பாலினப் பாரபட்சங்கள் – கவிதை

ஆண்மகவு
அடுத்தடுத்து பிறந்தாலும்
இரு மடங்காகும் ஆனந்தம்…

அடுத்தடுத்த
பெண்மகவு பிறந்திடில்
சலிப்பைத் தரும்…

உணர்வு மாற்றத்தில்
உதயமாகும்
பாலினப்
பாரபட்சங்களுக்கு
வேர் பிடிக்கும்
இச்சமூகம்…

தொழில்நுட்பம்
வளர்ச்சி பெற்ற
சமுதாயத்தில்
இன்னமும் மாறாது
கிடக்கும்
சடங்கு சம்பிரதாயங்களை
பெண்ணிற்கு மட்டுமே
கடிவாளம் இடும்
இச்சமூகம்…

குரல் ஓங்கும்
ஆணிற்குக் கம்பீரம்
எனப் பெயராம்…

குரல் ஓங்கும்
பெண்ணிற்கு
அதிகாரத் திமிரென
அடையாளம் இடும்
இச்சமூகம்…

மெத்தப் படித்தவன்
அறிவாளி எனும் போது
மெத்தப் படித்தவள்
ஆணவக்காரி என
முத்திரை பதிக்கும்
இச்சமூகம்…

பெற்றோரைப் பேணிக்
காப்பது ஆணின் கடமை
அவர்தம் பெருமையை மட்டும் காப்பது
பெண்ணின் கடமை
சட்டமிடும் இச்சமூகம்…

கரண்டி பிடித்த
கரங்கள் இன்று
கணினி பிடித்து
முன்னேற்றம் காணினும்
பாரபட்ச முகமூடி
தரித்த
இச்சமூகத்தில்
கற்பு நெறிகளும்
கட்டுப்பாடு முறைகளும்
இரு பாலினத்திற்கும்
பொது உடைமை
ஆக்கப்படும்போது தான்
பெண்கள் தினம்
மெய்ப்படும்!

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: