யாவும் இயந்திரமாய்… கவிதை

ஐந்து தேசமாவது கொடு…
இல்லையெனில்
ஐந்து ஊராகிலும் தா…
அதுவும் இல்லையெனில்
ஐந்து வீடாவது வழங்கு…

கைப்பிடி மண் கூட
கனவிலும் கிடையாது என்றது…
கௌரவக் கூட்டம்!

பரிதவித்து நின்ற
பாண்டவர் போல்
விரிந்து கொண்டிருக்கும்
கார்ப்பரேட் கூடங்களால்
தொன்மை சுருங்கி
மண்ணாவது திண்ணம் …

யாவையும் இழந்துவிட்ட
பின்னரும் யாதொன்றையோ
எதிர்பார்த்து காய்
நகர்த்திக் கொண்டிருக்கிறது
கச்சிதமாகவே அது…

தாய் வீடு என
அடைக்கலம் கொடுத்தவைகள்
மாறி அவைகளாகவே
புலம்பெயரப் போகிறன்றன
யாவும் ஓர்நாள் எங்கெங்கோ…

இயந்திரமயமான ஓட்டத்தில்
வைத்திருக்கும் வாகனத்திற்கு
ஒரு லிட்டரும்
இவனுக்கும் ஏதோ ஒன்றைக்
கால் அரை முழு அளவில்
அமைத்துக் கொடுக்க
முனைகிறது காலம்…

புல் பூண்டிற்கும்
பொருத்தமில்லாத தேசமாய்
மாற்றி விட்டு
என்னதான் பெருமை
கொள்ளப் போகிறதோ மானுடம்?

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.