திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும் பத்மாவும்.
“பத்மா எனக்கு நம்மபொண்ணு சவிதாவை நினைச்சா பயமாயிருக்கு,”
சொன்ன கணவனை சிரித்தபடி நோக்கினாள் பத்மா.
“என்ன சொல்றீங்க? பொண்ணு கல்யாணம் ஆகி பிரியப்போறா, வருத்தமாயிருக்குன்னு சொன்னா பரவாயில்லை, அதவிட்டுட்டு பயமாயிருக்குங்கிறீங்க.”
“அந்த அர்த்தத்துல சொல்லல, பத்மா நீ அதிகம் படிக்காதவ. என்னோட கோபதாபங்களுக்கு அடங்கி இருந்த.
இந்த குடும்பம் இந்தளவுக்கு உயர்ந்ததுக்கு நீதான் முக்கிய காரணம். அடக்கம், பதவிசு இதுதான் உன்னோட குணமாயிருந்தது.
ஆனா நம்ம சவி அதிகம் படிச்சிருக்கா; கை நிறைய சம்பாதிக்கிறா; சொந்த கால்ல நிக்கறோம்ன்றதால, குடும்பத்துல அனுசரணையா இல்லாம போயி…”
சொல்லிக்கொண்டே சென்ற சேகரை இடை மறித்தாள் அங்கு வந்த நின்ற சவிதா.
“என்னப்பா, சொல்ல வறீங்க, நான் அடங்காத பொண்ணு அப்படின்றீங்களா?”
சிரித்துக் கொண்டே கேட்ட சவிதாவைப் பார்த்து தலையாட்டி மறுத்தார் சேகர்.
“இல்லடா கண்ணு”
“உங்களோட பயம் எனக்கு புரியுதுப்பா”, சொல்லிக் கொண்டே அப்பாவின் அருகே சென்று அமர்ந்து மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள் சவிதா.
“அம்மா அடங்கி கிடக்கலப்பா. அமைதியா இருந்தாங்க. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதர் நீங்க.
ஆபிஸ் முடிஞ்சு அடுத்த நொடி வீட்லதான் இருப்பீங்க; எல்லா நேரத்தையும் குடும்பத்துக்காகவே செலவு பண்ணவர் நீங்க,
உங்க கோபம் மட்டும் தான் சின்ன குறை.
அதைக்கூட அம்மா எப்படி சொல்வாங்கன்னா, ‘வெளில ஆபிஸ்ல வர்ற கோபத்தை , டென்ஷனை நம்மகிட்டதான காண்பிக்க முடியும், அந்த கோபத்துக்கு நாம ஒரு வடிகாலா இருப்போமே! நமக்காக எவ்வளவோ செய்றார், நம்மால இதைச் செய்ய முடியாதாம்பாங்க.”
மகளின் கையைப்பற்றினார் சேகர்.
“அதாம்மா உங்கம்மாவோட குணம், நான் என்ன சொல்ல வரேன்னு இப்ப புரியுதா?”
சின்ன சிரிப்போடு அப்பாவை நோக்கினாள் சவிதா.
“அம்மாவை மாதிரி நீ இருப்பியான்னு கேட்க வரீங்க, இல்ல? எனக்கு புரியுதுப்பா, உங்க ஃபீலிங்க்ஸ் எல்லாம்.
என்னோட படிப்பு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கே தவிர தலைக்கனத்தை கொடுக்கல.
குடும்பத்துக்காக, நமக்காக சம்பாதிக்கிறோம்ன்னு நினைச்சா ஆனந்தம்தான் வருமே தவிர ஆணவம் வராதுப்பா.
எல்லோரும் சொல்ற ஒரே வசனம், முன்பின் பழக்கம் இல்லாதவரா இருந்தாலும் தெரியாம கால்பட்டா ஸாரி கேட்கிறோம்,
காலம் முழுக்க வாழப் போற இடத்துல அனுசரிச்சுப் போறதுல தப்பில்ல, என்னோட கருத்தும் இதுதான்ப்பா.
வாழ்க்கையில் எல்லா நேரமும் சிரிச்சிட்டு இருக்க முடியாது. அதேபோல அழுதுட்டும் இருக்க முடியாது.
எல்லா சுகதுக்கத்தையும் அனுபவிச்சித்தான் ஆகணும். முகமூடி போட்டு வாழ முடியாது.
கணவனோ இல்ல மனைவியோ ஒருத்தர்கிட்ட இருக்கிற குறைய பெரிசுபடுத்தாம அவங்களோட நிறையை ரசித்து வாழறதுதான் வாழ்க்கையோட பால பாடம் அப்படின்னு என்னோட பார்வையில நினைக்கிறேம்பா, இது சரிதானேப்பா?”
கேட்ட சவிதாவை பூரிப்பாய் பார்த்த சேகர்,
“வாழ்க்கையோட பால பாடம் பற்றி எனக்கும் கத்துக் கொடுத்துட்டம்மா. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் இல்ல. இல்ல சுப்பனி நீ” சொல்லிவிட்டு மகிழ்வோடு சிரித்தார் சேகர்.
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!