்கள் பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.

இடுப்பாடுகளில் சிக்கியவர்களை சமூக ஆர்வலர்கள் மீட்டெடுத்துக் கொண்டிருந்தனர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக மீட்பு பணி நிறைவடையும் நேரம்.

கௌரி அமைதியாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலை நோக்கியவாறு நின்று கொண்டிருந்தாள்.

வெக்களித்த வானம் கடல் போல் காட்சியளிக்க, மாசு மருவற்ற நீலநிற வானத்தில் வெண்மேகங்கள் பல உருவங்களாய் பிறப்பெடுத்து உலா வந்து கொண்டிருக்க, அதன் நகர்வுகள் நிழல்களாய் பிரதிபலித்தன.

கௌரியின் கண்கள் தூரத்திலிருந்து கிட்ட பார்வைக்கு மாறின.

எப்போதும் அழகாய் தோன்றும் கடல் அலைகளில் இன்று பல கம்பெனிகள் வெளியிட்டிருந்த நெகிழி தாள்கள் எல்லாம் ஒரே இடத்தில் சங்கமித்து கலந்துரையாடல் நடத்திக் கொண்டிருந்ததைக் கண்டதும், ‘தன்னால் இதனைத் தடுக்க இயலவில்லையே’ என்று எண்ணி கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி.

எங்கோ தூரத்தில் ஒரு முனங்கல் குரல் கேட்க காதுகளை கூர்மையாக்கினாள். சுற்றும் முற்றும் கௌரியின் கண்கள் ஊடுருவி தேடியபோது முனங்கல் சத்தம் எப்போதோ ஒருமுறை கேட்டது.

முனங்கல் சத்தம் வரும் திசையை நோக்கி நடந்தாள். சிறிது தூரத்தில் ஒரு கூரை வீட்டின் மீது பெரிய அடர்த்தியான மரம் சாய்ந்து கிடந்தது.

வீட்டின் சுவர் சாய்ந்து கூரை சரிந்து கிடந்தது. அந்த இடிபாடுகளுக்கு இடையில் இருந்து தான் அந்த குரல் ஒலித்தது.

கௌரி கூச்சலிட்டாள்.

“ஓடி வாங்க… ஓடி வாங்க… இங்கே ஏதோ சத்தம் கேட்குது ஓடி வாங்க …”

முதலில் கௌரின் தோழி ஜெயந்தி ஓடி வந்தாள். பிறகு கௌரியின் மீட்பு குழுவில் உள்ள ஆண்களும் ஓடி வந்தனர்.

ஓடி வந்தவர்கள் “என்ன? ஏன் சத்தம் போட்டீங்க?” என்று கேட்டனர்.

“இங்கே… இங்கே …தான் ஏதோ சத்தம் கேட்குது” என்றாள் கௌரி.

ஆர்வலர்கள் இறங்கி ஒவ்வொன்றாக அப்புறப்படுத்த இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தான் ஒரு இளைஞன்.

ஆர்வலர்கள் அவனை பக்குவமாக மீட்டெடுத்து கட்டிலின் மீது கொண்டு வந்து படுக்க வைத்தனர்.

ஜெயந்தி முதல் உதவி பெட்டியுடன் வந்து பஞ்சை தண்ணீரில் நனைத்து அவன் உடலில் அடிபட்ட காயங்களை சுத்தம் செய்ய, கௌரி அவன் சட்டையை அகற்றினாள்.

24 வயது மதிக்கத்தக்க இளைஞன். சுருட்டை முடி, மாநிறம், கட்டு மஸ்தான உடல் கட்டு. அவன் இடது புற மார்பகத்தில் ‘சௌரி’ என்று பச்சை குத்தி இருந்தது.

அவன் சட்டை பாக்கெட்டில் மொபைல். 1300 ரூபாய் பணம் இருந்தது. அவன் கழுத்தில் ‘எஸ்.ஆர்.’ என்று பொறிக்கப்பட்ட ஒரு செயின் கிடந்தது.

அனைத்தையும் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துவிட்டு கழுத்தில் கிடந்த செயினை கழட்டினாள் கௌரி. அப்போதுதான் கௌரி தெரிந்தது இளைஞனின் கழுத்தில் ஏதோ குத்தி இருந்தது.

பக்கத்தில் இருந்தவர்களிடம் இளைஞனைப் பற்றி விசாரித்த போது ‘அவன் ஒரு அனாதை என்பதும் அவன் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க சென்று வருவான் என்றும் தனிமையில் வாழ்ந்து வருகிறான்’ என்பதும் தெரிய வந்தது.

அதற்குள் செய்தி தெரிந்து ஆம்புலன்ஸ் வந்து விட, ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் அவனை அதில் ஏற்றினர். அவனின் நண்பர்கள் இரண்டு பேர் ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டனர்.

தன்னை மறந்து கௌரியின் கால்கள் ஆம்புலன்ஸில் ஏற ஜெயந்தி ஓடி வந்தாள். “கௌரி… கௌரி … வாடி நாம புறப்படலாம்”

“இல்லடி நீங்க புறப்படுங்க. பாவம் அந்தப் பையன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறான். என்ன ஆச்சு தெரியல. இப்படியே விட்டுட்டு வந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது. நான் கொண்டு போய் ஜிஹெச்சில் அட்மிஷன் போட்டுட்டு அவன் சுய நினைவுக்கு திரும்பியதும் அவனின் பொருட்களை எல்லாம் அவனிடம் ஒப்படைத்து விட்டு நான் நேரா திருவண்ணாமலைக்கு வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறி கொண்டாள்.

அந்த வாலிபன் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். 24 மணி நேரத்திற்கு பிறகு தான் சுயநினைவு திரும்பும் என்று சொல்லி இருந்தார்கள்.

பொழுது சாயத் தொடங்கியது. அதற்கு மேல் கௌரிக்கு இருப்பு கொள்ளவில்லை. மதில் மேல் பூனையாய் தவித்தாள்.

பிறகு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாய் எழுந்து சென்று துணைக்கு வந்திருந்த நண்பர்களிடம், அவனின் உடைமைகளை சரி பார்த்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, அவனுக்கு சுய நினைவு வந்ததும் தனக்கு தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, கிளம்பும் முன் அவன் செல்போனிலிருந்து தன் செல்லுக்கு மிஸ்டு கால் ஒன்றை கொடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

இரண்டு நாட்கள் இரண்டு வருடங்களாய் நகர்ந்தன. அவன் நினைவு ஏனோ அவள் மனதை விட்டு அகலாமல் நின்று கொண்டிருந்தது. அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

‘ஏன் நம்மளிடம் தான் அவன் நம்பர் இருக்கிறதே. நாமே ஏன் அவனுக்கு போன் செய்து கேட்கக் கூடாது’ என்று எண்ணி கௌரி செல்போனை தடவி உயிர்ப்பித்தாள்.

போனில் அவன் நம்பரில் இருந்து மெசேஜ் வந்து இருந்தது.

‘வணக்கம் மேடம். நான் சௌரிராஜன். பரவாயில்லை இப்போது நான் நலமாக இருக்கிறேன். என் தொண்டையில் ஏற்பட்ட காயத்தினால் என்னால் பேச முடியவில்லை. அதனால் தான் மெசேஜ் அனுப்புகிறேன். என் நண்பர்கள் சொன்னார்கள் நீங்கள் தான் மிகவும் சிரமப்பட்டீர்கள் என்று. மிக்க நன்றி மேடம் உங்கள் உதவிக்கு” மெசேஜை கண்டதும் கௌரியின் முகம் மலர்ந்தது.

பதில் மெசேஜ் செய்தாள்.

‘சௌரிராஜன் உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கைக்கு நம்பிக்கை தான் முக்கியம். உங்களுக்கு நிச்சயம் குரல் வந்துடும். எதுக்கும் கவலைப்படாதீங்க. நான் இருக்கிறேன். தைரியமா இருங்க. சரியா!’

பதில் மெசேஜ் சௌரிராஜனிடமிருந்து உடனே வந்தது.

‘உங்கள் மெசேஜை கண்டேன். யாருமே இல்லாத எனக்கு நான் இருக்கிறேன் என்ற வார்த்தை எனக்கு ஆறுதலாக இருந்தது’ என்று.

கௌரி மீண்டும் பதில் அனுப்பினாள்.

‘ஓ …சாரி ..சாரி.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு’ என்று. அவளின் வாய் தான் சொன்னது மனம் சொல்லவில்லை.

‘மார்பில் பச்சை குத்தி இருந்த சவுரி என்ற பெயர் கௌரி ஆக மாறக் கூடாதா’ என்று கௌரி நினைத்துக் கொண்டு இருக்கையில் செல்போன் ஒலித்தது.

கௌரி போனை எடுத்து “ஹலோ” என்றாள்.

மறுமுனையில் ஜெயந்தி “கௌரி நம்மளுக்கு அடுத்த அழைப்பு வந்துருச்சு.”

“என்னடி சொல்ற?”

“ஆமாண்டி நம்ம குழு உடனே கிளம்பி திருவனந்தபுரத்துக்கு போகணும். நீ ரெடியா இரு. நான் நம்ப டீம்மோட அங்க வந்துடறேன் சேர்ந்து போயிடலாம்” என்று சொல்ல போன் கட் ஆனது.

கௌரி சௌந்தர்ராஜன் நினைவை துண்டித்து திருவனந்தபுரத்தைத் தொடர்பு கொண்டாள்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.